என் மலர்
நீங்கள் தேடியது "Plus 1 Student Dead"
- மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
- மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி தான் படித்து வருகிறான். அப்படி இருக்கும் போது எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர். நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மாணவர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றுப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனின் பிணத்தை போலீசார் மீட்டனர்.
மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த காக்காவடி பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கரூர் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் சந்தோஷ் பாபு (வயது 16) என்ற மாணவன் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அவர் விடுதியில் கொடுத்த உணவினை வாங்கி சாப்பிட்டார். பின்னர் சற்று நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதுபற்றி சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவன் சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரவணன் மற்றும் உறவினர்கள் கரூர் விரைந்தனர். பின்னர் அவர்கள் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
உயிரிழந்த மாணவன் இரவு உணவு சாப்பிட செல்லும்போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் உண்மை தெரியும் என கூறினர்.
பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவன் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் ரவீணாஸ்ரீ (வயது 17).
இவர் வேம்படிதாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் ரவீணாஸ்ரீ வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வகுப்பறையில் அமர்ந்து தனது சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
காலை 9.45 மணியளவில் தோழிகள் அனைவரும் இறைவணக்கம் வழிபாடு செலுத்த பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் இறைவணக்கம் செலுத்தவா? என கூறி ரவீணாஸ்ரீயை அழைத்தனர். அதற்கு அவர் முதலில் நீங்கள் செல்லுங்கள். பிறகு நான் வருகிறேன் என்று கூறிவிட்டு வகுப்பறையிலேயே இருந்தார்.
வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென பிளேடால் தனது இடது கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட பள்ளி கட்டிடத்தின் படி வழியாக 3-வது மாடிக்கு ஏறினார்.
பின்னர் பள்ளியின் 3-வது மாடி மொட்டை தளத்தில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது 2 கால்களும் முறிந்து போனது. மேலும் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத நிலையில் நடந்த இந்த சம்பவத்தால் இறைவணக்கம் வழிபாடு நிகழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவீணாஸ்ரீயை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவியை குணப்படுத்த தொடர்ந்து குளுக்கோஸ், ஊசி மருந்துகள் செலுத்தி தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு டாக்டர்களும் மாணவியின் கால்களை சரி செய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த அடிப்பட்டிருந்ததால் மூளை அறுவை சிகிச்சை டாக்டர்களும் மாணவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடினார்கள். இதற்காக ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுத்து பார்க்கப்பட்டது. இருப்பினும் மாணவியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மேலும் நாளுக்குள் நாள் மாணவியின் நிலைமை கவலைக்கிடமானது. இதனால் மாணவி மயக்க நிலைக்கு சென்றார். கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகள் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
மாணவி பள்ளி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து அவரது தோழிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
ரவீணாஸ்ரீ சில நாட்களாக தனக்கு உயிர் வாழபிடிக்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது நாங்கள் அவளுக்கு தைரியம் சொன்னோம். 27-ந்தேதி காலையில் பள்ளிக்கு வந்ததில் இருந்தே அவள் சோகமாக இருந்தாள். நாங்கள் அவரிடம் ஏன்? இவ்வாறு சோகமாக இருக்கிறாய் ? இறைவணக்கத்திற்கு செல்வோம் எழுந்து வா? என்று கூறினோம்.
அப்போது அவள் எங்களுடன் வர மறுத்து விட்டாள். நாங்கள் அவளுக்கு மீண்டும் தைரியம் சொல்லிவிட்டு இறைவணக்கம் செலுத்த வந்து விட்டோம். பின்னர் சிறிது நேரத்தில் இந்த துயரம் சம்பவம் நடந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு மாத காலமாக சிகிச்சையில் இருந்தும் எங்களது ரவீணாஸ்ரீயை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என தோழிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாணவி தற்கொலை சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் கூறுகையில், மாணவி ரவீணாஸ்ரீக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள பள்ளி கட்டிட 3- வது மாடியில் இருந்து குதித்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.






