search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK alliance partners"

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    ×