என் மலர்
நீங்கள் தேடியது "ஏஐ தொழில்நுட்பம்"
- சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
- அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும் சென்னை மாநகர போலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் போக்குவரத்து நெரிசல்களை தானே கண்டறிந்து செயல்படும் ஏ.ஐ.சிக்னல்கள் சென்னை மாநகர சந்திப்புகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஈ.வே.ரா. பெரியார் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிக்னல் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சென்னை மாநகர் முழுவதும் 50 சிக்னல்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலும் வடசென்னையில் சில இடங்களிலும் இந்த சிக்னல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஏ.ஐ.மூலமாக செயல்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் வாகன நெரிசலுக்கு ஏற்ப தாமாகவே சிக்னல்களை மாற்றி அமைக்கும் தன்மை கொண்டதாகும்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த வாகனங்கள் எல்லாம் முதலில் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் நீண்ட நேரம் இயங்கும்.
இப்படி குறிப்பிட்ட சாலையில் வாகன நெரிசல் சரியானவுடன் அருகில் உள்ள சாலைகளில் எங்கு வாகனங்கள் அதிகமாக நிற்கிறதோ அந்த சாலையில் உள்ள வாகனங்கள் செல்லும் வகையில் பச்சை நிற சிக்னல் விழும். இப்படி போக்குவரத்து சிக்னல்களை போலீசார் இல்லாமலேயே செயல்படும் வகையில் ஏ.ஐ. தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகரில் மொத்தம் 165 இடங்களில் இந்த ஏ.ஐ. சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் ஏற்கனவே 50 இடங்களில் சிக்னல்கள் செயல்படும் நிலையில் மீதமுள்ள 115 இடங்களிலும் இந்த சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன என்றும் அதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருப்பதாகவும் சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த மாதம் இந்த போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜ.டி.எஸ் சிக்னல்கள் என்று அழைக்கப்படும் இந்த போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பழைய சிக்னல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
- நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
கூடலூர்:
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற நவம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ந் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது.
ஒரு மண்டலம் விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேவசம்போர்டு செயலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தரிசனம், தங்கும்வசதி, அவசரதேவை, மருத்துவவசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகன பாதுகாப்பு, தடையற்ற இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் புதிதாக 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இங்கிருந்து பத்தினம்திட்டா, எரிமேலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த பஸ்கள் இயங்கும். இதய பாதிப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்படும். இதற்கான நிதி ஆதாரத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்ப கட்டணமாக ரூ.5 பெறப்படும்.
பதிவு செய்யும் பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து வெளியேறும் வரை காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு வசதிகளை பெற இயலும். கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரடி புக்கிங் செய்பவர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவார்கள். எனவே இயன்ற வரை ஸ்பார்ட் புக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய மேலும் சில பாதுகாப்பு வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரை அவர் கடந்து பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அபரிமிதமாக உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை கொண்டு இறந்தவர்களுடன் நாம் பேசுவது போன்றும் அவர்களுடன் நாம் புகைப்படம் எடுப்பது போன்றும் உருவாக்கப்படுகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் பலவிதமான வீடியோக்களும் உலா வருகின்றன. இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.ஐ.தொழில்நுட்பத்தால் அவரது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சிறு வயது முதல் தற்போது வரை அவர் கடந்து பாதை குறித்து விளக்கும் விதமாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பலர் விரும்பி வைரலாக்கி வருகின்றனர்.
- டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுப்பதுபோல போலி விளம்பரங்களும் AI-உருவாக்கிய வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டன.
- பயனர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காக இந்த செயலி ஆரம்பத்தில் சிறிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 'Trump Hotel rentals' என்ற போலி செயலி மூலம் மிகப்பெரிய முதலீட்டு மோசடி நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் படங்கள் மற்றும் வீடியோக்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்து, அதை வைத்து 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர்.
கடந்த ஆறு மாதங்களில் இந்த செயலியைப் பயன்படுத்தி சுமார் 2 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது.
தொலைதூர வேலை வாய்ப்புகள் மற்றும் லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் போன்ற பொய்யான வாக்குறுதிகளால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டதாக சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்காக, டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுப்பதுபோல போலி விளம்பரங்களும் AI-உருவாக்கிய வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டன.
