டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - ஆலோசனை நிறைவு

இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார்.சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு - ஆலோசனை நிறைவு
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

நேற்று 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது.

பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார்.

எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சுமார் 2 மணி நேரம் ஆலோசனைக்கு பின்னர் பின் அவர் அங்கிருந்து காரில் புறபட்டு சென்றார்.

கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி வருகிற 7-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்து வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.

வருகிற 11-ந்தேதி அவர் திருச்சியில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். எனவே 7-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com