search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thamizachi Thangapandian"

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • 2009ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியும் நடைபெற்றது
    • முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன் என்றார் தி.மு.க. எம்.பி.

    கடந்த 2009ல், இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் (LTTE) அமைப்பினருக்கும் இடையே நடைபெற்ற ஈழப்போரின் கடைசி கட்டத்தில், இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    எல்.டி.டி.ஈ. அமைப்பினருக்கு எதிராக இந்திய அரசாங்கம் மறைமுகமாக இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை செய்து வந்ததாக அப்போது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.

    இந்தியாவில் அப்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ஆட்சியில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான தி.மு.க.வும் அங்கம் வகித்தது. இது மட்டுமின்றி தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சியே  அப்போது நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் ராணுவ உதவி அப்போதைய தி.மு.க. அரசாங்கத்திற்கு தெரிந்தே நடந்ததாகவும், அன்றைய முதல்வர் கருணாநிதி இதனை அறிந்திருந்தும் தடுக்க தவறியதால்தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று அதில் அப்பாவி இலங்கை தமிழர்கள் உயிரிழந்ததாக தமிழகத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியது. தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பல கட்சிகளும் அப்போது தி.மு.க.வை இதே காரணத்திற்காக குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த சச்சரவுகள் இன்று வரை ஓயவில்லை.

    இந்நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகரும், தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம், "வரலாற்று சிறப்புமிக்க ஒரு நபருடன் உணவு உண்ண வேண்டுமென்றால், யாருடன் உண்ன விரும்புகிறீர்கள். அந்த நபரிடம் என்ன கேட்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "மேதகு தலைவர் பிரபாகரன் உடன் உணவருந்தி, அவரிடம் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பேன்" என பதிலளித்தார்.

    இரு தலைமுறைகளாக தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்தவரான தமிழச்சி தங்கபாண்டியனின் இந்த பதில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தி.மு.க. தடுக்க தவறிய குற்றத்தை தாமாக முன் வந்து ஒப்பு கொண்டதாக ஆகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, பிரபாகரனை ஒரு மாவீரனை போல் சித்தரித்து தமிழச்சி பேசியிருப்பதை, தி.மு.க.வுடன் கூட்டணி ல் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கண்டித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கு நடைபெற உள்ள தேர்தலில் பல கூட்டணிகளில் மாற்றங்கள் வரலாம் எனும் பின்னணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் இந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    ×