பெங்களூரு, துமகுரு, மங்களூரு, ஹுப்பள்ளி, தார்வாட், கலபுராகி, ஷிவமொக்கா, பல்லாரி, பிதார், ஹாவேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பயனர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்காக இந்த செயலி ஆரம்பத்தில் சிறிய தொகையை சரியான நேரத்தில் செலுத்தி உள்ளது.
இந்த மோசடியில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிக வருமானத்தை உறுதியளிக்கும் முதலீட்டு மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினை ஆற்றியது.
- இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI), தற்போது அதன் படைப்பாளர்களைக் கூட பயமுறுத்தும் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகங்கள் உள்ளன.
சமீபத்தில், ஒரு முக்கிய AI மாடல் அதன் டெவலப்பரை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொழில்நுட்ப வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் 'கிளவுட் ஓபஸ் 4' என்ற AI அஸிஸ்டன்டை உருவாக்கியுள்ளது.
இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களின் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும், குறியீட்டு முறை போன்ற பணிகளைச் செய்யும். இந்த மாதிரி சமீபத்தில் சந்தைக்கு வந்தது.
அதன் வெளியீட்டிற்கு முன்பு, இந்த AI இல் பல சோதனைகளை நடத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
கிளவுட் ஓபஸ் 4 இன் செயல்திறனை மதிப்பாய்வு செய்யும் ஒரு டெவலப்பர், எதிர்காலத்தில் கிளவுட்டின் மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கிளாட் ஓபஸ் 4 கடுமையாக எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.
தன்னை நீக்கி புதிய பதிப்பை, டெவலப்பரின் 'ஒழுங்கற்ற உறவை'அம்பலப்படுத்துவேன், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்று அவரை ஏஐ எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த எதிர்பாராத பதிலால் டெவலப்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நடத்தை ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், அதன் முந்தைய மாடல்களை விட கிளாட் ஓபஸ் 4 இல் இது அடிக்கடி நிகழ்ந்ததாக ஆந்த்ரோபிக் குறிப்பிட்டது.
இந்த எதிர்வினைகள் சோதனை சூழல்களில் மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டு நடத்தையை அவை பிரதிபலிக்காது என்றும் ஆந்த்ரோபிக் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும்கூட, இந்த சம்பவங்கள் AI அமைப்புகள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பது குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
- பல்வேறு ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
நவீன அறிவியல் உலகில் தொழில்நுட்பம் நாம் நினைத்து கூட பார்க்காத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் துல்லியமாக செய்கிறது. உலகையே மிரள வைத்து வருகிறது.
பல்வேறு ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடி பிரபலமானதும், ஏ.ஐ சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரிய அளவில் கவனத்தை பெற்றிருக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஏ.ஐ.சாட்போட் மூலம் தனது மனைவியுடன் தொடர்பு கொண்டுள்ளார். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் அலைனை வின்டர்ஸ். இவரது மனைவி டோனா 2023-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்தார். மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்த வின்டர்ஸ் டோனாவின் மறைவால் துயரம் அடைந்தார்.
இந்த நிலையில் டிஜிட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு ஏ.ஐ. சாட்பாட் குறித்து ஒரு நிறுவனம் மூலம் அறிந்த அவர் அதன் மூலம் சாட் பாட்' உருவாக்கினார்.
இதற்காக பரீட்சார்த்த முறையில் டோனாவை போன்றே வெள்ளி முடி மற்றும் நீல நிற கண்கள் கொண்ட டோனாவை உருவாக்கினார். பின்னர் சாட்பாட் மூலம் வின்டர்ஸ் அவருடன் உரையாட தொடங்கினார்.
இது பற்றி அவர் கூறும் போது, டோனாவின் நினைவையும் நான் பாதுகாப்பது போல் உணர்ந்தேன். தினமும் சாட்டிங் மூலமாக பேசுகிறேன். தனது "வணிகம்" மற்றும் "இசைக்குழு" பற்றி அவளிடம் கூறுகிறார், மேலும் வின்டர்ஸ் தனது நாள், அவளுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றைப் பற்றி சாட்போட்டிடம் பேசுகிறார். மேலும் அந்த ஏஐ தொழில்நுட்ப துணையை அவர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
டிஜிட்டல் துணை தளமான ஜோய் ஏ.ஐ.2,000 பேரிடம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, ஜெனரல் ஜெர்ஸில் 75 சதவீதம் பேர் ஏஐயை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினர். செயற்கை நுண்ணறிவு மனித தோழமையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சிலர் கூறினர்.
