பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன். என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்தேன்.
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்
Published on

பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அடுத்ததாக 'பயாஸ்கோப்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இவர், (சீமான் பெயரைக் குறிப்பிடாமல்) அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என்று பதிவிட்டிருந்தார். .

இதனையடுத்து இது சம்பந்தமாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,

அந்த காலகட்டத்தில் நான் ஒரு தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தேன்.

அதே சேனலில் சீமானுக்கு நெருக்கமாக இருந்த ஒருவரும் அங்கு வேலை செய்துகொண்டிருந்தார். ஒருநாள் அவர் பிரபாகரன் உடன் இயக்குநர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் இருந்த புகைப்படங்களை ஒரு டிவிடியில் எடுத்துக் கொண்டு வந்தார். அப்போது சீமானுடைய புகைப்படத்தையும் இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து எடிட் செய்து தர வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.

என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக நான் எடிட் செய்து கொடுத்தேன். அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன். பிரபாகரனுக்கு நிழல் வைக்க மறந்திருப்பேன்.

பின்னாட்களில் அந்த நண்பரை நேரில் சந்தித்த போது, 'அந்த புகைப்படம் வீட்டில் பிரேம் போடுவதற்கு என்று கூறினீர்கள். ஆனால் அது இப்போது வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறதே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நம்முடைய புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவரை உருவாக்கியிருக்கிறோம். நல்ல விஷயம்தானே' என்று தெரிவித்தார்.

சங்ககிரி ராஜ்குமாரின் இந்த குற்றச்சாட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், "2009 லேயே AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைம் டிராவல் செய்து வரைந்திருப்பான் போல அந்த டுபாக்கூர் பெரியாரிஸ்ட் சங்ககிரி ராஜ்குமார். மொத்தம் ஏழு புகைப்படங்கள் இருக்கு எதுடா நீ வரைந்தது?" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com