என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்-சாம்பார்: தமிழக அரசு உத்தரவு
- காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டது.
- திங்கட்கிழமைகளில் வழங்கப்படும் அரிசி அல்லது ரவை உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
சென்னை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நகரப் பகுதிகள், ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டத்தில் உள்ள உணவு வகைகள் அவ்வப்போது ஊட்டச்சத்து வல்லுநர் குழு மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களால் ஆய்வுக் உட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வாரந்தோறும் திங்கட்கிழமை வழங்கப்படும் உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கலாம் என வல்லுநர் குழுவும், திட்டச் செயலாக்க நிறுவனமும் அரசுக்கு பரிந்துரையை வழங்கின.
இதனால் அரசுக்கு ரூ.7.80 கோடி கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும் இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வழங்கப்படும் அரிசி அல்லது ரவை உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