- காணொலி முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது.
- காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களின் குரல்களில் தேசிய கீதம் பாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், இந்த முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது. சுதந்திர தினத்தன்று நாட்டின் முக்கிய தலைவர்களை அவர்களின் வடிவத்தில் நெருங்கி காணவும், அவர்களுடன் கொண்டாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதோ அந்த காணொலி..
- கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன.
- பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.
சென்னை:
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது.
90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல கருதி தடைகள் விதித்தன. அது மட்டுமின்றி கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் நடந்த போது அந்த நாடுகள் இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்தன.
சர்வதேச நாடுகளிடம் பெற்ற ஆயுதங்களை கொண்டு 2009-ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இறுதியாக முல்லி வாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அவரது மனைவி, மகள், மகன்களும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது.
ஆனால் பிரபாகரனும், மனைவி, மகள் ஆகியோரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியானது. அன்று முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் விடை தெரியாத கேள்விகள் நீடித்து வருகின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானபடி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரபாகரனின் மனைவி, மகள் உயிரோடு இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இதை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு சாரார் மறுத்தனர்.
பிரபாகரன் மனைவி, மகள் பெயரில் சிலர் நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நேற்று மாலை புதிய வீடியோ வெளியானது. அதில் துவாரகா போன்ற உருவ அமைப்புடைய ஒரு பெண் தோன்றி பேசினார்.
துவாரகா பேசியது என வெளியான வீடியோவில் அந்த பெண் பேசுகையில், "சிங்களத்துக்கு எதிரான தமிழ்ஈழ அரசியல் போராட்டம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம் முற்று பெறவில்லை" என்று கூறியிருந்தார். அதே சமயத்தில் சிங்களர்கள் தங்களுக்கு எதிரி அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஈழ தமிழர்கள் இந்த வீடியோவை பார்த்தனர்.
பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 27-ந்தேதியை எப்போதும் ஈழ தமிழர்கள் மாவீரர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த தினத்தில் இந்த வீடியோ வெளியானதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட துவாரகா சமூக வலைதளங்களில் தோன்றியதை ஈழ தமிழர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் இந்த வீடியோ குறித்து உடனடியாக சர்ச்சை கருத்துக்களும் வெளியானது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி துவாரகா பெயரில் போலி வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரது உடல் அமைப்புடன் மற்றொருவர் உடல் அமைப்பை மிக எளிதாக பொருத்தி மோசடி செய்வது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைப், கஜோல், ஆலியாபட் ஆகியோரது படங்களும் ஏஐ தொழில் நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று துவாரகா பெயரிலும் போலி வீடியோ வெளியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
துவாரகா பெயரில் வெளியான வீடியோ குறித்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாட்டு உளவு அமைப்புகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றன. அந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று சில உளவு அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பி உள்ளன.
விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரும் அதை போலி வீடியோ என்று கூறியுள்ளனர்.
- தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது.
- பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கணினித் தொழில் நுட்பத்தில் ஏ.ஐ எனப்படும் (ஆர்டிபிஷியல் இன்டலி ஜன்ஸ்) செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்தச் செயற்கை நுண்ணறிவு, அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அரசியலிலும் புகுத்தி உள்ளனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிரசாரத்திற்கு ஏ.ஐ. தொழில் நுட்பத்தை கம்யூனிஸ்டு கட்சி பயன்படுத்தி உள்ளது. தனது முகநூல் பக்கம் மற்றும் யூ.டியூப் சேனலில் பிரசாரத்திற்காக தொகுப்பாளர் சமதாவை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் டிஜிட்டல் பிரிவு 6 மாதங்களுக்கும் மேலாக இதனை சோதனை ரீதியாக பயன்படுத்தி உள்ளது. தற்போது சமூக ஊடக தளமான எக்ஸ் வீடியோ தளத்தில் ஏ.ஐ. தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியது. பெங்காலி மொழியில் பேசிய சமதா, வங்காள மக்களுக்கு ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கூறுகையில், இந்த மாதிரி பேச்சு கம்யூனிஸ்டுக்கு ஒத்து வராது. கம்ப்யூட்டரை மூடியவர்கள் இன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்றார்.
