என் மலர்
நீங்கள் தேடியது "chitra pournami"
- பெருமாள் 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
- விடிய விடிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.
குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள் அதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் அளித்தார். எதிர்சேவையில் தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவிலில் தங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடான பெருமாள் கிழக்கு ரத வீதி, தெற்குத் தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியாக வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் மஹாலுக்கு வந்தடைந்தார்.
அங்கு சவுராஷ்டிர மகாஜன சபையினரின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் பெருமாள் மச்ச அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி என 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங்களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளின் திரு அவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் பெருமாள் தாடிக்கொம்பு சென்றடைகிறார்.
- 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
- பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று காலை முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை அதிகாலை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.
ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள், தரிசனம் செய்ததாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோவில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது.
மேலும், பூத நாராயண கோவிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 4 தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.
மேலும் கர்ப்பிணிகள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கட், நீர்மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவில் வெளி பகுதியில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கடந்த 2 நாட்களில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. சிறப்பு பஸ் ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- திருச்செந்தூர் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
- கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்கள் மட்டுமின்றி தினமும் ஏராளமான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்கின்றனர்.
சித்ரா பவுர்ணமியில் விரதம் மேற்கொண்டால் சித்ரகுப்த நாயனார் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த விரதம் மேற்கொள்பவர்கள் சித்தர்கள் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமககளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் சித்ரா பவுர்ணமியை யொட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை முதலே ஏராளமானவர்கள் திரண்டனர். இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி அங்கே நிலாச்சோறு சாப்பிட்டு விரதம் மேற்கொண்டனர்.
இதனால் நேற்று இரவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. விடிய விடிய பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.
- பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர்.
- இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த 21-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருகை தந்து தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.
பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர். இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.
- அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதேபோல் நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.
அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி சென்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
- சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமலை:
திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.
வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
- www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மாதவரம்:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை (23-ந்தேதி) 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னை மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் கூடுதலாக தலா 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இதில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ராபவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சித்ரா பவுர்ணமி வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24-ந் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது.
இதனால் 23-ந் தேதி முழுமையாக சித்ரா பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சித்ரா பவுர்ணமிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 24-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. 21-ந்தேதி சித்திரை மாத பிரதோஷத்தை முன் னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்து வார்கள். 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
24-ந்தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது. விடுமுறை நாட்களில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமி வருவதால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களான பீடி, சிகரெட், பாலிதீன் பை, மது, போதை வஸ்து பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவசியம் மருத்துவக் குழுவினர் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
- காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.
மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.
இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.
இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
- வேறு பல நினைவுகளுடன் வலம் வரக்கூடாது.
நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.
ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். ஏனென்றால் வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.
பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும்.
மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள்.
குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.
வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.
காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.
குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.
போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது.
புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.
தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.
யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.
கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.
கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும்.
திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை அணிந்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.
திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.
பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். (காசு கொடுத்தல் கூடாது)
வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.
அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள், அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் (அ) வாகனத்தால் வலம் வரக்கூடாது. (ஆ) காலணி அணிந்து வலம் வரக்கூடாது. (இ) புகை பிடித்தல் கூடாது. (ஈ) திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது.
கார்த்திகை தீபத்தன்று நெய் பிரார்த்தனை உள்ளவர்கள் மட்டுமே கிரிமீது ஏறி பிரார்த்தனை செலுத்தலாம்.
கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம்.
மலையை ஒட்டிய பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.
எறும்பு, வண்டு, ஈ போன்ற சிறு உயிரினங்கள் எதிர்ப்பட்டால் கூட அதற்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லுதல் நலம்.
8 லிங்கங்கள்
திருவண்ணாமலையின் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அஷ்டதிக்கு பாலகர்கள் எனப்படுவோர் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோர் ஆவர்.
வடக்கு திசையின் அதிபதி குபேரன்.
வடக்கு திசையின் அதிபதி ஈசானன்.
வடமேற்கு திசையின் அதிபதி வாயு.
மேற்கு திசையின் அதிபதி வருணன்
கிழக்கு திசையின் அதிபதி இந்திரன்.
தெற்கு திசையின் அதிபதி எமன்
தென்மேற்கு திசையில் அதிபதி நிருதியை
தென்கிழக்கு திசையின் அதிபதி அக்னி.
இந்த அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு லிங்கங்களும் இவர்கள் பெயராலேயே எட்டுத் திசைகளில் மலையைச் சுற்றி அமைந்துள்ளன.
சூரியனே வலம் வந்து வணங்குகின்ற மூர்த்தி அருணாசலம் ஒன்றுதான்.
திருவண்ணாமலையில் உருவமாகவும், அருவமாகவும், உருஅருவமாகவும் பல கோடி சித்தர்கள், மகான்கள், யோகிகள், முனிகள், ரிஷிகள் பல அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகைள் வடிவமாகவும், கற்பாறைகளாகவும் பார்க்கின்றவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர்.