என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான் - விஜயை விமர்சித்த வன்னி அரசு
- மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார்.
- அதிமுகவும் தவெகவும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பாஜக ஆகிய காட்சிகளை விமர்சித்து பேசினார். இந்நிலையில், த.வெ.க மாநாடு லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " தவெக இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்து விட்டார்கள். முதல் மாநாட்டை விட கூடுதல் நேரம் எடுத்து பேசியுள்ளார் விஜய் அவர்கள்.
இந்த மாநாட்டிலும் கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்தி விட்டார். கொள்கை எதிரி பாஜக குறித்து திரு.விஜய் பேசும் போது, பொத்தாம் பொதுவாக பேசுகிறாரே தவிர, குறிப்பாக பேசவில்லை. தற்போது கொண்டுவந்துள்ள சனநாயக விரோத மசோதாவான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆளுனர் நீக்குவதற்கு அதிகாரம் குறித்து வாயே திறக்கவில்லை. பொய் வழக்கு போட்டு 30 நாட்கள் சிறைப்படுத்தி சனநாயகத்தை அச்சுறுத்தும் அம்மசோதா குறித்து திரு.விஜய் வாய் திறக்காதது ஏன்?
தேர்தல் ஆணையத்தின் வழி வாக்குகளை திருடும் ஆபத்து குறித்து பேசாமல் போனது ஏன்?
பேசிய அரை மணிநேத்துக்கும் மேலான உரையில், சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பேசாதது ஏனோ?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தங்கை ஸ்னோலின் குறித்து பேசிய திரு.விஜய் அவர்கள்
மறந்தும் கூட, துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த அதிமுக குறித்து வாய் திறக்காதது ஏனோ?
திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு சொல்லும் விஜய் அவர்கள், அதற்கான ஆதாரத்தை வெளியிடாமல், திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன் மொழிந்ததை வழிமொழிந்ததன் மூலம் அதிமுகவும் தவெகவும் தான் மறைமுக கூட்டணியாக இருப்பது அம்பலமாகிறது.
அந்த கூட்டணியில் பாஜகவும் இருப்பதால், அதிமுக- பாஜக கூட்டணியின் மறைமுக கூட்டணி பார்ட்னராகவே விஜய் செயல்படுகிறார் என்பது தான் இந்த மாநாட்டு செய்தி. மற்றபடி இந்த மாநாடு திரு.விஜய் அவர்களின்
லென்த்தான டயலாக் மாநாடு அவ்வளவு தான்" என்று பதிவிட்டுள்ளார்.