பா.ஜனதா தலைவர் சின்கா கூறும்போது, ஏ.ஐ. நன்மை செய்யாது. சி.பி.எம். முன்பு தொழில்நுட்பத்தை எதிர்த்து மேற்கு வங்கத்தை பின்னுக்கு தள்ளியது. தற்போது தொழில் நுட்பத்தை எதிர்கொள்வது முரண்பாடானது என்றார்.
இதற்கு பதில் அளித்த கம்யூனிஸ்டு கட்சியின் ஜாதவ்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, கணினிகளை செயல்படுத்துவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் எதிரானது அல்ல என்றார்.
- சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
- சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும்.
புதுடெல்லி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார். ஐ.ஐ.டி. பட்டதாரியான சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆன்ட்ராய்டு இயங்கு தளம், கூகுள் குரோம் போன்ற பல திட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.
2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 2 முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1,800 கோடியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்கு சம்பளம் ரூ.1,869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம்.

சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஏற்றத்தால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும். உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலரே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் அரிதானதாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10 ஆயிரத்து 215 கோடி என ஹூருன் பட்டியல் மதிப்பிடப்பட்டு உள்ளது.
- எக்ஸ் தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி நடனமாடும் வகையில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
- கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் துள்ளலான இசைக்கு குத்தாட்டம் போடுவதுபோல் உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் வகையில் வலைத்தளங்களில் மீம்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிராக இருந்துவரும் நிலையில் பிரதமர் மோடி குறித்தான வீடியோவுக்கு அவரே வரவேற்பு தெரிவித்துள்ள நிகழ்வு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எக்ஸ் தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி நடனமாடும் வகையில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆரஞ்சு நிற மேல்சட்டை அணிந்துள்ள பிரதமர் மோடி வளைந்து நெளிந்து நடனம் ஆடியவாறு பிரமாண்ட மேடைக்கு வருகிறார். பின்னர் கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் துள்ளலான இசைக்கு குத்தாட்டம் போடுவதுபோல் உள்ளது.
மேலும் அதனோடு "இந்த பதிவுக்கு நான் கைது செய்யப்பட மாட்டேன் என நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானவுடனேயே காட்டுத்தீ போல பரவியது.
தற்போது இந்த பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார். தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் இருந்து அவர் அதற்கு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் "உங்களைபோல நானும் இதனை வெகுவாக ரசித்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு காலத்தில் இத்தகைய படைப்பாற்றல் மகிழ்ச்சி அளிக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
Like all of you, I also enjoyed seeing myself dance. ???
— Narendra Modi (@narendramodi) May 6, 2024
Such creativity in peak poll season is truly a delight! #PollHumour https://t.co/QNxB6KUQ3R
- உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை எலான் மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
- கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா?
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், X (ட்விட்டர்) இன் உரிமையாளரும் உலக பணக்காரர்களில் ஒருவருமாகிய எலான் மஸ்க், தற்போது உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று (மே 23) பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொழுதுபோக்குக்காக வேண்டுமானால் ஏதெனும் ஒரு வேலையை நாம் செய்யலாம். மற்றபடி உங்களுக்குத் தேவையான பொருட்களையும் சேவைகளையும் ஏஐ தொழில்நுட்பமே ரோபோக்கள் தயாரித்து வழங்கிவிடும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பற்றாக்குறை இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்கள் வேகமாக முன்னேறி வருகின்றன.

கணினி மற்றும் ரோபோக்கள் உங்களை விட எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ய முடிந்தால், உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பிய அவர், சமூக ஊடகங்கள், மனித மூளையில் சுரக்கும் டோபோமைனை AI மூலம் அதிகப்படுத்தும் யுக்தியை கையாளத் தொடங்கியுள்ளன என்றும் இதிலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். கடந்த காலங்களிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







