என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchami"

    • வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
    • வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.

    வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மனை வழிபட்டால் போதும் வாழ்வில் உள்ள துன்பங்கள் அகலும். தீய சக்திகள் தலைதெறிக்க ஓடும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் என்பது நம்பிக்கை.

    நாளை வளர்பிறை பஞ்சமி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்

    * வராகி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள், மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கேற்றி வழிபடலாம்.

    * சாமி தரிசனம் செய்த பின் அம்மனுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து கோவிலில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.

    * வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது மறக்காமல் வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

    வராகி மூல மந்திரம்

    ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த்தாளி, வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம:

    ருத்தே ருந்தினி நம: ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு.

    * கோவிலில் நீங்கள் விளக்கேற்றும் போதே அன்னையின் சந்நிதியில் அமர்ந்து, மனம் முழுக்க வராகியை மட்டும் நினைத்து, மனதுருகி மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.


    * அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் அமர்ந்து வராகி மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை மனதார சொல்லி வழிபடலாம்.

    * வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.

    * ஒருவேளை வீட்டில் வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, வராகியை மனதில் நிறுத்தி வராகி மந்திரத்தை சொன்னாலே போதும் வராகி அம்மன் தீமைகளில் இருந்து நம்மை காத்திடுவாள்.

    வராகி மந்திரம்

    "ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி"

    தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். செல்வமும், நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் வராகி மந்திரத்தின் பயனால் வராகி அம்மனின் அருளைப் பெறலாம் என்கின்றனர் வராகி பக்தர்கள்.

    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
    • 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    • கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும்.
    • வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும்.

    நாளை (புதன்கிழமை) பஞ்சமி திதியாகும். நாளை காலை 6.36 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. 14-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.24 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த ஆடி மாதம் தேய்பிறையில் வரும் இந்த பஞ்சமி திதிக்கு "ரக்ஷா பஞ்சமி" என்று பெயர். இந்த பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாடு மிக மிக முக்கியமானதாகும்.

    பொதுவாகவே பஞ்சமி தினத்தில் செய்யப்படும் வராகி வழிபாட்டுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும் என்பார்கள். ஆனால் ஆடி மாத தேய்பிறையில் செய்யப்படும் வராகி வழிபாடு இரட்டிப்பு பலன்கள் தரக்கூடியதாகும்.

    இந்த ஆடி மாதத்தில் இந்த பலனை நீங்கள் பெற வேண்டுமானால் முதலில் வராகி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

    வராகி என்ற பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் ஏழு பேரில் ஐந்தாவதாக உள்ளவள். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

    அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி.

    இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும். பொதுவாக மஞ்சள் உடையும், முக்கியமாக கலப்பையும், உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள். ஆக தண்டம் ஏந்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பார்கள். நெல்லையப்பர் கோவில் வராகி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சை பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.

    ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி (அகிலாண்டேஸ்வரி அம்மை) வராகி சொரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

    கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தைய உன்னதமான நிலை.

    வராகி வராகரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்லப்படுகிறாள். அதில் வராகி அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராகியின் தத்துவத்தை உணர்த்தி விடும்.

    வராகம் என்றால் என்ன? பன்றி. வராக மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராகிதான். என்ன உதவி தெரியுமா?

    பன்றிக்கு இயல்பிலேயே வானை நோக்கும் சக்தி கிடையாது. எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராக அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன் மூக்கின் நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும். ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா. ஆக அந்த உந்துதலுக்கு (உயர்த்துதலுக்கு) உதவியவள் தான் வராகி. ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

    வராகி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். அதாவது குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.

    குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும். எதிரிகள் குறைவார்கள். ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. இதனால் தான் வராகிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

    வராகி வழிபாட்டின் பலன் தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

    ஆனால் ஒரு விஷயம், வராகி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வராகி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

    ஆனால் வராகி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். ஆக வராகி வழிபாட்டால், வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், ஸ்ரீ வராகிக்கு உகந்ததாக இரவு நேர வழிபாட்டைச் சொல்வர். எனவே, இருள் கவ்விய மாலை வேளையில், வராகியை தரிசித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

    வராகிக்கு பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்துப் பிரசாதமாக வாங்கிச் செல்வது விசேஷம்.

    திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

    வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வராகியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வராகியை வழிபட வேண்டும்.

