search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"

    • அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.
    • வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 5-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, திட்டக்குழு துணைத் தலைவர் பேரா சிரியர் ஜெயரஞ்சன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்கள் மக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆட்சி சக்கரத்தை இயக்குபவர்களாக நாங்கள் இருந்தாலும், அதற்கு வழிகாட்டுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் செல்லும் பாதையை தீர்மானிப்பவர்களாக மட்டுமல்லாமல், அதில் உள்ள நிறை குறைகளை எடுத்துச் சொல்பவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள்.

    நீங்கள் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு கால அனுபவம் கொண்டவர்கள். தங்களது அனுபவங்களையும், சிந்தனைகளையும் எங்களுக்கு தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறீர்கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. அரசு பஸ்களில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகரித்து உள்ளது.

    புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் மாணவர்கள் வருகையும் பள்ளியில் அதிகரித்துள்ளது.

    வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்ட மும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டமாக உள்ளது.

    மாநில திட்டக் குழுவின் அறிக்கைதான் தி.மு.க. அரசின் மதிப்பெண் சான்றிதழ் ஆகும். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கு உங்கள் ஆலோசனைகளையும் வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தக் கூட்டத்தில் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், திட்டம் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம.சீனுவாசன், பேராசிரியர் விஜயபாஸ்கர், தீபைந்து, எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் அம லோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    • புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழு தயாரித்த வரைவு கொள்கைகள், அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்த மார்ச்சில் துறை சார்ந்த 16 அறிக்கைகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார்.

    * பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.

    * மாநில திட்டக்குழுவின் அறிக்கைதான் திமுக ஆட்சியின் மார்க் ஷீட்.

    * காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    * அரசின் திட்டங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மனிதரையும் உயர்த்தி உள்ளது.

    * தமிழக அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்களை சென்றடைந்து வருகின்றன.

    * காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    * விடியல் பயணம் மூலம் பெண்கள் முன்னேற்றம், புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    * மக்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் வழங்குகின்றனர்.

    * கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து திட்டங்களை தயாரித்து தருமாறு மாநில திட்டக்குழுவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

    * ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் திட்டங்கள் செயல்படுவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    * புதிய புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

    * ஏற்றத்தாழ்வு என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்க கூடாது என்பதன் அடிப்படையில் திட்டங்கள் வகுக்க வேண்டும்.

    * பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லாத இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம்.

    * சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை உருவாக்கினோம்.

    * நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தாருங்கள் என்று கூறினார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
    • கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அல்லூர் பாரதி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளி மாவணர்களுடன் அமர்ந்து காலை உணவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    முன்னதாக, கம்பரசம்பேட்டை அருகே உள்ள பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை உணவுத்திட்டத்தால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
    • இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

    மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான நேற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    இந்நிலையில், காலை உணவுத் திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்நூற்றாண்டின் மிகச்சிறந்த திட்டமான "முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை" இன்று ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவு படுத்தியுள்ளார்கள்.

    இதன் மூலம் புதிதாக 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 34,987 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைகிறார்கள்.

    22 இலட்சம் மாணவர்களின் வயிற்றுப் பசியை போக்கி, அவர்களின் பெற்றோர்களுக்கு மன நிறைவை தந்துள்ள தமிழ்நாட்டின் தாயுமானவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வணங்குகின்றோம்.

    இத்திட்டம் இந்திய ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் திட்டமாக அமைந்துள்ளது.

    சட்டமன்றத்தில் தெரிவித்ததை இங்கே மீண்டும் பதிவு செய்கின்றேன். இந்த மகத்தான திட்டத்திற்கு "மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்" எனும் பெயர் சூட்ட வேண்டும். கடல் தாண்டி உலகம் முழுக்க இத்திட்டம் பரவ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சினை என்பதும் வேறு.
    • நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் நிதிஉதவி பெறும் பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டி.எம்,சி தண்ணீரை திறக்க உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.

    கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அவர்கள் தண்ணீரை தர மறுக்கி றார்கள். முதலமைச்சருடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதா? அல்லது கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதுவதா? என்பதை இன்று முடிவு செய்வோம். கூட்டணி என்பது வேறு காவிரி பிரச்சனை என்பதும் வேறு.

    அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது மட்டும் அவர்களுக்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்தாவிட்டது. இது காலம்காலமாக உள்ள பிரச்சனை. தற்போது இதுகுறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

    எடப்பாடி பழனிசாமிக்கு இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாது. கர்நாடகத்தில் தற்போது 4 அணைகளிலும் போதிய நீர் இருப்பு இருந்தும் அவர்கள் அலட்சியம் காட்டுகிறார்க்ள். இதற்கு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் தான் தர வேண்டும். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்கமாட்டேன் என்கிறார்கள் என்ன செய்வது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.

    அப்போது அங்கு படிக்கும் மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் அவர் கேட்கிறார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவுதான் என்று முதலமைச்சர் பதில் அளிக்கிறார்.

    முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது.
    • இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது.

     காலை உணவு திட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    என்ன ஒரு சிறு பிரச்சனை வந்தாலும் நம் அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து தீர்த்து வைக்கிறது. நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறோம்.

    பொய் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துக்கு வாசகங்கள் உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கிற மக்கள் விரோத சக்திகளின் அஜண்டா எந்த காலத்திலும் நடக்காது.

    ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பயனபெறக் கூடிய வகையில் மக்கள் நலத்திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக காலை உணவுத் திட்டம் நமது திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழை தேடித்தந்துள்ளது.

    நாம் தொடங்கிய பின்புதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், எம்.எல்.ஏ.க்களையும், எம்.பி.க்களையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த ஊரிலேயும், எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது.

    உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அந்த மாதிரி, அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சாப்பாட்டையும் கவனமாக சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நான் ஆய்வுக்கு வெளியூர் போகும்போது ஏதாவது ஒரு பள்ளிக்கு திடீரென்று செல்கிறேன். அங்கிருக்கும் பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன்.

    அமைச்சர் உதயநிதி கூட சுற்றுப்பயணம் போகும் போதும், நிகழ்ச்சிகளுக்கு போகும்போதும் இந்த மாதிரி ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். எ

    எனவே மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட கலெக்டர்களும், அதிகாரிகளும் அவரவர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் திடீர் திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப பணிவாக கேட்டுக் கொள்கிறேன்.

    திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்த வரைக்கும் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைக்கி றோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடையை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி.

    நீட் தேர்வை நான் எதிர்க்கத் தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர் கேள்வி கேட்டனர். ஆனால் இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கிற முறைகேடுகளை பார்த்து உச்சநீதிமன்றமே கேள்வி கேட்கிறது.

    மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகிறது. பல முதல்-அமைச்சர் கள், தேசிய தலைவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில் நீட் தேர்வை எதிர்க்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசிய லுக்காக இப்போது நெருக்கடி நிலையை பற்றி பாராளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறது.

    ஆனால் நாம் அவர்களி டம் கேட்கும் கேள்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டிய லுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கப்பூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா? நம்மை பொருத்தவரை நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது.

    அதனால்தான் எதிர்க்கிறோம். ஒரு பக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்துகிறோம். இன்னொரு புறம் மாணவர்களின் நன்மைக்காக பள்ளிக்கல்வி, கல்லூரிகள், உயர்கல்விகளுக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    நான் திரும்பவும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாக வேண்டும். மாணவச் செல்வங்களே படியுங்கள். நீங்கள் உயர படியுங்கள். நீங்கள் உயர உங்கள் வீடும் உயரும். இந்த நாடும் உயரும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம்.
    • காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது.

    தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று தொடங்கப்பட்டது.

    அதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.14 லட் சம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த திட்டத்துக்கு பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, கடந்த 25.8.2023 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த திட் டத்தை விரிவுபடுத்தினார்.

    இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

    இதன் ஒரு பகுதியாக கல்வி வளர்ச்சி நாள் என்று அழைக்கப்படும் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவ-மாணவிகளுக்கு அவர் உணவு பரிமாறினார். அதன்பிறகு மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவர் மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு மகிழ்ந்தார். பின்னர் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள்? உணவு நன்றாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.

    இந்த திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ-மாணவிகள் பயன்பெறுவார்கள்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன். என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், கலைஞர் உரிமை திட்டம் என தமிழ்நாட்டில் இருக்கிற பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என உங்களின் முன்னேற்றத்துக்கும், எதிர்காலத்துக்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடுபடக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றி.

    பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளின் பசியை போக்க வேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான் இந்த காலை உணவுத்திட்டம். சென்னையில் ஒரு பள்ளி விழாவுக்கு போனபோது ஒரு குழந்தை இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை என்று சொன்னதை கேட்டவுடன் ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் உருவாக்கிய திட்டம் தான் இந்த காலை உணவு திட்டம்.

