என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.என்.ரவி"

    • மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
    • ஆர்.என்.ரவி காரல் மார்க்சை அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். அவரின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.

    வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.

    1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

    அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்படவில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தியிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள்.

    ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே சபல புத்திக்காரி, குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.

    பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களை கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்து சமர் புரிவதை சபதமாக ஏற்றிருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு திருந்துகிற ஆள் இல்லை. பட்டுக்கொண்டே இருப்பேன், என்ன பந்தயம் கட்டுகிறாய் என்று கேட்கும் ஆர்.என்.ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
    • அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.

    இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

    பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார். 

    • மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதனால் இந்த மிரட்டல் புரளி என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    • நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாக தெரிவித்தார்.
    • உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டதற்கு, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காத பட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர்.

    இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஜெகதீப் தன்கர், நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜனாதிபதிக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

    ஆளுநர், ஜனாதிபதி அதிகாரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இவர்களின் சாந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    • தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
    • வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக சேர்க்க பேசி வருகிறேன்.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது :

    புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதைத்தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப் படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் முடிவு கிடையாது. உங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக நாம் இருப்போம். போட்டி நிறைந்த உலகில் நாம் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.

    திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதற்கு திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும். அதன் ஒரு கட்டமாக காசி தமிழ் சங்கத்தில், பிரதமர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக சேர்க்க முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
    • ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

    நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.

    சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

    கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.

    இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

    மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    கன்னியாகுமரி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) காலை கன்னியாகுமரி வருகிறார்.

    அவரை வரவேற்பதற்காக வும் அவரது சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர்மாளிகைக்குவரும்அவருக்குமாவட்ட நிர்வாகம்சார்பில்சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கிறார்கள். வரவேற்புநிகழ்ச்சிமுடிந்த தும் அவர் மாலை 6.20 மணிக்குகன்னியாகுமரி கடலில் சூரியன்மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன் பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசெல்கிறார். அங்குஅவர் பயபக்தியுடன் சாமிகும்பிடுகிறார். இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் காலையில் கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்கிறார். அதன் பிறகு அவருடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதி பதி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டு சென்றதும் கவர்னர் ஆர்.என். ரவி சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டியும் கன்னியாகுமரியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு என வைகோ கூறியுள்ளார்.
    • இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

    ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்து விட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்திவைத்தாலே நிராகரிப்பதாகி விடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் குழு சந்தித்தது.
    • நிதி அமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாகக் கூறப்படும் ஒலி நாடாவின் (ஆடியோ) உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பா.ஜ.க. தலைவர்கள் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பார்கள் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் குழு இன்று மாலை சந்தித்தது. இந்தச் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.

    • மாமல்லபுரத்தில் சி-20 சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது.
    • இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    உலகம் ஒரே குடும்பம் என்ற நோக்குடன் வசுதெய்வ குடும்பகம் என்ற பெயரில் சின்மயா மிஷன் நடத்தும் சி-20 சர்வதேச 3நாள் மாநாடு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    சி-20 இந்தியா-2023 என்பது ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.

    இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாசாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்ட முன்னுதாரணங்களைப் பற்றி ஆராய்ந்து விவாதிக்க உள்ளனர்.

    நாளை இசையமைப்பாளர் இளையராஜாவும், நாளை மறுநாள் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

    ×