என் மலர்
நீங்கள் தேடியது "சந்திர கிரகணம்"
- உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
- மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும்.
சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்து விட்டது. சாதாரண மனிதன் முதல் சாதனையாளர்கள் வரை பலரும் அஞ்சக்கூடிய ஒரே தோஷம் பித்ருக்கள் தோஷம். இந்த பித்ருக்கள் தோஷம் ஏழைகளுக்கு மட்டுமே உண்டு பணக்காரர்களுக்கு இது செயல்படாத தோஷம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அதாவது பொருளாதாரரீதியாக எவர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்களோ எந்த வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கவில்லையோ யாருக்கு தடை தாமதங்கள் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பித்ரு தோஷம் உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது.
உண்மையில் இது தவறான நம்பிக்கை. உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏழு பிறவிகளும் அவர் அவர்களின் பாவ புண்ணியங்களை பொருத்து அமையும்.
அதாவது ஒரு ஆன்மாவின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.
அவரவர்களின் ஊழ்வினைக்கு ஏற்ப எந்த பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். எந்தப் பிறவி எடுத்தாலும் அது முன் வினைப்பயனின் தொடர்ச்சியாக தான் அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தேவர்கள் மனிதராக பிறக்கலாம், மனிதன் மிருகமாக பிறக்கலாம். மிருகம் பறவையாக பிறப்பு எடுக்கலாம். பறவையாக பிறந்தவர் ஊர்வனவாக பிறக்கலாம். நீர்வாழ் உயிராக பிறக்கலாம் அல்லது தாவரமாக பிறக்கலாம்.
ஆக பிறவிப் பிணி உள்ளவர்களுக்கு மறு பிறவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த ஆன்மா எடுக்கும் உடல் வடிவம் வேறுவேறாக இருக்குமே தவிர ஆன்மாவில் பதிந்து கிடக்கும் நல்ல, தீய வினைகள் மாறாது. மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.
மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். தசாபுத்திக்கு ஏற்ப மனநிலையில் மாற்றம் உண்டாகி அவரவரின் வினைப் பயன்களை அனுபவிப்பார்கள்.
ஒரு ஆன்மாவில் நல்வினைகள் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து எடுக்கக்கூடிய பிறவிகளில் அவர்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் லெளகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் விதத்தில் இருக்கும். தீய கர்மாக்கள் அதிகம் இருந்தால் வரக்கூடிய பிறவிகள் ஜாதகருக்கு மறுபிறவியே இருக்கக் கூடாது என்ற மனநிலையை ஏற்படுத்தும்.
ஒரு உயிர் பூமியில் பிறப்பெடுக்க அதற்கு ஒரு தாய் தந்தையர் வேண்டும். அந்தத் தாய் தந்தையருக்கு ஒரு பெற்றவர்கள் இருக்க வேண்டும். ஒரு தாய் தந்தையர் தங்கள் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ற குழந்தைகளையே பெற்றெடுப்பார்கள். பிறப்பெடுக்கும் ஒரு உயிர் அனுபவிக்கும் நல்ல தீய கர்மாக்கள் பெற்றோர்களின் கர்மாவுடன் முன்னோர்களின் கர்மாவுடன் சம்பந்தப்பட்ட வையாகவே இருக்கும்.
ஆக ஒருவன் பிறப்பெடுக்க கர்மா என்ற ஒன்று உண்டு என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். சென்ற பிறவியின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டன், பாட்டி அத்தை, மாமா, மச்சான், பிள்ளைகள், நண்பர்கள் இவர்களுடன் ஏற்பட்ட உறவின் தொடர்ச்சியை முழுமை செய்ய கூடிய உருவ அமைப்பு உள்ள இடத்தில் ஆன்மா பிறப்பெடுக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் அவரின் முன்வினையின் தொடர்ச்சியையும், அதனால் வரும் நன்மைகள் அல்லது தீமைகளையும் பிரதிபலிக்கும். ஒருவர் வாழும் பிறவியில் நல்லதைச் செய்தால் துன்பப்படுவதும், கெடுதல் செய்து சிறப்பாக வாழ்வதற்கும் முன்வினைத் தொடர்ச்சியே காரணமாக அமைகிறது.

ஐ.ஆனந்தி
சுருக்கமாக ஒரு ஆன்மாவின் செயல்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும். பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சமாகும். ஆக இந்தப் பிறவியில் செய்யக்கூடிய நன்மை தீமைக்கு உள்ள பிரதிபலன் அடுத்த பிறவியிலேயே கிடைக்கும். அதைத்தான் நமது முன்னோர்கள் போகும் வழிக்கு புண்ணியம் சேர்த்து வைத்து விட்டு செல் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.
ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி நின்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சுய ஜாதகத்தில் 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.
இந்த அமைப்பு பெற்றவர்களின் ஜாதகத்தில் எந்தவித தோஷங்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பாதிப்பை கொடுக்காது. முன்வினையில் நல்ல கர்மாக்கள் இருப்பவர்களுக்கு இந்த பிறவியில் நல்ல பெற்றோர்கள் கிடைப்பார்கள். நல்ல குடும்பத்தில் பிறப்பார்கள்.
உரிய வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் இன்பங்கள் உண்டாகும். குல கவுரவத்தைக் காப்பாற்றக்கூடிய நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் இருக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். குலதெய்வத்தின் அருள் கடாட்சம் கிடைக்கும். பூர்வீகத்தால் பயன் உண்டு. கெட்ட நோய்த் தாக்கங்கள் வராது. தேவைக்கு நல்ல பண வசதிகள் இருக்கும்.
ஆயுள் சார்ந்த பயம் இருக்காது. பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் இருக்கும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடமே ஒருவரின் முன்வினை தொடர்ச்சியை சொல்லக்கூடிய ஸ்தானமாகும்.
ஜோதிட ரீதியாக லக்னம் ( ஜாதகர்) பூர்வ புண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணர முடியும். குறிப்பாக சூரியன், ராகு/ கேது, மாந்தி சம்பந்தம், 9-ம் அதிபதி ராகு/கேது, மாந்தி சம்பந்தம், சூரிய, சந்திர கிரகணத்திற்கு 7 நாட்களுக்கு முன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு.
சூரியன் ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.
பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம்
ஜனன கால ஜாதகத்தில் உள்ள சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.
சூரிய தசை ராகு புத்தி
ராகு தசை சூரிய புத்தி
சனி திசை ராகு புத்தி
ராகு தசை சனி புத்தி
சனி தசை கேது புத்தி
கேது தசை சனி புத்தி
கேது தசை ராகு புத்தி
சந்திர தசை ராகு புத்தி
ராகு தசை சந்திர புத்தி
சந்திர தசை கேது புக்தி
கேது தசை சந்திர புத்தி
ஒருவருக்கு பித்ருக்களிடமிருந்து கிடைப்பது நல்லாசியா அல்லது கர்மவினை சார்ந்த பாதிப்பா என்பதை நிர்ணயிப்பது திதிசூனிய பாதிப்பு. தோஷம் தொடர்பான பாகங்கள்.
திதி சூனிய பாதிப்பு இருந்தால் நிச்சயமாக அது தோஷமாக செயல்பட்டு ஜாதகருக்கு கர்ம வினை சார்ந்த பாதிப்புகளை தரும். அதே போல் தோஷம் தொடர்பான பாவங்களுக்கு சுபர்களின் சம்பந்தம் இருந்தால் அது ஜாதகருக்கு சுப பலன்களை வழங்கும்.
ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது. குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது.
கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.
ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கக் கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் இதே முறையில் பலன் எடுக்க வேண்டும். தசா நாதன் அல்லது புத்திநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் சுபத்துவ நிலையில் இருந்தாலும் தோஷங்களால் பாதிப்பு வராது.
அதே போல் தசை வராவிட்டால் என்ன புத்தி வரும் .அதிக வருடங்கள் கொண்ட தசாவின் புத்திகள் நடப்பில் வரும் காலங்களில் கோட்சார கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் புத்தி நாதனுக்கு சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறலாம். சிறிய தசைகளின் புத்தியாக இருந்தால் குறுகிய காலம் கண்ணிமைக்கும் முன் கடந்து விடும்.
ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது முன்னோர்களுக்கு பிதுர் கடன் செய்வது மானிடராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். அந்த வகையில் தற்போது சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலகட்டங்களில் முழுமையாக முறையாக பித்ருக்களை வழிபட்டால் இந்தப் பிறவியிலும் வரக்கூடிய பிறவியிலும் புண்ணிய பலன்கள் அதிகமாகும். பித்ரு தோஷம் பாதிப்பு வராது.
மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாளே மகாளய பட்சம். முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வந்து தங்கும் இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் பிரதமையில் துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். 3 தலை முறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களை நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.
மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்தினால் புண்ணிய பலன்கள் உங்கள் தலைமுறைக்கு வந்து சேரும்.
செல்: 98652 20406
- கிரகணம் நேரம் முடியும் வரை உலக்கை செங்குத்தாக நின்றது.
- இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.
திண்டுக்கல்:
இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நேற்று இரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தென்பட்டது. பல்வேறு இடங்களில் இதனை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தென்படவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வை காண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.
பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயங்களில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி சோதனை செய்வது வாடிக்கை. இதேபோல் திண்டுக்கல் நாகல்புதூர் 3-வது தெருவில் நாகரத்தினம் (73) என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாகவே இதனை பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார். அதேபோல் நேற்று இரவும் கிரகண நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து உலக்கையை நிறுத்தி செய்து காட்டினார். கிரகணம் நேரம் முடியும் வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது.
இதேபோல் எரியோடு அருகே உள்ள ஒரு விவசாயி தனது வீட்டில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைத்து அப்பகுதி மக்களிடம் கிரகணத்தை உறுதி செய்தார். கிரகணத்தை வானில் பார்க்க முடியவில்லை என்றாலும் அதனை இவ்வாறாக உணர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.
கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.
- சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர்.
- இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.
இந்திய நேரப்படி, நேற்று (செப்டம்பர் 7) இரவு 9:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கியது. முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங்கள் நீடித்தது.
இதைத்தொடர்ந்து பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடைந்த நிலையில், 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறி சந்திர கிரகணம் முழுமையாக முடிவடைந்தது.
இது 2022 க்குப் பிறகு மிக நீண்ட கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
உலகின் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சந்திரகிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர். இந்தியாவில் சில பகுதிகளில் மழையின் காரணமாக கிரகணம் புலப்படவில்லை. தமிழ்நாட்டில் சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது.
இரவு 11:01 மணிக்கு, பூமியின் நிழல் சந்திரனை முழுவதுமாக மறைத்தது, இதன் காரணமாக சந்திரனின் நிறம் சிவப்பு நிறமாக மாறியது. சந்திரன் படிப்படியாக சிவப்பு நிறமாக மாறுவதைக் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலவை 'Blood Moon' என்று அழைக்கின்றனர்.
கிரகணம் படிப்படியாக முடிவடைந்து நிலவு அதன் உண்மை நிறத்திற்கு மாறத் தொடங்கியது.
இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிப்பதற்கு பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இன்றைய முழு சந்திர கிரகண நிகழ்விற்கு பிறகு அடுத்து 2028 ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் நிகழும்.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும்.
சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக் கப்படுகிறது.
இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங் கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும். இந்நிலையில், சந்திர கிரகணத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோவில் நடை மாலை 4 மணியளவில் சாத்தப்பட்டது.
- திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
- இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி மாலை 5 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
இதனால் இன்று கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவற்றிக்காக பக்தர்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் இன்று கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
- பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
- வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
சென்னை:
பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். அதாவது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் இந்த நிகழ்வு சாத்தியம் ஆகிறது. இந்த சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி தினத்தன்று மட்டுமே நிகழும்.
அதன்படி, வருகிற 7-ந் தேதி இந்த நிகழ்வு நடக்கிறது. அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும்.
அவ்வாறு சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது, சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது.
அந்த வகையில் 7-ந் தேதி இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 11.01 மணிக்கு ஆரம்பிக்கிறது. முழு கிரகணத்தை நள்ளிரவு 11.42 மணிக்கு பார்க்க முடியும். அதன் பின்னர், 12.23 மணிக்கு முழு கிரகணமும், அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணமும் முடிந்து, அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியைவிட்டு வெளியேறும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதை பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
- ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது.
- சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.
ஜோதிட ரீதியாக பல்வேறு தோஷங்கள் இருந்தாலும் கிரகண தோஷம் சிலரின் வாழ்வில் மீள முடியாத இன்னல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. தோராயமாக ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி 22ம் நாள் ஞாயிற்றுகிழமை 7.9.2025 அன்று 9.56 இரவு முதல் 8.9.2025 அன்று 1.26 நள்ளிரவு வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.
கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்.
சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி புனர்பூசம், விசாகம். கிரக தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு சிவன் கோவில் சென்று வருவது நல்லது.
மேஷம்: மேஷ ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. நான்காம் அதிபதி சந்திரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார்.
இதற்கு குரு பார்வை இருக்கிறது கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் ஆதாயமான பலன் பெறுவார்கள். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் நல்லது. அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசிர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்கு பத்தாமிடமான ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் மூன்றாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம், பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும்.
இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள், முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.