    பார்வதிதேவியின் போர்ப்படைத்தளபதியாக இவள் விளங்குவதாக சக்தி வழிபாட்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வராகி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராகி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.

    நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வராகி தேவி. மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வராகி தேவி.

    பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வராகி மாலா போற்றுகின்றது. இத்தகைய சிறப்புடைய வராகிக்கு தமிழகம் முழுவதும் ஆலயங்கள் இருக்கின்றன. நமது சென்னையில் பல ஆலயங்களில் வராகிக்கு சன்னதி இருந்தாலும் தனி ஆலயம் என்று பார்த்தால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அருகில் இருக்கும் வராகி அம்மன்தான் அனைவருக்கும் தெரிய வரும். சைதாப்பேட்டை நுழைவு வாயலில் பிரதான சாலை ஓரத்திலேயே இந்த அம்மன் வீற்றிருந்து தன்னை நம்பிக்கையோடு நாடி வரும் பக்தர்களை வருந்த விடாமல் பலன்களை கொடுத்து கொண்டு இருக்கிறாள். இந்த வராகியை வராகி வள்ளி என்றும் அழைக்கிறார்கள். சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வராகி அம்மன் ஆலயம் இந்த இடத்தில் உள்ளது.

    இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கும் நம்பிக்கை தெய்வமாக வராகி அம்மன் இருந்து வருகிறார்.

    2015-ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு 3 அடி உயரத்தில் வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 3 நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முதல் நவராத்திரி வசந்த நவராத்திரி. அந்த நவராத்திரியின் போது அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். 2-வதாக ஆஷாட நவராத்திரியையொட்டி 10 நாட்கள் விழா நடைபெறும். 10-வது நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அடுத்த நவராத்திரி சாரதா நவராத்திரி. இந்த நவராத்திரியையொட்டி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    மாதத்திற்கு 2 முறை பஞ்சமி வரும். அதில் ஒன்று வளர்பிறை பஞ்சமி, 2-வது தேய்பிறை பஞ்சமி. இந்த 2 பஞ்சமியும் அம்மனுக்கு மிகுந்த விசேஷ நாளாகும். இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் சிறப்பாக நடைபெறும். அம்மனுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதம் 3-வது வாரம் வள்ளி அம்மனுக்கு கூழ் படைத்தல் நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு அன்னாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவது சிறப்பு. வராகி அம்மன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.



    மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோயாளிகள் இங்கு வந்து வராகி அம்மனின் அருளால் பூரண குணமாகி செல்கின்றனர். பல ஆண்டுகளாக தீராத வழக்குகள் அம்மனின் அருளால் முடிவுக்கு வந்ததால் பக்தர்கள் பலர் நேரில் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு நன்றி செலுத்தி செல்கின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கு வந்து வழிபட்டு பதவி உயர்வு மற்றும் பலன்களை பெற்று செல்கின்றனர். மேலும் பல அதிசயங்கள் கோவிலில் நடந்து உள்ளது. பிரார்த்தனை நிறைவேறிய பணக்காரர்கள் பலர் கோவிலில் வந்து சேவை செய்கின்றனர்.

    ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் போது கர்ப்பிணி பெண்களை அமர வைத்து பூஜை செய்யப்படுகிறது. அடுத்ததாக குழந்தை இல்லாத பெண்களை அமர வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

    வளைகாப்பு நிகழ்ச்சி பூஜையில் அமர்ந்த பெண்கள் பலருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளது. நெல்லை மாவட்ட ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியமில்லாமல் மனமுடைந்து இருந்தார். இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டு அம்மனை தரிசித்து சென்றார்.

    கோவிலில் தரிசனம் செய்து சென்ற சில நாட்களிலேயே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த அற்புதம் நிகழ்ந்து இருக்கிறது. கோவிலில் தினந்தோறும் நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய வெளிமாநில பக்தர்கள் பலர் விமானத்தில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பெரும்பாலானோர் மலேசியாவில் இருந்து வருகின்றனர்.

    வராகி அம்மனுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கும் தொடர்பு உள்ளது. காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது போல் வராகி அம்மனும் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவில் மூடப்படும். மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு 9½ மணிக்கு கோவில் மூடப்படும்.

    • தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும்.
    • முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது.

