என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நிதிஷ்குமார் ஹாட்ரிக் வீண்: சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆந்திராவை வீழ்த்தியது மத்திய பிரதேசம்
- டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புனே:
சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.
இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.
மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.
அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.






