search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ripon building"

    • உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.
    • இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை.

    சென்னை மாநகராட்சியில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் கடந்த 29-ந்தேதி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 358 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்குவதை வெளி நிறுவனம் மூலம் ஓராண்டுக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது, காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் முறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி காலை உணவு திட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன. இந்த நிலையில், காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுக்கும் டெண்டர் அறிவிப்பு தற்போது கோரப்படவில்லை எனவும், மாநகராட்சி சார்பிலேயே தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில் 1 முதல் 5 - ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் காலை உணவு தரமாகத் தயாரித்து வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின் அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது.

    இதற்கான ஒப்பந்தப் புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×