என் மலர்
நீங்கள் தேடியது "DMK"
- 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான்.
'சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவிலியர்களை பணி நிலைப்பு செய்ய என்ன தடை? அதிகாரத் திமிர், ஆணவத்தில் தி.மு.க அரசு ஆட்டம் போடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான செவிலியர்களை தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கடந்த 4 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, செவிலியர்களை மிரட்டி பணியவைக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8.322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிலைப்புக் கோரி கடந்த 18-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் திமுக அரசு, அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. மேலும் பேச்சு நடத்த அழைக்கப்பட்ட தங்களிடம், தேர்தல் வாக்குறுதி கொடுத்தா நிறைவேத்தணுமா? இது அரசோட கொள்கை முடிவு அவ்வளவுதான்.
நானே பார்க்குறேன் நிறைய இடங்கள்ல தேவைக்கும் அதிகமா வேலையே செய்யாம ஆட்கள் இருக்காங்க. தேர்தல் நேரத்துல போராட்டம் பண்ணி நெருக்கடி கொடுக்க பார்க்குறீங்களா? என்ன பண்ணுவீங்க? போராடுவிங்க.... போராடிக்கோங்க என்று சுகாதாரத் துறை அமைச்சர் மிரட்டியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் குற்றஞ்சாட்டியது. இந்த அணுகுமுறையை ஏற்கவே முடியாது.
அதுமட்டுமின்றி, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், காலியிடங்களே இல்லாத நிலையில் அவர்களை பணி நிலைப்பு செய்யவே முடியாது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த விளக்கம் மிகவும் விநோதமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, காலியிடங்களே இல்லை என்பது அப்பட்டமான பொய் தான்.
நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படாத அனைத்து பணியிடங்களும் காலியிடங்கள் தான். அந்த வகையில் ஒப்பந்த செவிலியர்கள் பணியாற்றும் 8322 பணியிடங்களும் காலி இடங்கள் தான். அந்த இடங்களில் ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க எந்தத் தடையும் இல்லை, அவ்வாறு செய்ய ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாதது தான் ஒரே ஒரு தடை ஆகும்.
நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்களோ, அதே முறையை பின்பற்றி தான் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்தில் போட்டித் தேர்வு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. அத்தகைய சூழலில் அவர்கள் அனைவரையும் ஒரே ஓர் அரசாணையின் மூலம் பணி நிலைப்பு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் அதை உச்ச நீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. ஆனால், வாய்கிழிய சமூகநீதி பேசும் திமுக அரசுக்கு அதை செயல்படுத்துவதற்கு மட்டும் மனம் வராது. சமூகநீதி என்றாலே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களும் நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் செய்கின்றனர். அதனால், தங்களுக்கும் சம ஊதியம் வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றமும் அதை ஏற்று சம ஊதியம் வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தது.
செவிலியர்களிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீர்கள். ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களுக்கு சம ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள். மத்திய அரசு பணம் தரவில்லை என்று கூறாதீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் ஏன் ஒரு தனித்திட்டத்தை தொடங்கக்கூடாது? உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தானே? அதை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது. இலவசங்களை கொடுக்க பணம் இருக்கிறது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள்? ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? என்று கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கண்டனம் தெரிவித்தது. அதற்குப் பிறகாவது செவிலியர்களுக்கு பணி நிலைப்பும், சம ஊதியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 16-ஆம் தேதி வலியுறுத்தினேன். ஆனால். சமூகநீதியில் அக்கறை இல்லாத திமுக அரசு, செவிலியர்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டது.
இப்போது ஒப்பந்த செவிலியர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 45 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில் பா.ம.க. ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கலைஞர், 01.06.2006 முதல் அவர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தார். அதேபோல் இப்போது செய்ய எந்தத் தடையும் இல்லை.
ஆனால். அதிகாரம் தந்த போதை, ஆணவம், அதிகாரத் திமிர் ஆகியவை தலைக்கு ஏறி ஆட்டம் போடும் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்து சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் தலையில் ஏறிய அனைத்தும் இறங்கும் வகையில் அதிரடியான தீர்ப்பை வரும் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள். அதன்பின் அமையும் ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.
நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார்.
- இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
- தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.
சென்னை:
சென்னையில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பட்டியலை பொறுத்தளவில் அதிலுள்ள சிறு பிரச்சனைகளை களைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நின்றார். அதாவது, வாக்களிக்கின்ற உரிமை இருக்கின்ற எவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கக் கூடாது, வாக்களிக்க தகுதி இல்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கக் கூடாது என்பதுதான் தி.மு.க.வின் தாரக மந்திரமாகும்.
இந்த தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு முன்பே தமிழ்நாடு முழுவதும் பாகம் வாரியாக முகவர்களை நியமித்த ஒரே இயக்கம் தி.மு.க. மட்டும்தான். எங்கள் முகவர்கள் களத்திற்கு சென்று வாக்களிக்கின்ற உரிமையுள்ள எவரையும் விடுபடாமல் பாதுகாப்போம். 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் இதே திருத்தப்படாத வாக்காளர் பட்டியலை கொண்டு தான் தேர்தலை சந்தித்து அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. எதிர்கட்சி தலைவர், வார்த்தைகளை கொட்டுகின்ற போது அந்த வார்த்தைகளை தகுதியான கருத்துக்களை கூறுகின்றதா என்று ஆராய வேண்டும்.
