என் மலர்
நீங்கள் தேடியது "Shanmugam"
- உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர அது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது யாராலும் ஏற்கத்தக்க முடியாத ஒரு விஷயம்.
நீதிமன்றதிற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. நீதிபதி சுவாமிநாதன் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை.
இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
- ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:
* பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
* தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைத்தடியாக நடந்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
* மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
* ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
* தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
- மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.
எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.
- நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
- உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.
இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். எனவே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதற்கிடையே காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை சிறைபிடித்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
- தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
- 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
- காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
- சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.
காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான்.
- சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது.
தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல. குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.
தூய்மை பணியாளர்கள் குறித்த திருமாவளவனின் கருத்திற்கு வி.சி.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசின் சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்ல, பல துறையில் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் போக்கு இருக்கிறது.
தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களும் சட்டபூர்வமாக வைத்திருக்கும் கோரிக்கை பணி நிரந்தரம் என்பது. திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல.
எனக்கு தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், அவரது அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில் பி.எச்.டி. முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார்கள். தற்போது அந்த பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்.
ஒரு வேளை பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தால், இன்றைக்கு அவர் பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளாராக தான் இருந்திருப்பார்.
ஆகவே பணி நிரந்தரம் அதில் கிடைக்கும் வருமானம், பணி பாதுகாப்பு ஆகிய சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதையும் அந்த குடும்பத்திற்கு ஏற்படுத்து விடும்.
ஆகவே இந்த பிரச்சனையை திருமாவளவன் மட்டுமல்ல அதியமான் உட்பட இத்தகைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது வந்து கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல.
நாம் வந்து பரம்பரையாக அந்த குடும்பத்தில் இருக்கும் பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்பொழுது பணி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. ஆகவே திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தாவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என இபிஎஸ் விமர்சனம்
- மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான் என்று சண்முகம் பதில்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த பொதுமக்களிடம் உரையாற்றினார்.
பின்னர் அம்பைய தொகுதியில் பிரசாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினால் தான் மக்கள் செல்வாக்கு இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது" என்று விமர்சித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஈடி, ஐடி ரெய்டுக்கு பயந்துபோய் பாஜகவுடன் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்டுகளைப் பார்த்து சீட்டுக்காக பயந்துபோய் போராடவில்லை என்று கூறும் நீங்கள் மக்களுக்கான பிரச்சினையில் எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
- தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
* சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
* தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.
* தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
* தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.
* சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.
* சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.
* ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
* தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
* நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.
* சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.
* ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.
* தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
- திருமாவளவன், முத்தரசன், சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.






