search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LTTE"

    • நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே?
    • துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே.

    சென்னை:

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவது போல கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியானது. இது தொடர்பாகவும், இறுதிக் கட்ட போரின் போது என்ன நடந்தது? என்பது பற்றியும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் சங்கீதன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    எங்கள் தேசத்தின் மகள் துவாரகா. அவரது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் பொட்டு அம்மனை பார்த்து அண்ணன் (பிரபாகரன்) சொல்கிறார். நானோ பொட்டோ குடும்பத்தை வெளியேற்றும் முடிவுக்கு போக முடியாது என்று கூறினார். அதுவே அவரது இறுதி முடிவாகவும் இருந்தது.

    அப்போது எங்களை போன்றவர்கள் எல்லாம் அங்கு இருந்தோம். நாங்கள் தப்பி வந்திருக்கும் சூழலில் பிரபாகரனின் குடும்பமும் தப்பி வந்திருக்க வாய்ப்புள்ளது தானே? என்கிற கேள்வியும் இந்த நேரத்தில் எழலாம்.

    ராணுவ பிடிக்கு வெளியில் இருந்த முக்கிய தளபதிகள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலரும் மக்களோடு மக்களாக வெளியேறியுள்ளனர். ஆனால் மக்களோடு மக்களாக அண்ணியோ, துவாரகாவோ வர இயலாது.

    இலங்கையில் நடைபெற்ற சண்டையின் போதே வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால் யார்-யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? என்கிற விவரங்கள் முன் கூட்டியே எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதற்காக சிறப்பு போன்களும் கொடுக்கப்பட்டிருந்தன.

    வெளிநாடுகளுக்கு சென்று சேர்ந்த பின்னரே பலர் அந்த போனை கைவிட்டு உள்ளனர். இன்றைக்கும் சில தொடர்புகளுக்காக சில போன்கள் காத்திருக்கின்றன. போன் நம்பர்களும் அப்படியே உள்ளன. துவாரகா வெளியில் வந்திருந்தால் நிச்சயமாக அது போன்ற தொடர்பு மூலமாக சென்றிருப்பார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

    துவாரகா தப்பி வந்திருந்தால் அவரது பெரியம்மா விடமாவது தொடர்பு கொண்டு பேசி இருப்பார் தானே. மூத்த பெண் போராளிகளிடமாவது தொடர்பு கொண்டு ஹாய் ஆண்டி.. நாங்கள் இங்கு இருக்கிறோம் என்று பேசி இருப்பார் தானே. இலங்கை ராணுவத்திடம் பிடிபட்ட போராளி ஒருவர் எதையும் பேசி விடக்கூடாது என்பதற்காக தனது நாக்கையே கடித்து துண்டாக்கினார். இதுதான் போராளிகளின் வரலாறு. துவாரகா வெளியில் வந்திருந்தால் அவர் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வெளி நாட்டு கட்டமைப்பும் உறுதியாக இருந்தது. அவர்களிடமாவது துவாரகா பேசி இருப்பார்.

    தேசிய தலைவர் மீண்டும் வந்து விடக் கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் நினைப்பதாக தவறான பிம்பம் வடிவமைக்கப்படுகிறது. இதுமிகுந்த வேதனையை அளிக்கிறது. தேசிய தலைவர் வந்துவிட்டால் அடுத்தகணமே அவரது பின்னால் அணிவகுத்து நிற்போம்.

    2008-ம் ஆண்டுக்கு பிறகு தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை வரவில்லை. இனி தமிழர்கள் வாழும் காலம் வரை அதுதான் மாவீரர் நாள் உரையாகும்.

    இனி எங்கள் இனத்துக்கான தேசிய தலைவர் என்று யாரும் இல்லை. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனி வருபவர்கள் இணைப்பாளராக இருக்கலாம்.

    ஒருவேளை துவாரகா இருந்திருந்தால் இயக்கத்தில் உள்ள மூத்த போராளிகளை தொடர்பு கொண்டு பேசி இருப்பார். எனவே அவரை பற்றி வெளியாகும் தகவல்கள் போலியானவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன.
    • பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    சென்னை:

    இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது.

    90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல கருதி தடைகள் விதித்தன. அது மட்டுமின்றி கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த போது அந்த நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தன.

    சர்வதேச நாடுகளிடம் பெற்ற ஆயுதங்களை கொண்டு 2009-ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இறுதியாக முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அவரது மனைவி, மகள், மகன்களும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.

