search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
    • திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.

    கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
    • அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

    இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.

    சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

    சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.

    சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
    • இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.

    உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.
    • ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன்.

    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

    தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர்," அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.

    ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர், கொடிவேரி அணையிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் முயற்சியை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

    நேற்றைய தினம், ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிக்களுக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSKபோட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.

    கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.

    பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி கொள்ளை முயற்சி.
    • சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி பெண் மருத்துவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், பெண் மருத்துவரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகமுகத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
    • எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
    • பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.

    மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    • பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.
    • கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடக்கிறது.

    பொதுக்குழு கூட்டம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுவது பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துடன் கட்சி தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட இருக்கிறது.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு மாவட்டத்திற்கு 15 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கூட்ட அழைப்பு மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மூலம் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 15 பேர் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார்.

    ஏற்கனவே 114 மாவட்ட செயலாளர்களை 6 கட்டங்களாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.

    விரைவில் மீதி உள்ள மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.

    2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தமிழக பிரதான அரசியல் கட்சிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, அடுத்தக் கட்ட நடவடிக்கை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்சி தலைவர் விஜய் பேச இருக்கிறார்.

    தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி வரும் விஜய் அறிவிப்புகள் தொண்டர்களிடையே மேலும் உற்சாகத்தை அதிகரித்து வருகிறது.

    • வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்ட்தில் அமைந்துள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக கீழ்க்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணத்தினையும் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50-ம், மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு) தலா ரூ.

    100-ம், பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70-ம் தேர்வு கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களை வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 25, 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1000). தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்படங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.
    • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22-ந்தேதி கூட்டி உள்ள தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே கர்நாடகா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து இப்போது கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு நேற்று கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கினார்கள்.

    அதை பெற்றுக் கொண்ட பினராயி விஜயன் மத்திய அரசின் ஒருதலைபட்சமான தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே கேரள மாநிலத்தில் இருந்தும் 22-ந்தேதி கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

    • டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
    • பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

    வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

    முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

    புதிய தொழில்நுட்பங்கள்,

    சிறு குறு விவசாயிகள் நலன்,

    மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

    டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

    வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

    எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    ×