    கருடபஞ்சமி தொடர்பாக கூறப்படும் கதை

    முன்னொரு காலத்தில் 7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர். ஒருநாள் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒன்று நாகத்தைக் கவ்விக்கொண்டு சென்றது. அப்போது அந்த நாகம் கக்கிய விஷம் தங்கை கொண்டு சென்ற கஞ்சியில் விழுந்துவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அந்த கஞ்சியை பரிமாறினாள். அதை உண்ட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

    "தினமும் செய்வது போலத்தானே செய்தோம். இன்று இப்படி ஆகிவிட்டதே... என்று அழுது புரண்ட அவள், தன் அண்ணன்களை காப்பாற்ற வேண்டி இறைவனிடம் மன்றாடினாள். சிவனும், பார்வதியும் அங்கே தோன்றி அவள் அழுகைக்கான காரணத்தை கேட்டனர்... அவள் நடந்ததைக் கூறினாள். அதற்கு அவர்கள், "இன்று கருடபஞ்சமி. நீ அதை மறந்து, அதற்குரிய பூஜை செய்யாமல் வந்துவிட்டாய். அது தான் உன் பிரச்சினைக்கு காரணம்.

    இங்கேயே இப்போதே நாங்கள் சொல்வதை போல் நாகருக்கு பூஜை செய். குங்கணக்கயிற்றில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண்எடுத்து, அட்சதை சேர்த்து, இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்து. அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை அவளுக்கு உணர்த்தினர். அவளும் அதேபோல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதை பிரதிபலிக்கும் வகையில் கருடபஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

    இன்றும் கூட, கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப்பெற்றுக்கொள்வதை சில இடங்களில் காணலாம்.

    விரதமுறை

    வளர்பிறை பஞ்சமியில் கருடனுக்குரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து குளித்து தூய்மையான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்களைக் கொண்ட கோலங்கள் போட வேண்டும். நடுவில் ஒரு பலகை போட்டு, அதன் மேல் தலை வாழை இலையை விரித்துப் பச்சரிசியைக் கொட்டி வைத்து, அதன் மேல் சக்திக்கு தகுந்தபடி பொன், வெள்ளி, தாமிரம், அல்லது மண் இவற்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட பாம்பின் வடிவம் ஒன்றைச் செய்து அரிசியின் மேல் வைக்க வேண்டும். பாம்பின் படத்தின் நடுவில் மஞ்சளால் செய்யப்பட்ட கவுரிதேவியின் வடிவத்தை வைத்து அலங்காரங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும். பருத்தி நூலால் ஆன மஞ்சள் சரட்டை சார்த்தவும். இப்படிப் பூஜை செய்பவர்களின் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக நிறைவேறும். சகல விதமான செல்வங்களையும் பெறுவார்கள். அதோடு முக்தியும் அடைவர். இந்த பூஜை செய்வதனால் நாக தோஷம் நீங்கும்.



    கருட புராணம்

    முக்திக்கு வழி செய்வதில் கருடனின் பங்கு அதி முக்கியமானதாக அமைகிறது. இதைப் பற்றி விவரமாக அறிய கருட புராணத்தை கோவில் அல்லது பொது இடங்களில் அமர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம். கருட புராண புத்தகம் 19 ஆயிரம் சுலோகங்களை உள்ளடக்கியது. கடைசி அத்தியாயத்தில் மரணத்திற்குப் பின் மனிதனின் நிலையைப் பற்றிய தகவல்களும், அவரவர் செய்த வினையின் அடிப்படையில் சொர்க்க மற்றும் நகர உலக பலன் போன்ற செய்திகளும் அடங்கி உள்ளன. குறிப்பாக இந்து தர்மத்தில் ஓர் உயிர் மனித உடலை விட்டுப் பிரிந்த நேரத்தில் வீட்டில் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புராணமாக கருட புராணம் சொல்லப்பட்டுள்ளது.