    ஆனால் பிரபாகரனும், மனைவி, மகள் ஆகியோரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியானது. அன்று முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் மறுத்தனர்.

    பிரபாகரன் மனைவி, மகள் பெயரில் சிலர் நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நேற்று மாலை புதிய வீடியோ வெளியானது. அதில் துவாரகா போன்ற உருவ அமைப்புடைய ஒரு பெண் தோன்றி பேசினார்.

    துவாரகா பேசியது என வெளியான வீடியோவில் அந்த பெண் பேசுகையில், "சிங்களத்துக்கு எதிரான தமிழ்ஈழ அரசியல் போராட்டம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்று பெறவில்லை" என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் சிங்களர்கள் தங்களுக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் இந்த வீடியோவை பார்த்தனர்.

    பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 27-ந்தேதியை எப்போதும் ஈழ தமிழர்கள் மாவீரர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த தினத்தில் இந்த வீடியோ வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    14 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட துவாரகா சமூக வலைதளங்களில் தோன்றியதை ஈழ தமிழர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் இந்த வீடியோ குறித்து உடனடியாக சர்ச்சை கருத்துக்களும் வெளியானது.

    செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி துவாரகா பெயரில் போலி வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரது உடல் அமைப்புடன் மற்றொருவர் உடல் அமைப்பை மிக எளிதாக பொருத்தி மோசடி செய்வது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

    நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், ஆலியாபட் ஆகியோரது படங்களும் ஏஐ தொழில் நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று துவாரகா பெயரிலும் போலி வீடியோ வெளியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    துவாரகா பெயரில் வெளியான வீடியோ குறித்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றன. அந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று சில உளவு அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பி உள்ளன.

    விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரும் அதை போலி வீடியோ என்று கூறியுள்ளனர்.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • 2009ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும் நடைபெற்றது
    • முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன் என்றார் தி.மு.க. எம்.பி.

    கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே  அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த சச்சரவுகள் இன்று வரை ஓயவில்லை.

    இந்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், "வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால், யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "மேதகு தலைவர் பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்" என பதிலளித்தார்.

    இரு தலைமுறைகளாக தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவரான தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த பதில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பிரபாகரனை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை, தி.மு.க.வுடன் கூட்டணி ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் பல கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் எனும் பின்னணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் இந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • ‘பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார்.
    • இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னை:

    தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

    ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    'பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

    இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் 'வீடியோ' காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

    துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் இருக்கிறது.

    இதன் பின்னணி வருமாறு:-

    இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ், அவரது மனைவி உதயகலா ஆகியோர் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

    தற்போது வெளியாகி உள்ள உதயகலா 'வீடியோ' காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    போருக்கு பின்னர் இலங்கை நாட்டில் அமைதி திரும்பியதால் இவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    • ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர் பெற வைப்பதற்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தலை தூக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வகையில் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் உள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக உள்ள விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களையும், சிதறி ஓடி தலைமறைவாக உள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்களையும் மத்திய உளவு பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த கண்காணிப்பு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடல் பகுதியில் மர்ம படகு ஒன்றை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களும், ஆயுதங்களும் கடத்தப் பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. 300 கிலோ ஹெராயின், 9 ஏ.கே.47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்கள் ஆகியவை படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தோட்டாக்கள் 9 எம்.எம். ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தக் கூடியவை என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக கடத்திச் செல்லப்பட்டது விசாரணையில் அம்பலமானது. அந்த அமைப்பை மீண்டும் பலப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் ஈரான் வழியாக கேரளாவுக்கு கடத்திவரப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. கேரளா வழியாக இலங் கைக்கு இந்த ஆயுதங்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தான் அவை பிடிபட்டன. இந்த ஆயுதக் கடத்தலின் பின்னணியில் திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சிலர் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான குணசேகரன், புஷ்ப ராஜா, முகமது அஸ்மின் ஆகிய 3 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்ததால் வழக்கு விசாரணை என்.ஐ.ஏக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதக் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். இதில் சற்குணம் என்கிற சபேசன் சிக்கினார்.

    அவர் திருச்சி முகாமில் பிடிபட்டவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வளசரவாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த சபேசன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கடத்தியதாக சேலையூரில் வசித்து வந்த ஆதிலிங்கம் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து ஆயுத கடத்தல் வழக்கில் சிக்கியவர்களின் கூட்டாளி ஆவார்.

