என் மலர்
நீங்கள் தேடியது "சிபிஎம்"
- உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர அது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது யாராலும் ஏற்கத்தக்க முடியாத ஒரு விஷயம்.
நீதிமன்றதிற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. நீதிபதி சுவாமிநாதன் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை.
இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
- ஆர்.என்.ரவி காரல் மார்க்சை அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். அவரின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.
வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.
1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்படவில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தியிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள்.
ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே சபல புத்திக்காரி, குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.
பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களை கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்து சமர் புரிவதை சபதமாக ஏற்றிருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு திருந்துகிற ஆள் இல்லை. பட்டுக்கொண்டே இருப்பேன், என்ன பந்தயம் கட்டுகிறாய் என்று கேட்கும் ஆர்.என்.ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும்.
- தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட மாநகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முடியும் எனவும், தமிழக நகரங்களான கோவை மற்றும் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என ஒன்றிய பாஜக அரசு மறுத்திருக்கிறது.
பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும். ஏனெனில் கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை மற்றும் இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகள் சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள வேறு பல நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுவது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போடுவது என தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியாகவே மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு அறிவிப்பும் உள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்பிரச்னையை அணுகுவதை கைவிட்டு, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகர மக்களின் தேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
- மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.
எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
- 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
- அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
- சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.
காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
- போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இரவோடு இரவாக காவல்துறை நடத்திய 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல்.
அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.
அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக காவல்துறை நடத்திய இந்த 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது மட்டுமல்ல, மனித உரிமை மீறலுமாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தங்களுடைய கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகிற போது காவல்துறை, நீதிமன்றம், நிர்வாகம் இவற்றின் அணுகுமுறையும் அரசின் அணுகுமுறையும் எளிய மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்; சட்டத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த பிரச்சனையில் மேற்கண்ட அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே இதை கையாண்டுள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்.
தமிழ்நாடு அரசு உடனடியாக போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களையும், ஆதரவு தெரிவிக்க வந்தவர்களையும் காவல்துறையினர் தாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், தாக்குவதற்கு உத்தாவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடனடியான மற்றும் நேரடி தலையீட்டின் மூலம் தூய்மை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இன்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பீகாரில் 65 லட்சம் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
- திருவாரூரில் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை (08.08.2025) தமிழகம் முழுவதும் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக சிபிஐஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற பெயரில் பீகாரில் எதிர்கட்சியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டு 65 லட்சம் பெயர்களை நீக்கியுள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை (08.08.2025) தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை (08.08.2025) மாலை 5.30 மணிக்கு மிண்ட் பேருந்து நிலையம் (வள்ளலார் நகர் பேருந்து நிலையம் எதிரில்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருவாரூரில் நாளை காலை 10.00 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகில் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாகப்பட்டினத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு புதிய பேருந்து நிலையம் அருகில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தவிர தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் கேரள மாநில முதல்வராக இருந்தார்.
- அச்சுதானந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் ஜூலை 21 அன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அவருக்கு 101 வயது. சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர். 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.
மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
- மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது
- சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மறைந்த மு.க.முத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மு.க.முத்து கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் சிறந்து விளங்கியவர். தனது இனிமையான குரலில் சிறந்த சமூக நல்லிணக்க பாடல்களையும் பாடியவர். சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தொடர் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி மறைவுற்றுள்ளார்.
அவரது மறைவால் துயருற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






