search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கமல்ஹாசன் தன்மானத்தை தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டார்-அண்ணாமலை கடும் தாக்கு
    X

    தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் அண்ணாமலை.

    கமல்ஹாசன் தன்மானத்தை தி.மு.க.விடம் அடகு வைத்து விட்டார்-அண்ணாமலை கடும் தாக்கு

    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார்.
    • மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார்.

    கோவை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை கணபதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    இந்த பாத யாத்திரை இரவு 10.30 மணியளவில் இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    கோவை பா.ஜனதாவின் கோட்டை. அந்த அளவுக்கு கோவையில் கட்சியினர் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளார்கள். இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

    பாதயாத்திரையில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் காரணமாக 2 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நேரமின்மை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தல் படியே 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வந்தேன்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார். தமிழகத்திலும் 39 இடங்களையும் பெறுவதே நமது இலக்கு.

    பிரதமர் மோடி தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ளார். தமிழ் மண்ணையும், மக்களையும், கலாசாரத்தையும் மோடி மிகவும் நேசிக்கிறார். அவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேச முடியவில்லை என்பது தான் வருத்தம். அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசிவிட்டால் தமிழகத்தையும் ஆட்சி செய்து விடுவார்.

    பிரதமர் மோடி குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. இதனால் உலகளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று மோடி கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றம் அடைய நேர்மையான ஊழல் இல்லாத அரசால் தான் முடியும். அது பா.ஜ.க அரசு அளிக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார். தி.மு.க. சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் அவர் மீது பா.ஜ.க.வினர் 400 பேர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையோ, வழக்கோ இல்லை.

    சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். மேலும் இந்து தர்மம், சனாதனம் மற்றும் நரேந்திர மோடியை பழித்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்.

    கோவையில் பேசிய நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் போது, கட்சிக்கு வரவில்லையே என பேசியிருக்கிறார். படத்திற்கு வந்த கூட்டம் என்பது அவர் நன்றாக நடிப்பதால் வந்தது.

    கட்சி ஆரம்பித்ததில் இருந்து தி.மு.க.வை எதிர்த்து வந்த கமல்ஹாசன் தற்போது தனது தன்மானத்தை மொத்தமாக தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கிறார். அவர்களது கம்பெனி படத்தில் நடிக்கிறார். இப்படி எல்லாம் செய்து தனது தன்மானத்தை இழந்ததாலேயே கமல்ஹாசனின் அரசியலுக்கு கூட்டம் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×