என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர்.என்.ரவி"

    • நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
    • அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.

    இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
    • பாகிஸ்தானின் சுதந்திர தின நாளை விமர்சித்து ராஜ் பவன் பதிவு வெளியிட்டுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

    அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தின நாளை விமர்சித்து பிரிவினையை தூண்டும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    ராஜ் பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

    பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன.

    தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன.

    வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தி - இஸ்லாமியர் பிரிவினையை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

    • 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.
    • பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

    மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர்.

    மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தனர். அதுமட்டுமின்றி வரலாற்றில் முதல் முறையாக, ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நாட்டின் ஜனாதிபதிக்கு 3 மாதம் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை விமர்சித்து கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அவர் கூறியதாவது, "மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை.

    உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு?.

    அரசமைப்பில் திருத்தங்கள் செய்ய, நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற வேண்டும், ஆனால் 2 நீதிபதிகள் அமர்ந்து கொண்டு அரசமைப்பின் விதியை தீர்மானிப்பது ஏற்புடையதல்ல. இது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மீறல்" என விமர்சித்துள்ளார்.

     கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தை விமர்சித்ததற்கு குறித்து சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் பொருந்தும். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதி கூட தாமதப்படுத்துவது இல்லை. அப்படியானால், ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம் ஆளுநர்களுக்கு எப்படி இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் இதுகுறித்து பேசுகையில், "பாராளுமன்றத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை ஆளுநர் அர்லேகர் மகிமைப்படுத்துகிறார், ஆனால் சட்டமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி ஆளுநர்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பின் கதவு வழியாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிரான "சில்வர் லைன்" என்று தெரிவித்தார்.

    • அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது.
    • உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்கலைக் கழக சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆண்டுகணக்கில் அவற்றைக் கிடப்பில் போட்டுவைத்ததுடன், தனது சட்டப்பூர்வமான கடமையையும் ஆற்றாமல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து அரசமைப்புச் சட்டத்தை அவமதித்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளது.

    அவரது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பின்புலம் அவரை முரட்டுப் பிடிவாதக்காரராக வளர்த்தெடுள்ளது. அதனால் அவருக்கு இந்த மூக்கறுப்பு இன்று நடந்தேறியுள்ளது.

    "மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு, 10 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புவது சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி தவறானது. அத்துடன், 10 பல்கலைக் கழக மசோதாக்கள் மீதும் குடியரசுத் தலைவர் அவர்கள் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பொருத்தமற்றவையாகும்.

    ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டதாக அறிவித்ததற்கு முன்பு நீண்டகாலம் எதுவும் சொல்லாமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 இன் கீழ் உச்சநீதிமன்றத்துக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நாளிலேயே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை." என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    இது ஆர்.என்.ரவிக்கு மட்டுமின்றி பாஜக அல்லாத மாநில அரசுகளை ஆளுநர்களைக் கொண்டு முடக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கும் பாடமாக அமைந்துள்ளது.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்குப் பிறகும் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் தொடர்வது முறையல்ல. தானே முன்வந்து பதவி விலகும் அளவுக்கு அவர் பக்குவம் நிறைந்த பண்பாளர் அல்ல. எனவே, முனைவர் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகக் குற்றம் இழைத்த அவரை ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அனுமதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும் என்பதால் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஆர்.என்.ரவி அவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இயற்றும் சட்ட மசோதாவை இனிமேல் ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்ற காலக்கெடுவையும் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

    இது, அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்த உறுப்புகளுக்கு இதுவரை தவறாகப் பொருள் சொல்லி வந்த நபர்களுக்குப் போடப்பட்ட கடிவாளமாகும். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதிலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசால் அரசமைப்புச் சட்டம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகிவரும் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் வெகு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

    மாநில உரிமைகள் என்னும் களத்தில் இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி முன்மாதிரிகளை உருவாக்கும் சிறப்பு பெற்ற தமிழ்நாடு அரசுக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்தச் சட்டப் போராட்டத்தை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை வென்றெடுத்துத் தந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.

    இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.

    சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

    உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

    நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.

    அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

    'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.

    • தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன்
    • காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்-ன் 127 ஆவது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேதிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை அளித்ததாக கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு வி்ளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு முக்கியதுவம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் " என தெரிவித்துள்ளார்

    • ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.

    இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.

    மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
    • தேநீர் விருந்தில் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கெள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவர்னர் மாளிகையில் நாளை மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.முக. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.

    ஆனால் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்கிறது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.
    • ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.

    சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.

    இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
    • குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.

    குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது. அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.

    ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை அடைகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். 

    ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமரை வரவேற்றனர்.

    பிரதமர் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர்,  அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தை அடைகிறார்.

    பிரதமர் செல்லும் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி செல்லும் சாலைகளையொட்டியுள்ள பெரிய கட்டிடங்கள், மைலேடீஸ் பூங்கா பூட்டப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நின்றபடியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×