    பண வரவுக்கு கருட பஞ்சமி விரதம்

    கருட பூஜையை வீட்டின் முன்பகுதியில் உள்ள திறந்த வெளியில் வைத்து செய்தால் சிறப்பு. ஒரு தட்டில் நெல்லை பரப்பி அதன் மீது தேங்காய், மா இலை, சந்தனம், குங்குமம் வைத்து பூஜையை தொடங்க வேண்டும். முதலில் விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை செய்யும் பெண்கள் நல்லமுறையில் விரதம் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் பூஜை முடிந்ததும் விண்ணில் கருடன் பறக்கும். அதனை கண்டு தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தான் விரதத்தை முடிக்க வேண்டும். ஒருவேளை கருடனை தரிசிக்க முடியாதவர்கள் அன்றையதினம் அவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் மறுநாள் தான் விரதத்தை முடிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் பிறருக்கு தன்னால் இயன்றதை தானம் செய்யலாம். இப்படி செய்தால் பண வரவுக்கு பஞ்சமே இருக்காது.

    பெருமாளின் வாகனமாக விளங்கும் கருடனுக்கு உரிய விரதம் தான் கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கருட பஞ்சமி விரத தினமாகும்.

    பலன்கள்

    * கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு.

    * கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    * கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.

    * திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.

    * செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    * புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.

    * வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.

    * வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    • திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
    • பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.

    பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.

    பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ'. இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    • திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • கிருஷ்ண எனும் சொல்லுக்கு ‘கருமை’ என்றும் பொருள்.

    திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.

    1. சுக்ல பட்சம் (அல்லது) பூர்வ பட்சம் : வளர்பிறை

    2. கிருஷ்ண பட்சம் (அல்லது) அமர் பட்சம் : தேய்பிறை என இரண்டு வகைப்படும். சுக்லம் எனும் சமஸ்கிருத சொல்லுக்கு 'வெண்மை' என்றும், கிருஷ்ண எனும் சொல்லுக்கு 'கருமை' என்றும் பொருள்.

    பிரதமை முதல் அமாவாசை வரை தேய்பிறை 'கிருஷ்ண பட்சம்' அல்லது அமர பட்சம். பிரதமை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை 'சுக்ல பட்சம்' அல்லது பூர்வ பட்சம்.

    1. பிரதமை, 2. துவதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பௌர்ணமி (அல்லது) அமாவாசை.

    சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் இருப்பது 'அமாவாசை' ஆகும். சூரியன் நின்ற காகைகளுக்கு நேராக 180 டிகிரி சந்திரன் இருந்தால் 'பௌர்ணமி' ஆகும். சூரியனில் இருந்து சந்திரன் நகர்ந்து செல்லச்செல்ல சந்திரனின் பிறை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக கண்ணுக்கு தெரிய வரும். இவ்வாறு தினமும் வளர்ந்து வருவது 'வளர்பிறை' காலம் ஆகும்.

    பௌர்ணமிக்கு பின் முழுமதியில் இருந்து தினம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தெரியவரும். இவ்வாறு தேய்வதால் 'தேய்பிறை' காலம் என்கிறோம். இவ்வாறு வளர்பிறை காலம் 15 நாட்களும், தேய்பிறை காலம் 15 நாட்களும் கொண்டது ஒரு மாதமாகும்.

    திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

    பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன்.

    துதியை:- கீர்த்தி உடையவன், சத்திவாசகன், பொய் சொல்லாதவன், பொருள் சேர்ப்பவன், தன் இனத்தாரை ரட்சிப்பவன்.

    திருதியை:- எண்ணியதை முடிப்பவன், தனவான், பயம் உள்ளவன், பராக்கிரமம் உடையவன், சுத்தமுடையோன், திருக்கோவில் கைங்கரியம் செய்பவன்.

    சதுர்த்தி:- அளவற்ற காரியங்களை சிந்திப்பவன். தேச சஞ்சாரம் செய்பவன், எல்லோருக்கும் நண்பன், அருள் மந்திரவாதி.

    பஞ்சமி:- வேத ஆராய்ச்சி உடையோன், பெண் மேல் அதிக பிரியமுள்ளவன், கருமி, துக்கம் உடையோன்.

    சஷ்டி:- பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி.

    சப்தமி:- செல்வம், தயாள சிந்தனை உடையோன், பராக்கிரமசாலி, எதிலும் கண்டிப்பு உடையவன்.

    அஷ்டமி:- புத்ர செல்வம் உடையோன், காமூகன், பிறவி செல்வம் உடையவன், லட்சுமி வாசம் உடையோன்.

    நவமி:- கீர்த்தி உடையவன், மனைவி மக்களை விரும்பாதவன், அதிக பெண் சிநேகம் உடையவன், கமனம் செய்பவன்.

    தசமி:- சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான்.

