என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவன் மர்ம மரணம்"

    • மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை.
    • மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவன் நேற்று முன்தினம் காலை வகுப்புக்கு வரவில்லை. விடுதியிலும் அவரை காணவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். மகன் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் எங்கள் மகன் உங்கள் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி தான் படித்து வருகிறான். அப்படி இருக்கும் போது எப்படி வீட்டிற்கு வருவான் என கேள்வி எழுப்பினர்.

    அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பத்தூர் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மாணவனை தேடி வந்தனர். நேற்று இரவு பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் மாணவர் பள்ளியின் பின்புறம் உள்ள கிணற்றுப் பக்கம் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் மாணவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இன்று காலை போலீசார் பள்ளி வளாகம் முழுவதும் மாணவனை தேடி வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியால் மூடப்பட்ட கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்தார். தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மாணவனின் பிணத்தை போலீசார் மீட்டனர்.

    மகனின் பிணத்தை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். மேலும் மாணவனின் தந்தை மகன் சென்ற இடத்துக்கு செல்கிறேன் என கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    மூடப்பட்ட கிணற்றில் மாணவன் எப்படி இறந்தான் என்பது கேள்விக்குறியாக உள்ளது. காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரை சேர்ந்த சிவபெருமாள் மகன் அஜய்குமார் (வயது10).

    அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அஜய்குமார் கடந்த 2-ந்தேதி பள்ளி வளாகத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இந்நிலையில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ. புகாரி பேச்சுவார்த்தை நடத்திார். அதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறைரீதியாகவும், காவல்துறை சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மாணவனின் உடலை பெற்று சென்று இறுதி சடங்கு செய்தனர்.

    இந்நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமை ஆசிரியர் கனகவள்ளி 4 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×