மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவன் லாரி மோதி பலி- போலீசார் விசாரணை

மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவன் லாரி மோதி பலி- போலீசார் விசாரணை
Published on

    மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராவணன் குட்டை தெருவை சேர்ந்தவர் சிவகணேஷ். கேபிள் தொழில் செய்து வருகிறார்.

இவரது மகன் அமரேஷ் (வயது 13). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலையில் மகனை பள்ளியில் விடுவதற்காக சிவகணேஷ் தனது மோட்டார் சைக்கிளில் அமரேசை அழைத்து சென்றார்.

மோட்டார் சைக்கிள் மன்னார்குடி ருக்மணிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

அப்போது பள்ளி மாணவன் அமரேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். சிவகணேஷ் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகணேசை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான அமரேஷ் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்ற போது விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com