என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanni Arasu"

    • ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
    • தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார்.

    சென்னை :

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எச்சரிக்கை

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க.வில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால்,

    அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே தில்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.

    "அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்" என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார். இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது.

    எடப்பாடி பழனிசாமி அவர்களை தடுமாற வைத்து, பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. (பீகார் போல)

    ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.

    தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக

    அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது.

    நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடிகர் விஜய்யை ஏற்றுக்கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தவெகவில் இணைவதை காட்டுகிறது என்று கூறியுள்ளார். 

    • விஜயை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
    • தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்தனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.

    இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் உயர்நீதிமன்றத்தை நாடியதை விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

    எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார்.

    இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.

    இந்த சூழலில், சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை.

    அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.

    இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா?" என்று தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
    • கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

    சினிமா, கலைத்துறையில் சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, சாய்பல்லவி, அனிருத் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கலைமாமணிக்கு பதிலாக கொலைமாமணி விருது அளிக்கலாம் என சமூக வலைத்தள பயனர்கள் காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.

    இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன்,

    பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.

    இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி. பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் "வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்" என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு.

    இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

    அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது.
    • அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும்.

    மயிலாப்பூர்:

    சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்து கடவுள் ராமன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கருத்தரங்கில் வன்னி அரசு பேசியதாவது:-

    தவம் செய்த சம்பூகன் தாழ்ந்த சாதி என்பதால் ராமன் அவரை கொன்று விட்டார். பார்ப்பனர்களுக்காக கொலை செய்தவர் ராமன்.

    ஆணவ படுகொலைகளுக்கு பின்னால் ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு வர்ணாசன கோட்பாடு. அந்த கோட்பாட்டை நாம் அழித்தொழிக்க வேண்டும். அதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார்கள்... இந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. இந்து மதத்தில் எப்போதுமே சமூக நீதி இல்லை. ஆகவே இந்து மதத்திற்கு எதிராக மதம் மாறுகிறார்.

    ராமன் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுக்காக இந்த படுகொலை செய்கிறார். ராமதாஸ் பார்ப்பனர் அல்ல... ஆனால் பார்ப்பனர்களுடைய இந்த கருத்தியலுக்காக படுகொலை செய்கிறார். படுகொலை செய்ய தூண்டுகிறார். இரண்டும் ஒன்று தான். ராமனும் ஒன்று தான்.. ராமதாசும் ஒன்றுதான். ராமதாசுடன் இதை நான் முடிக்கவில்லை.

    இதன் தொடர்ச்சி இன்றைக்கு நிறைய இருப்பதால் இந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றார். 

    • மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
    • அதிமுகவும் தவெகவும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.

    மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார். இந்நிலையில், த.வெ.க மாநாடு லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " தவெக இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்து விட்டார்கள். முதல் மாநாட்டை விட கூடுதல் நேரம் எடுத்து பேசியுள்ளார் விஜய் அவர்கள்.

    இந்த மாநாட்டிலும் கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி விட்டார். கொள்கை எதிரி பாஜக குறித்து திரு.விஜய் பேசும் போது, பொத்தாம் பொதுவாக பேசுகிறாரே தவிர, குறிப்பாக பேசவில்லை. தற்போது கொண்டுவந்துள்ள சனநாயக விரோத மசோதாவான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆளுனர் நீக்குவதற்கு அதிகாரம் குறித்து வாயே திறக்கவில்லை. பொய் வழக்கு போட்டு 30 நாட்கள் சிறைப்படுத்தி சனநாயகத்தை அச்சுறுத்தும் அம்மசோதா குறித்து திரு.விஜய் வாய் திறக்காதது ஏன்?

    தேர்தல் ஆணையத்தின் வழி வாக்குகளை திருடும் ஆபத்து குறித்து பேசாமல் போனது ஏன்?

    பேசிய அரை மணிநேத்துக்கும் மேலான உரையில், சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பேசாதது ஏனோ?

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் குறித்து பேசிய திரு.விஜய் அவர்கள்

    மறந்தும் கூட, துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ?

    திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு சொல்லும் விஜய் அவர்கள், அதற்கான ஆதாரத்தை வெளியிடாமல், திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன் மொழிந்ததை வழிமொழிந்ததன் மூலம் அதிமுகவும் தவெகவும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.

    அந்த கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், அதிமுக- பாஜக கூட்டணியின் மறைமுக கூட்டணி பார்ட்னராகவே விஜய் செயல்படுகிறார் என்பது தான் இந்த மாநாட்டு செய்தி. மற்றபடி இந்த மாநாடு திரு.விஜய் அவர்களின்

    லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான்" என்று பதிவிட்டுள்ளார். 

    • போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.

    இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

    இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.

    போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக வழக்கறிஞர் நிலவுமொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

    சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.

    நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம்.
    • 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் நரேந்திர மோடி பங்கேற்றார். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதில் எந்த அரசியலும் இல்லை.

    தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும் நாகரீக அரசியலாகவுமே விடுதலைச்சிறுத்தைகள் பார்க்கிறோம். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "பிரதமர் மேடையில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை" என்று சொல்லியிருக்கிறார்.

    இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் சனாதன எதிர்ப்பில் சமரசம் செய்யவே மாட்டோம். சனாதனத்தை நிறுவ முயலும் பாஜகவுடன் அரசியல் ரீதியான எந்த உறவும் வைக்க மாட்டோம் என எமது தலைவர் பிரகடனப்படுத்திய பிறகும் ஒருவித குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற சூழலிலே அதிமுக இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார்.

    எந்த மேடையில் நின்றாலும் சிறுத்தை சிறுத்தையாகவே களமாடுவோம். 2026 ல் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத அளவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதி.

    தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்துவரும் அதிமுக- பாஜகவை ஒரு போதும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு
    • எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டம் சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது, திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

    மேலும், அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்றார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்.

    அதிமுக ஆட்சி காலத்திலும் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது" என்றார்.

    • முருக பக்தர்கள் மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.
    • முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?

    "ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதிச்செயலைக் கூட புரிந்து கொள்ளாமல் அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்" என விசிக துணை பொதுச்செயலாளர்

    வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சூரனை வதம் செய்த முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா என மதுரை மாவட்டம் முழுக்க இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

    இந்த மாநாட்டில் தான் திராவிட இயக்கமாய் உருவான அதிமுக பங்கேற்றுள்ளது.

    ஆரியத்தின் ஆபத்து குறித்தும் அதை அழித்தொழிக்க வேண்டிய தேவை குறித்தும் அறிஞர் அண்ணா அவர்கள் எச்சரித்துள்ளார்.

    அந்த பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான இயக்கம் இப்படி ஆரியத்திடம் மண்டியிடுவது அறிஞர் அண்ணாவுக்கு மட்டும் செய்யக்கூடிய துரோகமல்ல; தமிழ்நாட்டுக்கே செய்யக்கூடிய துரோகமாகும்.

    முருகனை வழிபடுவது என்பது வேறு; ஆனால் முருகன் பெயரை பயன்படுத்தி தமிழ்நாட்டை பலியிடுவதை எப்படி ஆதரிக்க முடியும்?

    RSS அமைப்பின் சதிச்செயலை கூட புரிந்து கொள்ளாமல், அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இரண்டகம் செய்யும் அதிமுகவை தமிழ்நாடும் மக்களும் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.
    • தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வட இந்தியாவில் ராமரை வைத்து அரசியல் செய்த பாஜக, ஒடிசாவில் ராமருக்கு பதிலாக ஜெய் ஜெகநாத் என முழங்கி பிழைப்புவாதம் செய்தது.

    கேரளாவில் நாராயண குருவிடம் மண்டியிட்ட பாஜக தமிழ்நாட்டில் முருகனிடம் சரணாகதி அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் ராமனை விட முருகனே தம்மை காப்பாற்றுவார் என நம்புகிறது.

    அதனால் தான் முருக பக்தர்கள் மாநாட்டை பாஜக ஒருங்கிணைக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் எந்த உரிமைகளுக்கும் மாநாடோ பொதுக்கூட்டமோ நடத்தாத பாஜக, ஓட்டுக்காக மதவெறி அரசியலை முன்னெடுக்கிறது.

    தமிழ்நாட்டு மக்கள் முருகனை வணங்குவார்கள். ஆனால், பாஜகவின் மதவாதத்துக்கு தலைவணங்க மாட்டார்கள். முருகனே பாஜகவில் சேர்ந்தாலும் பாஜகவை காப்பாற்ற முடியாது.

    முருகன் மீது பாஜகவுக்கு உண்மையலேயே பக்தி இருந்தால், முருகன் சாதி மறுப்பு திருமணம் செய்தது போல,

    சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்து தீர்மானம் இயற்ற தயாரா?

    சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோரை ஆணவப்படுகொலை செய்யும் பயங்கரவாதத்தை கண்டிக்கத்தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.



    • ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
    • ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.

    திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

    அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.

    மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.

    ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.

    இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.

    நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?

    அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?

    தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.

    ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற

    புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    ×