என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    • மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
    • ஆர்.என்.ரவி காரல் மார்க்சை அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். அவரின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.

    வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.

    1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

    அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்படவில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தியிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள்.

    ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே சபல புத்திக்காரி, குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.

    பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களை கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்து சமர் புரிவதை சபதமாக ஏற்றிருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு திருந்துகிற ஆள் இல்லை. பட்டுக்கொண்டே இருப்பேன், என்ன பந்தயம் கட்டுகிறாய் என்று கேட்கும் ஆர்.என்.ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
    • மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?

    கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.

    எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
    • சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் இன்று காலை கரூர் வந்தனர்.

    அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே ஊரைச் சேர்ந்த அதாவது ஏமூர் புதூரைச் சேர்ந்த நான்கு பேரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    பின்னர், சுங்ககேட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஹேமலதாவின் கணவர் மற்றும் அதன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
    • 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    • இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
    • தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

    ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

    இதைதொடர்ந்து,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்?

    எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

    தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்
    • 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

    இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வுக்கு 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக வாஞ்சிநாதன் அளித்துள்ள புகார் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • நீதிமன்றத்தில் "நீ ஒரு கோழை" என்று வழக்கறிஞரை குறிப்பிட்டதை சிபிஎம் கட்சி கண்டிக்கிறது.
    • ஒரு வழக்கறிஞரை குற்றவாளி போல் பாவிப்பதையும், மிரட்டுவதையும் ஏற்க முடியாது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    நீதிபதிகளின் தீர்ப்புகளில் ஐயப்பாடுகள் எழும்போது இவ்வாறு புகார்கள் எழுப்பப்படுவது சட்டப்படியானது தான். அதுவும் நீதித்துறைக்குள்ளேயே விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியுள்ளார்.

    ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இது எவ்வாறு இவருக்கு கிடைக்கப் பெற்றது என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளித்திட வேண்டும். ஏனெனில், புகார் மனுவை உச்சநீதிமன்றம் தவிர வேறு எவருக்கும் அனுப்பவில்லை என்று புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், 25.07.2025 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டதும், ஒரு நீதிபதியின் மீதான புகாரை அவரே விசாரிப்பதும் இயற்கை நீதிக்கு எதிரானது.

    அதேபோல், விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் "நீ ஒரு கோழை" என்று வழக்கறிஞரை குறிப்பிட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு, நீதிகேட்டு புகார் அளித்த ஒரு வழக்கறிஞரை குற்றவாளி போல் பாவிப்பதையும், நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டுவதையும் ஏற்க முடியாது. மேலும், ஆதாரங்களுடன் புகார் அனுப்பியுள்ளதாக புகார்தாரர் தெரிவித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இதன் மீது உரிய நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
    • மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.

    அவர் உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆர்.எஸ்.எஸ் உடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒரே கருத்தியலில் செயல்படுவது போல் உள்ளது என்று கூறினார்.

    ராகுல் காந்தியின் இக்கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.
    • இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள் அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அஜித்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளிகோவிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோவிலுக்கு காரில் வந்துள்ளார், காரை கோவிலின் தற்காலிக பணியாளரான அஜித் அவர்களிடம் பார்க்கிங் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு கார் ஓட்டத் தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்ததாகவும் கோவிலுக்குச் சென்று திரும்பிய சிவகாமியும் அவரது மகளும் திரும்பவும் காரை எடுத்த போது காரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்று அஜித் அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித் தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன் அவர்கள் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிகிறது.

    புகாரின் பேரில் காளிகோவிலின் தற்காலிக ஊழியர் அஜித் அவர்களை தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது வாகனத்தில் வைத்தே சுற்றியுள்ளனர். நகை மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் சரமாரியாக ஆறு காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். பிறகு, காளிகோவிலுக்கு பின்புறம் ஆட்டோவில் அழைத்துச்சென்று அங்கேயும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவிலேயே அஜித் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அஜித்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று, பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.

    தற்போது அஜித் குடும்பத்தினரும், பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அஜித் மரணத்திற்கு காரணமாக இருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அஜித் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அஜித்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, பினராயி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.
    • இ.எம்.எஸ் நம்பூதிரியாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனை, மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, பினராயி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

    இ.எம்.எஸ் நம்பூதிரியாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாநாடு கடந்த 1-ந் தேதி தொடங்கியது.
    • புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம்.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் பொது மாநாடு தொடங்கியது.


    இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சி.பி.ஐ.எம்.எல். விடுதலை பொதுச்செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி.பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

    மாநாட்டில் சாலமன் பாப்பையா, ராஜமுருகன், சசிகுமார், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றி மாறன், பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டின் நிறைவு நாளான இன்று மாலை செந்தொண்டர் அணி வகுப்பு பேரணி நடைபெற உள்ளது. மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.

    இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே சங்கரய்யா நினைவு திடலில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது.

    வெங்கடேசன் எம்.பி. வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரளா முதல்-அமைச்சர் உறுப்பினர் ஆகி விஜயன் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    வரவேற்பு பொருளாளர் மதுக்கூர் ராமலிங்கம் நன்றி கூற மாநாடு நிறைவு பெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் மறைவையடுத்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும் சில பொலிட் பீரோ உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் தவாலேவை தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பொலிட் பீரோவில் உள்ள மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, ஜி. ராம கிருஷ்ணன், பினராய் விஜயன், மாணிக் சர்க்கார் மற்றும் சுர்ஜ்ய காந்த மிஸ்ரா ஆகியோருக்கு 75 வயது நிரம்பி உள்ளதால், அவர்களுக்கு பதிலாக புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

    இவர்களில் பினராய் விஜயன் மீண்டும் தனக்கு கேரள முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • . வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது.

    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    அகில இந்திய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக இன்று காலை மதுரை தமுங்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை வழங்க, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் பத்மநாபன் செங் கொடியை பெற்றுக்கொண் டார். பின்னர் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கொடியேறி பாலகிருஷ்ணன் நினைவு அரங்கில் கட்சியின் பொது மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக்க சர்க்கார் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. எம்.எல். விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் பொது மாநாடு தொடங்கி நடைபெற்றது.

    முன்னதாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மாநாட்டு அரங்கினை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 5 மணிக்கு கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்னும் தலைப்பில் மாநில உரிமைகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கிற்கு மத்திய குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

    மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்கிறார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உரையாற்றுகிறார். கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, சி.பி.ஐ.எம். ஒருங்கிணைப் பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, வெற்றிமாறன், பிரகாஷ் ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல், சசிக்குமார், பிரகாஷ்ராஜ், ராஜூமுருகன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். பொது மாநாட்டை தொடர்ந்து இன்று பிற்பகல் தொடங்கி வரும் 6-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    மாநாடு நடைபெறும் 6 நாட்களும் மாலை நேரங்களில் தோழர் ஜானகி அம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. வருகிற 6-ந்தேதி மதுரை பாண்டி கோவில் எல்காட் அருகில் இருந்து சுமார் 25 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடக்கிறது. இதனை வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்கின்றனர். அன்று மாலை 4 மணிக்கு வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    அந்நிகழ்வில் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராய் விஜயன், அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ராமகி ருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் ரெயில், வாகனங்கள் மூலம் நேற்று காலை முதலே மதுரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் மதுரை மாநகர் முழுவதும் செங்கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு என்பதால் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள் முக்கிய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

    ×