    அரசாங்கத்துக்கு நிதி எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது என்று இந்த திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் காலை உணவா? எங்களுக்கு இல்லையா? என்று அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேட்டனர்.

    அதனால்தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வயிறாற சாப்பிட காரணமான இந்த திட்டத்தை இன்று விரிவுப்படுத்தி இருக்கிறேன். இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் நாள்தோறும் 20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.

    புறநானூறு, திருக்குறள், மணிமேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல; அவ்வையார், வள்ளலார் போன்ற சான்றோர்களும் பசிப்பிணியை போக்குவது குறித்து உயர்வாக சொல்லி இருக்கிறார்கள். சங்க காலத்தை சேர்ந்த ஒரு குறுநில மன்னர் ஏழை-எளியவர்களின் பசியை போக்கியதால் பசிப்பிணி மருத்துவன் என்று போற்றப்படுகிறார். பசிப்பிணி போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்.

    ஏழை-எளிய மாணவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் குழந்தைகளை நலமான, வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்திருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து. அதனால்தான் காலை உணவு திட்ட ஒதுக்கீடு பற்றி அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள். வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள் என்று ஆனித்தரமாக சொன்னேன்.

    ஆனால் இந்த திட்டம் மாணவ-மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பெற்றோர்களுக்கு பொருளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இடை நிற்றலை குறைக்கிறது. இப்படி ஏராளமான நன்மைகள் காலை உணவு திட்டத்தால் விளைகிறது. கொஞ்ச நாளுக்கு முன்பு ஒரு பெண் அளித்த பேட்டியை பார்த்தேன். அதில் காலை உணவு திட்டம் ஏழை-எளிய குடும்பங்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது என்று பேட்டி கொடுத்திருந்தார்.

    இப்படி நமது திராவிட மாடல் அரசு கொண்டு வருகிற ஒவ்வொரு திட்டத்தையும் பயன்பெறுகிற மக்கள் பாராட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இல்லாத கற்பனை கதைகளுக்கு வடிவம் கொடுப்பவர்களுக்கும், ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்களுக்கும் நம்மை பாராட்ட மனமில்லை. அதைப்பற்றி நமக்கு கவலையும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்கப்பள்ளி துறை இயக்குனர் சேதுராமவர்மன், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், வருவாய் அலுவலர் ராஜ்கு மார், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    • காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    கீழச்சேரி:

    பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப் படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி காமராஜர் பிறந்தநாளான இன்று கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

    பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவருந்தி மகிழ்ந்தார்.





    • முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.
    • இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15-9-2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

    இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

    இத்திட்டத்திற்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பையும், மாணவ-மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25-8-2023 அன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப்பாடங்களில் கவனம் செலுத்தி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இத்திட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின், 15-7-2024 அன்று (நாளை) பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.

    இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள்.

    முதலமைச்சரால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகிற்கே முன்னோடியான திட்டமாக திகழ்கிறது.

    இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப தலைவிகளுக்கு நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஜூலை 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும்

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது.

    இதையடுத்து தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1000 மாதா மாதம் செலுத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்பத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதனையடுத்து 2-ம் கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேலும் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆக மொத்தம் 1 கோடி யே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்களுக்கு மாதா மாதம் ரூ.1000 சென்றடைகிறது. இதுதவிர மேலும் 11.85 லட்சம் பெண்கள் ரூ.1000 கேட்டு மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மனு செய்திருந்த ஒவ்வொருவர் வீட்டுக்கும் பணியாளர்கள் சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், வசதி எந்த அளவுக்கு என்பது பற்றியும் விசாரித்தனர்.

    இதன் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த பட்டியல்படி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப் படும் என்று கேள்விகள் எழுந்தன. இதனையடுத்து இது தொடர்பான முக்கிய அறிவிப்பை விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு உள்ளார்.

    அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியான வர்களாக 1.48 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வங்கிக் கணக்கில் இந்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி முதல் ரூ.1000 பணம் செலுத்தப்படும் என்று கூறினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் சென்று அரசு உதவிபெறும் பள்ளி களிலும் மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த விழாவில் மேலும் 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் தொடங்கி வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று திருவள்ளூர் சென்று விரிவான ஆலோசனையும் நடத்தினார்கள்.

    • அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்தநாளான வரும் 15-ம் தேதி திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளில் பலர் காலை உணவை தவிர்த்து சோர்வாக தினமும் பள்ளிக்கு வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டார். அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், காலை உணவுத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தார்.

    'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. மேலும், அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×