என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகம்"

    • தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலையின்மை இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உள்ளது.

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிவிதமான வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா அத்துமீறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்த ஆலோசனையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    125 நாட்கள் வேலை உயர்வு திட்டத்தை புதிதாக அமல்படுத்திவிட்டு அதற்காக ரூபாய் 95 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க முடியும். 125 நாட்கள் வேலை திட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது. கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றுவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

    பட்ஜெட்டில் மதுரை கோவை மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி அறிவிப்பு இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விட்ட புல்லட் ரெயில் விபத்துக்குள்ளாகி நிற்கிறது. தமிழகத்திற்கு என அறிவிக்கப்பட்ட ஒரே அறிவிப்பு என்பது புல்லட் ரெயில் திட்டம் மட்டுமே. அதை அறிவித்தபடி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ஓசூர் விமான நிலையம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்றவை ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை பழி வாங்குவது என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விரோதமான அணுகுமுறையையும், பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி மறுப்பதும் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதும்.

    தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடாது.

    இன்று இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். இந்த தொகை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பா.ஜ.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளார்
    • சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.

    திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

    இந்நிலையில், மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், "பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

    சனாதனம் குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    • தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.
    • தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPIM வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் இப்பணியை ஜனவரி 28, 2026ந் தேதி வரை நீட்டிப்பு செய்திடவும்.

    2026 ஜனவரி 24, 25, தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், எஸ்.ஐ.ஆர். பணியில் பெயர் நீக்கப் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை இன்று (12.01.2026) நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையினை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். (கடிதமும், ஆய்வுக்குழு குறிப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

    இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

    வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜனவரி 18, 2026ந் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. பிப்ரவரி 17. 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும். தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே. ஜனவரி 10ந் தேதியிலிருந்து 18ந் தேதி வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும். பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனைப் பயன்படுத்தி 2026 ஜனவரி 24,25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்திட கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும். 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக / தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம்.

    அதுகுறித்த எங்களுடைய கணிணி ஆய்வுக்குழு நடந்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை ஒரு குறிப்பாக இத்துடன் இணைத்துள்ளோம். இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டும்
    • கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.

    அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

    • உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
    • தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.

    ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

    இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.

    144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்த சூழலில் சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய அவர், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர அது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது யாராலும் ஏற்கத்தக்க முடியாத ஒரு விஷயம்.

    நீதிமன்றதிற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. நீதிபதி சுவாமிநாதன் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

    அவரது செயல்பாடுகள் மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை.

    இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.
    • ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை மிண்ட் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:

    * பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆட்டுவிக்கிற பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறி உள்ளது.

    * தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். ஆளுங்கட்சியின் கைத்தடியாக நடந்து கொள்வதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.

    * மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஒத்து ஊதும் நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    * ஆளுங்கட்சி ஆதரவாக மக்கள் விரோத செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதை ஏற்க முடியாது.

    * தலைநகர் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
    • மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?

    கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.

    எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

    • நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
    • உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

    இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். எனவே தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அப்படி கொடுக்காமல் போனால் அது அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

    இதற்கிடையே காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை சிறைபிடித்துள்ளது.

    இந்நிலையில் இதுதொடர்பான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "காசாவில் பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு உலக சமூகம் அனுப்பிய உணவுப் பொருட்களை தடுக்கும் இஸ்ரேலின் கொடூரமான செயலுக்கு எதிராக கண்டனம் முழங்குவோம்.

    உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பிதற்றி வரும் டிரம்ப் இஸ்ரேல் அரசின் இந்த அநியாயத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டு இருப்பதேன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
    • தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார். 

    • தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
    • 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.

    இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

    இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    • காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
    • சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.

    காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.

    இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார். 

    • தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான்.
    • சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது.

    தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல. குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

    தூய்மை பணியாளர்கள் குறித்த திருமாவளவனின் கருத்திற்கு வி.சி.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    தமிழக அரசின் சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்ல, பல துறையில் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் போக்கு இருக்கிறது.

    தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களும் சட்டபூர்வமாக வைத்திருக்கும் கோரிக்கை பணி நிரந்தரம் என்பது. திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல.

    எனக்கு தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், அவரது அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில் பி.எச்.டி. முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார்கள். தற்போது அந்த பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்.

    ஒரு வேளை பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தால், இன்றைக்கு அவர் பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளாராக தான் இருந்திருப்பார்.

    ஆகவே பணி நிரந்தரம் அதில் கிடைக்கும் வருமானம், பணி பாதுகாப்பு ஆகிய சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதையும் அந்த குடும்பத்திற்கு ஏற்படுத்து விடும்.

    ஆகவே இந்த பிரச்சனையை திருமாவளவன் மட்டுமல்ல அதியமான் உட்பட இத்தகைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது வந்து கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல.

    நாம் வந்து பரம்பரையாக அந்த குடும்பத்தில் இருக்கும் பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்பொழுது பணி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. ஆகவே திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×