என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயரம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள் வேலுசாமிபுரத்தில் ஆய்வு
- கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
- சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சிவ தாசன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோர் இன்று காலை கரூர் வந்தனர்.
அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்த குழுவினர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வசிப்பவர்களை நேரில் சந்தித்து சம்பவம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த 2 வயது குழந்தை குரு விஷ்ணுவின் இல்லத்திற்கு சென்று அவர்களின் பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே ஊரைச் சேர்ந்த அதாவது ஏமூர் புதூரைச் சேர்ந்த நான்கு பேரும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர், சுங்ககேட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஹேமலதாவின் கணவர் மற்றும் அதன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.






