search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M. K. Stalin"

    • பிரதமரை நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு.
    • ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 118.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசு பல தடவை கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளை மாநில அரசே செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. இதன் காரணமாக புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு தமிழக அரசு பல தடவை கோரிக்கை விடுத்தது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அறிவித்து விட்டது.

    இதையடுத்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.

    சமீபத்தில் அமெரிக்காவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்ற அவர் சென்னை திரும்பியதும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து செப்டம்பர் 20-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வதால் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து 24-ந்தேதி மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    மறுநாள் 25-ந்தேதி காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டு திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இது தொடர்பான கடிதத்தையும் வழங்குவார்.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் மறைந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    சமீபத்தில் சீதாராம் யெச்சூரி மரணம் அடைந்த போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தார். எனவே டெல்லியில் உள்ள சீதாராம் யெச்சூரி வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • வெள்ளையன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

    தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்

    நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தினேன்.

    வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது.
    • தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    தேசிய கல்விக்கொள்கையை [2020] ஏற்காததால் 2024-25 நிதியாண்டில் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை மத்திய அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. தாமதமின்றி மாணவர்கள் நலனுக்காக இந்த தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சென்றடைய வேண்டும். தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது.

    சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம். பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். என்று வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும், அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை, இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

    • 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும்.
    • 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    அவினாசி:

    ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து நீரேற்றத்துக்கான மோட்டார் இயக்கப்பட்டு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ள ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்ல ப்படுகிறது. இதனால் 3 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் ஏரிக்கு வந்த தண்ணீரை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மலா்தூவி வரவேற்றாா்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஈரோடு பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்திலிருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை விநாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாள்களுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

    அந்த தண்ணீர் 1065 கிமீ., நீளத்துக்கு நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் மூலம் நீா்வளத் துறை சாா்பில் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரப்பப்படும். 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

    குறிப்பாக திருப்பூா் மாவட்டத்தில் 32 நீா்வளத் துறை ஏரிகள், 22 ஒன்றிய ஏரிகள், 385 குட்டைகள் என மொத்தமாக 429 நீா்நிலைகளில் நீா்நிரப்பப்படுகிறது. இதன்மூலம் 8151 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இத்திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் சாா்பாக வும், திருப்பூா் மாவட்ட மக்களின் சாா்பாகவும் நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன் என்றாா்.

    அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட மருத்துவ அலுவலா் முரளி சங்கா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
    • மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு நேப்பியர் பாலம் அருகில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தளத்தில் இறங்குகிறார்.

    அங்கு கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    கடலில் செல்லும் மீனவர்கள் படகுகளில் ஒரு டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அந்த டிரான்ஸ் மீட்டரில் இருக்கும் சிவப்பு பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை கிடைக்கும். உடனே உதவிக்கு கடலோர காவல் படையினர் செல்வார்கள்.


    இந்த அதிநவீன வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை நாளை முதல் செயல் பாட்டுக்கு வருகிறது. மேலும் புதுச்சேரி கடலோர காவல் படை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதையும் ராஜ் நாத்சிங் பார்வையிடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கை வரவேற்கிறார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு கண்காட்சியையும் பார்க்கிறார்.

    பின்னர் 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் ராஜ்நாத்சிங் நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

    • ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
    • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவிப்பு 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (19.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

    அனைத்து மிவைர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வளியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால் மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் நமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும் இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.

    தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

    காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக,

    *  தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

    * 2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது.

    * தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • ஜூலை 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    இத்தனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், "தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது, மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி, இமலாசப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.

    மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

    • நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார்.
    • மோடியால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை பார்க்க முடியவில்லை.

    மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடகாவின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    மேகதாது, மகதாயிக்கு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நமது விவசாயிகளின் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி இன்னும் நமக்கு கனவாகவே உள்ளது.

    நரேந்திர மோடியின் பார்வை பிரதமர் பதவியில் இருப்பதால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை அவரால் பார்க்க முடியவில்லை. நீதிக்கான எங்கள் போராட்டத்தில் எங்கள் மாநில மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்களான, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
    • கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் நலிந்தோருக்கு மருத்துவ உதவி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரையில் ரூ.6 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு இந்த நிதி உதவி காசோலையாக அனுப்பப்பட்டது.

    • நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
    • தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கியது. இதனால் இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்தன. பாராளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

    நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

    நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க BanNEET என்று கூறியுள்ளார்.


    ×