என் மலர்
இந்தியா

மார்ச் 3-ந்தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவிலில் 10½ மணி நேரம் நடை அடைப்பு
- வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது.
- பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
மார்ச் மாதம் 3-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அன்று நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிகிறது. பாரம்பரிய முறைப்படி கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும்.
அதன்படி, மார்ச் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சுமார் 10½ மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
அதன்பிறகு புனித சடங்குகள் நடக்கிறது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரவு 8.30 மணியளவில் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணத்தால் மார்ச் 3-ந்தேதி அஷ்டதள பாத பத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நெறிமுறைகளுக்கு உட்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம், 5 வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், காணிக்கையாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
பக்தர்கள் மேற்கண்ட தகவல்களை கவனத்தில் கொண்டு எந்தவித சிரமமும் ஏற்படாதவாறு தங்கள் திருமலை யாத்திரையை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






