ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை
Published on

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.

மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com