    ஏகாதசி:- செல்வந்தன், நீதியுடன் இருப்பவன், அழகற்றவன், உதிதமானதை செய்பவன்.

    துவாதசி:- செல்வந்தன், தர்மவான், நூதன தொழில் செய்பவன், சீலம் உள்ளம் உள்ளவன்.

    திரயோதசி:- உறவினர் இல்லாதவன், மாந்தீரிகன், யோபி, கஞ்சன், கீர்த்திசாலி.

    சதுர்தசி:- குரோதம் உடையோன், பிறர் பொருளை அபகரிப்பதில் பிரியன், கோபி, பிறரை துஷ்டிப்பவன்.

    பௌர்ணமி:- புத்தி, விந்தை, பொறுமை, சத்யவான், தயாள சிந்தனை உடையோன், கலங்க முடையோன், உக்ரமுள்ள தேவதையை பூஜிப்பவன்.

    • சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர்.
    • அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர்.

    திதிகள் 15. முதல் திதி பிரதமை. பிரதமை என்றால் முதலிடம் வகிப்பது. ஒரு நாட்டின் முதல்வரை, "பிரதமர்' என்று சொல்வது இதனால் தான்.

    அடுத்தது துவிதியை. "துவி' என்றால், இரண்டு. "டூ' என்ற ஆங்கிலச்சொல் கூட, இதில் இருந்து பிறந்தது தான்.

    திரிதியை என்றால், மூன்று. இதில், திரி என்ற சொல் இருக்கிறது.

    அடுத்த திதியான சதுர்த்தியில், சதுர் என்றால் நான்கு. கடவுளின் நான்கு கரங்களை, சதுர்புஜம் என்பர்.

    அடுத்து பஞ்சமி: பாஞ்ச் என்றால், ஐந்து. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்குரிய திதி. இதனால் தான் அவருக்கு ஆறுமுகம் இருக்கிறது.

    சப்தமியில் வரும் சப்தம் என்றால், ஏழு. கோவில்களில் ஏழு அம்பிகைகளைக் கொண்ட, சப்த கன்னியர் சன்னிதி இருக்கும்.

    அஷ்டமி என்றால், எட்டு. துர்க்கைக்கு எட்டு கை. அஷ்ட புஜ துர்க்கை என்பர்.

    நவமி ஒன்பதாம் திதி. நவரத்தினம், நவக்கிரகம் எல்லாமே ஒன்பது தான்.

    தசமியில் உள்ள, தசம் என்றால், பத்து. ராவணனை, தசமுகன் என்பர். பத்து தலை உடையவன் என பொருள்.

    ஏகாதசி என்பதை, ஏகம் தசம் என பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்பது, பத்து. இரண்டையும் கூட்டினால், 11. இது, 11-ம் திதி.

    இதுபோல துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்பதையும் பிரித்து பொருள் பார்த்தால், 12,13,14 என வரும்.

    பூர்ணமான அமாவாசை அல்லது பவுர்ணமி ஆகியவை, 15-ம் திதியாகும். இவற்றில், தேய்பிறை சதுர்த்தசி திதி செவ்வாய்க்கிழமை சேர்ந்து வருமானால், அது கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி எனப்படும்.

    கிருஷ்ண என்றால், தேய்பிறை. அங்காரகன் என்றால், செவ்வாய். சில குடும்பங்களில் கொடிய பாவம் இருக்கும். இது வழிவழியாக வந்து நம்மை கஷ்டப்படுத்தும்.

    உதாரணத்துக்கு, ஏதோ ஒரு தலைமுறையில் இருந்த தாத்தா, தன் மனைவி, பிள்ளைகளை கைவிட்டிருப்பார். சிலர், கொலையே கூட செய்திருக்கலாம். சிலர், பெண்களை ஏமாற்றி கைவிட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் கையாடியிருக்கலாம்.

    இதனால், பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபம், எத்தனை தலைமுறையானாலும் தொடரும். அந்த குடும்பங்களிலுள்ள பெண்கள், கணவனை இழப்பதும், கைவிடப்படுவதும், ஆண்களால் ஏமாற்றப்படுவதும், அகால மரணம் அடைவதுமான சம்பவங்கள் தொடரும்.

