என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை அடைகிறார்.
சென்னை:
தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமரை வரவேற்றனர்.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்தை அடைகிறார்.
பிரதமர் செல்லும் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி செல்லும் சாலைகளையொட்டியுள்ள பெரிய கட்டிடங்கள், மைலேடீஸ் பூங்கா பூட்டப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நின்றபடியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