அவர்கள் ஆட்சியில் இருந்த போது இதே வாக்காளர் பட்டியலை வைத்துதானே ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது அவர் கூறுவதுபோல் போலி வாக்காளர்கள் தி.மு.க. பக்கம் இருந்திருந்தால் அவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும். தான் திருடி பிறரை நம்பாள் என்ற பழமொழி இந்த கூற்றுக்கு உகந்ததாக இருக்கும்.
திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியதோடு, 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி காட்டி தமிழ் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி இந்த ஆட்சியாகும். இது அனைத்தையும் முருகப் பெருமான் உணர்ந்து எங்கள் முதலமைச்சரோடு கை கோர்த்து கொண்டிருக்கிறார். எந்த சக்தியாலும் முருகரிடமிருந்து எங்களை பிரிக்க முடியாது.
இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று நினைப்பவர்களை இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் எந்த பிரிவினைவாதத்திற்கும் இடம் தர மாட்டார் என்பது சீமானுக்கு தெரியும். தி.மு.க.வை பொறுத்தளவில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
- வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.
- கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது.
நாகப்பட்டினம்:
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.
அங்கு மாலை 6 மணிக்கு காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் படத்திறப்பு நிகழ்ச்சி கலைஞர் கோட்டம், அஞ்சுகம் அம்மையார் திருமண அரங்கில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருவிடம் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளாங்கண்ணியில் நடைபயிற்சி சென்றார். பின்னர் நாகை துறைமுகத்துக்கு சென்று அங்கு பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர் நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
எத்தனையோ மாவட்டங்களுக்கு சென்றாலும் நாகை இங்கு வருவது எனது சொந்த ஊருக்கு வருவது போன்று நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலவர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் என மும்மத வழிபாட்டு தலங்களும் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
நாகூர் ஹனீபா, அண்ணா, கருணாநிதி ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்றவர். கருணாநிதியின் பேச்சு, நாகூர் ஹனீபாவின் பாட்டு ஆகிய 2 பேரின் குரல்கள் தான் திராவிட இயக்கத்தை வளர்த்தது. ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே இறைவன் என வாழ்ந்தவர் நாகூர் ஹனீபா. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. வைக்கம் நூற்றாண்டு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா என பல்வேறு நூற்றாண்டு விழாக்களை தி.மு.க. அரசு கொண்டாடி உள்ளது.
இந்தி திணிப்பை எதிர்த்து பெரியார் அறிவித்த பேராட்டம் தான் கருணாநிதியையும், நாகூர் ஹனீபாவையும் போராட்ட களத்துக்கு கொண்டு வந்தது. இந்தி திணிப்பை எதிர்த்து அன்று போராடினோம். அதேபோல் தற்போது வேறு வழியில் மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதனை தமிழக முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் என உறுதியாக கூறுகிறார். மும்மொழிக்கொள்கையை ஏற்றால் தான் கல்விநிதி என்கிறது மத்திய அரசு. இப்படி பல்வேறு வழிகளில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.
தனது குரல் வளத்தால் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் நாகூர் ஹனீபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு முதலமைச்சர் நாகூர் ஹனீபா தெரு என பெயரிட்டார். நாகூர் ஹனீபா மறைந்தபோது கலைஞர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் நாட்டை மதநல்லிணக்கம் மிகுந்த மாநிலமாக வைத்திருக்க வேண்டும். தி.மு.க. அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துள்ளது. நாகூர் ஹனீபாவின் பாடல்களை மதுரை ஆதீனம் சிறப்பாக பாடி காட்டுவார். தமிழகம் என்றென்றும் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும்.
- வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அப்போது மாவட்டக்கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார்.
- அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார். அதில் கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும், உள்கட்சி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக (ஒன் டூ ஒன்) வரவழைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதுவரை 49 நாட்களில் 112 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.
- சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.
தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, 'கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் - நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் - அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் 'மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் 24.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில், தலைநகர் சென்னையிலும் - மாநிலத்தில் உள்ள அனைத்து கழக ஒன்றியங்களிலும் 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – மாநில நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சியைச் சார்ந்த அனைத்து கூட்டணி அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசையும் - ஒத்து ஊதும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும் முழக்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
- நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக, Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
- சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், கலசப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
- இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
- இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார்.
மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது
"கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் அன்பை, மனிதநேயத்தை, சமத்துவத்தைதான் மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அதைவிட முக்கியம் அவரது பிறந்தநாளை மட்டும் கொண்டாடினால் போதாது, அவரது கருத்துகளையும் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர்தான் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தால்கூட உழைத்தால் உயரலாம் என்பது நமது திராவிட இயக்கம். இயேசு கிறிஸ்துவை போல. அதற்கு எடுத்துக்காட்டு நமது பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி. இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள்.
அதுபோல இரக்கம் என்பது எல்லோரிடத்திலும் இருக்கவேண்டும் என கிறிஸ்தவம் கூறுகிறது. அதைத்தான் நமது திராவிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு இரக்க உணர்வைவிட வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள்மீதும். மதம், மொழி, சாதியின்பேரில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான மாநிலம்.
இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார். ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. திமுக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இருந்துள்ளது" என தெரிவித்தார்.






