என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்த காட்சி - மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீப கொப்பரை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - மகாதீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது
- திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
- மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மகாதீப தரிசன விழா நாளை நடைபெற உள்ளது.
அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு ஆனந்த நடனத்துடன் எழுந்தருள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
நாளை முதல் 11 நாட்களுக்கு அண்ணாமலை உச்சியில் சிவபெருமான் தீப்பிழம்பாய் காட்சி தருவார். திருவண்ணாமலை நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மகாதீபம் தெரியும்.
அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மகா தீப கொப்பரைக்கு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4 ஆயிரத்து 500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.
மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலையை வலம் வருவதற்காகவும், மகா தீபத்தை தரிசிக்கவும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 15 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை தூய்மையாக பராமரிக்க ஆயிரத்து 200 தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை அரசு கலைக்கல்லூரி அருகில் மாட்டு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தையில் மாடுகள், குதிரைகள், ஒட்டகம் ஆகியவை விற்பனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தீப தரிசனம் காண திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 பிரதான சாலைகள் வழியாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.






