என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை கையாள தவறியதா தி.மு.க. அரசு?
    X

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை கையாள தவறியதா தி.மு.க. அரசு?

    • நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
    • தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியது விமார்சனத்துக்கு உள்ளது.

    தனியார்மயத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தூய்மை பணியாளர்களின் கோரிக்கையும் போராட்டமும்:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.

    வளாகத்திற்குள் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியே அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள்.

    தூய்மைப்பணியாளர்கள் நேற்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, த.வெ.க. தலைவர் விஜய் உள்பட ஏராளமானோர் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டத்தின்போது அனைத்து தூய்மைப்பணியாளர்களும் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேகர் பாபு மீதான விமர்சனம்:

    போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என். நேரு பேச்சுவார்த்தை நடத்தாமல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியது விமார்சனத்துக்கு உள்ளது.

    குறிப்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர் பாபுவிடம், "தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் சேகர் பாபு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    முதலமைச்சர், துணை முதலமைச்சரின் செயல்பாடுகள்:

    சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்பட்ட பொது தூய்மை பணிகளை துரிதமாக செய்த பணியார்களை நேரில் வந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார். ஆனால் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை பார்க்க முதலமைச்சர் ஒருமுறை கூட நேரில் வரவில்லை. ஏன் துணை முதலமைச்சர் உதயநிதி கூட வரவில்லை.

    அதே சமயம் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கூலி படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். கூலி தொழிலாளர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் கைது செய்யப்பட்ட நிலையில், கூலி படத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பார்த்தது இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    விடியல் பயணம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று எளிய மக்களுக்காக பல கோடி ரூபாய் செலவில் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி வரும் ஸ்டாலின் அரசு போராடி வரும் தூய்மை பணியாளர்களின் குரலை செவிக்கொத்து கேட்காதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. தனியாருக்கு கொடுக்காமல் தூய்மை பணிகளை அரசே ஏற்று நடத்த எது தடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

    உளவுத்துறை மற்றும் காவல்துறை செயல்பாடுகள்:

    நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தான் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை கலைத்து அவர்களை கைது செய்தோம் என்று அரசு தரப்பு கூறுவது ஏற்கத்தக்கதா?

    மேலும், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் அந்நிய சக்திகள் நுழைந்து போராட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. அதனால் தான் போராட்டத்தை போலீசார் வைத்து கலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்ற வாதத்தை அரசு தரப்பு முன்வைக்கிறது என்றால், அந்நிய சக்திகள் நுழையும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

    எதிர்கால விளைவுகள்:

    ஒட்டுமொத்தத்தில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை சரியாக கையாள தெரியாத ஸ்டாலின் அரசின் இந்த செயல் திமுக ஆட்சியின் அழிக்க முடியாத கரும்புள்ளியாக இருக்கப்போகிறது என்றும் ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிந்த கதை போல தூய்மை பணி மேற்கொள்ளும் கூலி தொழிலாளர்களை சந்திக்காமல் கூலி படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் வரலாற்றின் கருப்பு பக்கத்தில் இடம்பெறும் என்றும் இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

    Next Story
    ×