    ஆயுதக் கடத்தலுக்கு இவர் மூளையாக செயல்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதக் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு பாதுகாவலராக ஆதி லிங்கம் செயல்பட்டு வந்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் ஆதிலிங்கம் இவ்வாறு செயல்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. வெளி நாடுகளை சேர்ந்த பலர் போலி ஆவணங்களை தயாரித்து தங்களை இந்தியர்கள் போல காட்டிக் கொண்டு வலம் வந்திருப்பதும் தெரிய வந்தது.

    பாகிஸ்தானை சேர்ந்த ஹாஜி சலீம் என்பவர் இந்தியா வழியாக இலங் கைக்கு ஆயுதக் கடத்த லில் ஈடுபடுவதற்கும் ஆதிலிங்கம பல்வேறு உதவிகளை செய்திருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதற்கிடையே ஆயுதக் கடத்தலில் தொடர்புடைய உலன் என்பவர் ஏமனுக்கு தப்பிச் சென்றிருப்பதும், அந்நாட்டு அதிகாரிகள் அவரை கைது செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    விடுதலைப் புலிகளுக்காக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள ஆதிமூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர் பெற வைப்பதற்கு மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உளவு பிரிவு மற்றும் மாநில உளவு பிரிவு அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தீவிர கண்காணிப்பிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.

    கொழும்பு:

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்தப் போரின் முடிவில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

    ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை முன் வைத்துள்ளது.

    சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.



    இதற்காக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இலங்கையில் ஈழத் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்பட்டதால் அவர்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு உரிமைக்காக ஆயுதம் ஏந்தும் போராட்டம் தொடங்கியது. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது.

    சிங்கள ராணுவத்தினரை குறி வைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அந்த இயக்கத்தில் இருந்த இளைஞர்கள் சுதந்திர தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதற்காக தங்களது உயிரையும் மாய்த்து கொண்டனர். அந்த வகையில் 18 ஆயிரத்து 742 பேர் மாவீரர்களாக மாறி உள்ளனர்.

    ஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக இந்தியா அறிவித்தது. 1992-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை இருந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. இந்தியா போன்று அமெரிக்கா, மலேசியா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு உள்பட 32 நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதித்து உள்ளது.

    இதற்கிடையே கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றிலுமாக இலங்கை ராணுவம் தோற்கடித்தது. அதன் பிறகு விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது விடுதலைப்புலிகள் பெயரில் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.

    என்றாலும் இந்தியாவில் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள தடை விரைவில் முடிய உள்ளது.



    இதையடுத்து விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டிப்பு செய்து இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க முயற்சிகள் நடக்கிறது. அதன் ஆதரவு இயக்கங்களுடன் சேர்ந்து இந்த முயற்சிகள் நடந்து வருகின்றன. எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சட்ட விரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் 2024-ம் ஆண்டு வரை தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

    விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது ஆயுதம் ஏந்துவதை கைவிட்டு இருப்பதால் உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது.

    கனடாவிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்தியாவில் முன் எச்சரிக்கை காரணமாக விடுதலைப்புலிகளின் மீதான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் கடந்த 2005-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய விடுதலைப் புலி 14 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
    பெர்லின்:

    இலங்கை முன்னாள் வெளியுறவு மந்திரி லட்சுமணன் கதிர்காமர் (73).

    இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி கொழும்பில் உள்ள தனது பங்களாவில் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

    இதற்கிடையே 2009-ம் ஆண்டு நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோல்வி அடைந்தது. அதையடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் ஜெர்மனியில் விடுதலைப்புலிகள் உளவுப் பிரிவைச் சேர்ந்த நவனீதன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் இலங்கை முன்னாள் மந்திரி லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    லட்சுமண் கதிர்காமர் கொல்லப்பட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப்புலி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜெர்மனியின் தனியுரிமை சட்டப்படி கைதான விடுதலைப்புலியின் உண்மையான பெயர் வெளியிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரை அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

    ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றதாகவும் இவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்கும் படத்திற்கு `சீறும் புலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். #SeerumPuli #BobbySimha
    தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 4 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

    சீறும் புலி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.
    இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளான நேற்று சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பாபி சிம்ஹா, பிரபாகரன் தோற்றத்தில் இருக்கும் அந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #SeerumPuli #VeluPrabhakaran #BobbySimha

    விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் வேலு பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார். #VeluPrabhakaran #BobbySimha
    தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

    இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.



    சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

    இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை. #VeluPrabhakaran #BobbySimha

    ×