என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரதமர் சாமி கும்பிடுவது மத உணர்வை தூண்டுவதாகும்- செல்வப்பெருந்தகை
- தமிழ்நாட்டு மக்கள் கட்டுக்கோப்பான இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்து பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பங்கேற்கும் கூட்டணிக்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். சமீப காலமாக நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வருகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிற வகையில் நிதி புறக்கணிப்பு செய்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படவிடாமல் முடக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற சூழலில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலமாக மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறார். 2019 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரை தோப்பூர் பகுதியில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் வரை வெறும் சுற்றுச்சுவர் தான் எழுப்பப்பட்டது. அதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை புறக்கணிப்பை வெளிப்படுத்துவதற்காக எய்ம்ஸ் செங்கல் தேர்தல் பரப்புரையில் பேசும் பொருளாக மாறியது.
ஒன்றிய அரசின் வரி வசூலில் உத்தரபிரதேச மாநிலம் ஒரு ரூபாய் செலுத்தினால் ரூ.2.02, மத்திய பிரதேசத்திற்கு ரூ. 1.70 திரும்ப தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு வழங்குகிற ஒரு ரூபாய்க்கு 26 காசு தான் திரும்ப தரப்படுகிறது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவிலேயே உள்ள மாநிலங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசால் கடுமையாக வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு தான். அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் கட்டுக்கோப்பான இந்தியா கூட்டணிக்கு அமோக ஆதரவு அளித்து பா.ஜ.க.வை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்து வருகிறார்கள்.
ஆயிரம் முறை நரேந்திர மோடி, அமித்ஷா தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. பங்கேற்கும் கூட்டணிக்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.