    இவர்களின் பரம்பரை, வறுமையில் வாடும். ஒருவேளை, பணமிருந்தாலும் நிம்மதியின்றி வாழ்வர். இந்த தலைமுறை மட்டுமின்றி, எதிர்கால பரம்பரைக்கும் இந்த சாபம் தொடரும். இது மட்டுமல்ல சில குடும்பங்களில் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கும்.

    அந்த ஆத்மாக்கள் அமைதியின்றி அலையும்.இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் நாளே, கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி. இந்நாளில், பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.

    இதற்கென்று சில ஹோமங்கள் உள்ளன. அவற்றை வேதியர்கள் மூலம் செய்ய வேண்டும். இதனால், முன்னோர் பாவம் நம்மைத் தொடராது.

    ஐப்பசியில் வரும் தேய்பிறை சதுர்த்தசியை, "நரக சதுர்த்தசி' என்கிறோம். அன்று தான் தீபாவளி கொண்டாட்டம். அதாவது, பாவம் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு அசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்டான். இதில் இருந்து சதுர்த்தசி, பாவங்களை அழிக்கும் திதி என்பது உறுதியாகிறது.

    செவ்வாய் கிழமையுடன் சேர்ந்து வந்து, அந்நாளில் இறை வழிபாட்டை மேற்கொள்வோமானால், ஒரு தலைமுறையின் பாவத்தையே அழித்து, எதிர்கால தலைமுறையை சுகமாக வாழ வைக்கிறது. இந்நாளில், அவரவர் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும்.

    புண்ணிய தலங்களான காசி, ராமேஸ்வரம் போன்ற தலங்களுக்கு சென்று புனித நீராடி, முந்தைய பாவங்கள் தீர, கடவுளை பிரார்த்தித்து வர வேண்டும்.பொதுவாக, மக்கள் செவ்வாய்கிழமையை ஒதுக்கித் தள்ளுவதுண்டு.

    ஆனால், அந்த கிழமை ஒரு தலைமுறையின் பாவத்தையே அழிக்கிறது என்றால், அதை சுபநாளாகத்தானே கொள்ள வேண்டும்.

    • திதி என்பதே காலப்போக்கில் மருவி தேதி ஆகி இருக்கலாம்.
    • பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பர்.

    பிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பிரதமை திதியில் பிறந்தவர்கள் நன்றி மறவாதவர்களாகவும், இரக்க சிந்தனை கொண்டவர்களாகவும், கூர்ந்த அறிவுடையவர்களாகவும், பொருளுடையவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், எந்த செயலையும் சிந்தித்து சிறப்பாக செய்பவர்களாகவும், எந்த திசை நோக்கி சென்றாலும் அங்கு புகழ் பெற்றவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் சாதுவாகவும் இருப்பார்கள்.

    துவிதியை திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    துதியை திதியில் பிறந்தவர்கள் வாய்மை தவறாதவர்களாகவும், பொய் சொல்லாதவர்களாகவும், புகழுடையவர்களாகவும், சொன்ன சொல்லைத் தவறாதவர்களாகவும், தன்னுடைய இனத்தவர்களகளை ரட்சிப்பவர்களாகவும், எவ்வித முயற்சியாலும் பொருள் தேடி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    திரிதியை, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    திரிதியை திதியில் பிறந்தவர்கள் நற்குணமுடையவர்களாகவும், தீயசெயல்கள் செய்ய அஞ்சுபவர்களாகவும், சுத்தமுடையவர்களாகவும், எந்த ஒரு செயலையும் யோசித்து முடிக்க வல்லவர்களாகவும், பிரபு என்று புகழ் பெறுபவர்களாகவும், பலசாலியாகவும், தேவாலயங்களைத் தேடித்தேடி தருமம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் பூமியில் உள்ளவர்கள் யாவரும் புகழும் மணிமந்திரவாதியாகி பலருடைய நட்பையும் பெற்றவர்களாகவும். எந்த காரியங்களையும் முடிக்க வல்லவர்களாகவும். சித்தியுள்ளவர்களாகவும், பல நாடுகளுக்கு பயணம் செய்து புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

    பஞ்சமி, திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ணுபவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்:

    சஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள்.

    திதி - பலன்கள்

    பவுர்ணமி முதல் அமாவாசை வரையான பதினைந்து நாட்களை `தேய்பிறை திதி' என்றும், பின்னர் அமாவாசை முதல் பௌர்ணமி வரையான பதினைந்து நாட்களை `வளர்பிறை திதி' என்றும் குறிப்பிடுவர்.திதி என்பதே காலப் போக்கில் மருவி தேதி ஆகியிருக்கலாம். இதனை சமஸ்கிருதத்தில் `கிருஷ்ணபட்சம்', `சுக்கிலபட்சம்' என்பர்.

