என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நள்ளிரவு குண்டுகட்டாக கைது: 4 இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் அடைத்து வைப்பு..!
- போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
- போலீசார் நள்ளிரவில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
தனியார்மயத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.
வளாகத்திற்குள் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியே அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்தது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்தநிலையில், தூய்மைப்பணியாளர்கள் நேற்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, த.வெ.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கினார்கள். இதனால், ரிப்பன் கட்டிடம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
பின்னர், 8-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மதியம் 12 மணியளவில் போராட்ட குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் போராட்டகுழுவினர் மாலை 4.15 மணியளவில் ரிப்பன் மாளிகை வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கிய 15 நிமிடத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்ட குழுவினர் ரிப்பன் மாளிகையில் இருந்து வெளியேறினார்கள். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோயம்பேட்டில் இருந்து பிராட்வே செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிப்பன் மாளிகை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முதல் சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு உள்ள சிக்னல் வரையில் தடுப்புகள் கொண்டு போலீசார் அடைத்தனர். மறுபகுதியில் உள்ள ஒரு வழி போக்குவரத்து இருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் போராட்டம் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டன. போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
காலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மாலை 6 மணியளவில் மீண்டும் தனது ஆதரவாளர்களோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்ட பகுதி வழியாக தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் உள்ளே நுழைய முற்பட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்தநிலையில், நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று போராட்டத்தின்போது அனைத்து தூய்மைப்பணியாளர்களும் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.