மிதுனம்: மிதுன ராசியினருக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்களின் தன ஸ்தான அதிபதி சந்திரன் மேன்மையான பலன்களை தரக்கூடிய ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூலமாக கொண்டவர்கள், பேங்கிங் 'ஆடிட்டிங்' டீச்சிங் புரோகிதம், ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான மாத்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
கடகம்: ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது ராசி அதிபதி சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் நின்று சந்திராஷ்டமத்துடன் கிரகணம் சம்பவிப்பதால் வழக்குகள், அறுவை சிகிச்சை, வெளியூர் வெளிநாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கவுரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும்.
ஆரோக்கியத்தை காக்கும் மிதமான உணவுகளை சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதால் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

ஐ.ஆனந்தி
சிம்மம்: ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.
கன்னி: கன்னி ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையாளவேண்டும். பிறகுக்கு கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல. பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும். தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.
துலாம்: ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.
குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது நன்னடத்தையுடன் நடந்து கொள்வது சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. பாக்யாதிபதி சந்திரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.
சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
தனுசு: தனுசு ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. அஷ்டமாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும். வீடு மாற்றுவது,வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது.முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.
சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். சாலையோரம் வசிப்பவர்களின் தேவையறிந்து உதவுவது நல்லது.
மகரம்: ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். 7ம் அதிபதி சந்திரன் 2ம் இடத்தில் நிற்பதால் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால்,வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.
சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்.
கும்பம்: கும்ப ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம்.
சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் கடை தாமதங்கள் இருக்கும். சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.
மீனம்: ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சந்திரனுடன் ராகு இணைந்து கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும்.
கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
கிரகண காலங்களில் செய்யக்கூடாதவை
ஞாயிற்றுக்கிழமை 7.9.2025 மாலை 4.00 மணிக்கு பிறகு உணவு உண்ணக் கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம் . அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் கால பைரவரை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.
கிரகண காலங்களில் செய்யக் கூடியவை
ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும். அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். கிரகண காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரியம் குறையும். கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.
செல்: 98652 20406
- மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
- மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகிற 7-ந்தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதனால் அன்றைய தினம் திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 2 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 3 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதனால் அன்றைய தினம் கட்டண தரிசனம், முதியோர் தரிசனம், பொது தரிசனம் ஆகியவை மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் 8-ந்தேதி வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
- மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.
- அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பித்து, மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணிக்கு நிறைவடைகிறது.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரங்களுக்கு முன்பே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் வருகிற 7-ந்தேதி மாலை 3 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை சுமார் 12 மணி நேரம் மூடப்படும். பின்னர் 8-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் மூலம் கோவில் கதவுகள் திறந்து கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்படும். பின்னர் புண்யாஹாவசனம் நடத்தப்படும். தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்க ஸ்ரவணம், அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக நடைபெறும். காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
- அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது.
சென்னை:
வருகிற செப்டம்பர் 7-ந்தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதை சென்னையில் உள்ளவர்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படுகிறது. பூமி, சூரிய ஒளியை சந்திரன் மேல் விழாமல் தடுப்பதால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை ரத்த நிலவு என்றும் சொல்வார்கள்.
செப்டம்பர் 7-ந்தேதி இரவு 8.58 மணிக்கு தொடங்கும் கிரகணம் 8-ந் தேதி அதிகாலை 2.25 மணி வரை தெரியும். இதை எந்த வித கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே பார்க்கலாம். குறிப்பாக சென்னையில் உள்ளவர்கள் கிழக்கு நோக்கி வானத்தை பார்த்தாலே போதும் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம்.
பூமியின் லேசான நிழலுக்குள் சந்திரன் நுழையும் கட்டத்தை பெனும்பிரல் என்று அழைக்கிறார்கள். அதில் தொடங்கி கிரகணம் மேலும் வளர்கிறது. இதை காண்பதற்கு மட்டும் தொலைநோக்கி தேவைப்படலாம். பூமியின் மைய இருண்ட பகுதியான அம்ப்ரா சந்திரனை மறைக்கத் தொடங்கி முழுமை அடையும் போது சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிரத் தொடங்கும்.
இரவு 11.41 மணிக்கு முழுமையான சந்திர கிரகணம் நிகழும். இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 12.22 மணி வரை, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா, தென் அமெரிக்காவின் கிழக்கு பகுதி மற்றும் உலகின் பெருங்கடல்கள் மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் இந்த நிகழ்வு தெரியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2026-ம் ஆண்டு மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. ஆனால் அதை சரியாக பார்க்க முடியாது. அதன் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் தெரியும்.
ஏனென்றால் சந்திர கிரகணம் நிகழ்ந்து முடியும் நேரத்தில்தான் இங்கு நமக்கு சந்திரன் உதிக்கும்.
இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் கூறியுள்ளார்.