    இவை முறையே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரையோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகும்.

    • நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன.
    • பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை.

    திதி என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்பதம் `நிலவின் பிறை தினம்' என பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நிலவின் பிறையை பொருத்தே திதிகளுக்கான பெயர்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு திதிக்குமான வடமொழி பெயருக்கு நிகரான தமிழ் பெயர்கள் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதற்கான தகவல் அதில் இல்லை.

    அவை முறையே...

    பிரதமை - ஒருமை

    துதியை - இருமை

    திரிதியை - மும்மை

    சதுர்த்தி - நான்மை

    பஞ்சமி - ஐம்மை

    சஷ்டி - அறுமை

    சப்தமி - எழுமை

    அஷ்டமி - எண்மை

    நவமி - தொண்மை

    தசமி - பதின்மை

    ஏகாதசி - பதிற்றொருமை

    துவாதசி - பதிற்றிருமை

    திரையோதசி - பதின்மும்மை

    சதுர்த்தசி - பதினான்மை

    பவுர்ணமி - நிறைமதி

    அமாவாசை - மறைமதி

    என்பனவாகும்.

    பஞ்சாங்கத்தில் பதினைந்து திதிகளும் ஐந்து விதிகளுக்கு உட்பட்டவை. அவை முறையே "நத்தை திதி", "பத்ரை திதி", "சபை திதி", "இருத்தை திதி", "பூரணை திதி" என அழைக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் மூன்று திதிகளை உள்ளடக்கியது. இதன் படியே பொதுப் பலன்கள் கூறப்படுகிறது.

    • நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும்.
    • வீட்டிற்கே தேடி வந்து அருள் செய்வாள் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.

    வாராஹியிடம் நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும். தூய எண்ணத்தோடு விளக்கேற்றி வைத்து, வாராகி நம்முடன் இருப்பதாக நினைத்து நம்பிக்கையுடன் வழிபட்டால், வாராஹி அம்மன் நம்முடைய வீட்டிற்கே தேடி வந்து அருள் செய்வாள் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.

    * பஞ்சமி திதி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, முதலில் குலதெய்வம் மற்றும் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு வீட்டில் வாராஹி படம் இருந்தால் அதற்கு செவ்வரளி மலர் அல்லது சிவப்பு செம்பருத்தி மலர் சூட்ட வேண்டும்.

    * வாராஹி படம் இல்லாதவர்கள், விளக்கேற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி இருப்பதாக நினைத்து, நம்முடைய வேண்டுதல்களை சொல்ல வேண்டும்.

    * வாராஹிக்கு உரிய துதிகள், மந்திரங்கள், ஸ்லோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.

    நைவேத்தியம்

    பச்சை கற்பூரம், ஏலக்காய் கலந்த பால், பானகம், தோளுடன் கூடிய உளுந்தால் செய்யப்பட்ட வடை, சர்க்கரை வள்ளி கிழங்கு, தயிர் சாதம், எள் உருண்டை படைத்து வழிபடலாம். முடியாதவர்கள் சிவப்பு நிற மாதுளை முத்துக்களை உதித்து படைக்கலாம்.வெற்றிலை,பாக்கு, பூ, பழம் வைத்து வழிபடலாம். தேங்காய் பூ அல்லது சர்க்கரை கலந்த தேங்காய் துருவலை நைவேத்தியமாக படைக்கலாம்.

    ஓம் ச்யாமளாயை வித்மஹே

    ஹல ஹஸ்தாயை தீமஹி

    தன்னோர் வாராஹி ப்ரசோதயாத்

    என்ற மந்திரத்தை 108 முறை ஜபித்து வணங்க வேண்டும்.

    தொழிலில் ஏற்படும் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, தீராத நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் உடனடியாக தீரும். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், காரண காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், வழக்குகள் தீர, செல்வம் பெருக வேண்டும் என நினைப்பவர்களும் வாராஹி அம்மனை வழிபட பலன் கிடைக்கும். எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதை தீர்த்து, நன்மைகளை வழங்குவாள் வாராஹி.

    ×