என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று விஜய் குற்றம்சாட்டினார்.
- த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் மத்திய பா.ஜ.க. அரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் என்.ஆர்.காங்கிரசையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ, த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை விஜய் விமர்சனம் செய்தார். மத்திய பா.ஜ.க. அரசு மாநில அந்தஸ்து தரவில்லை, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சு உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் ஏற்கனவே நட்புணர்வு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ரங்கசாமி பேசினார். நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
இதனால் ரங்கசாமி வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் விமர்சிக்காதது இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதனை அரசியல் நோக்கர்கள் என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க. கூட்டணிக்கு அச்சாரமாக கருதுகின்றனர்.
- கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது.
- பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அவரை பார்க்க சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.
இதனால் மைதானம் அலங்கோலமாக காணப்பட்டது. கூட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்றதும், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தன்னார்வலர்களுடன் இணைந்து, மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுக்கூட்டத்துக்கு விதித்திருந்தனர்.
- நேற்று கல்லூரி, பள்ளிகள் இருந்தும், பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பது கடும் சவாலாக உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் ஊர்வலம், பொதுக்கூட்டம் பேரணி ஆகியவற்றுக்கு தினக்கூலி, குவார்ட்டர், பிரியாணி வழங்கி அழைத்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர வாகனங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நடைமுறை நீண்ட காலமாக புதுச்சேரியில் நடந்து வருகிறது. மக்களுக்கான போராட்டத்துக்கு கூட கூட்டம் சேர்ப்பது எளிதான காரியமாக இருந்தது இல்லை. ஆனால் த.வெ.க. நடத்திய பொதுக்கூட்டத்துக்கு தானாகவே முன்வந்து மக்கள் திரளாக பங்கேற்றனர்.
போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுக்கூட்டத்துக்கு விதித்திருந்தனர். வாகனங்களில் வந்தவர்களை அம்பேத்கர் சாலையில் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் வாகனங்களை கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு பொதுக்கூட்டத்துக்கு நடந்தே வந்து பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்தினர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள்தான். நேற்று கல்லூரி, பள்ளிகள் இருந்தும், பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் சிலர் தங்களின் கல்லூரி, பள்ளி சீருடையுடன் வந்திருந்தனர்.
பொதுக்கூட்டத்தை பொறுத்தவரை பாஸ் கொடுத்ததைவிட அதிகமானோர் வந்திருந்தனர்.
ஏற்கனவே விக்கிரவாண்டி, மதுரையில் நடந்த த.வெ.க. மாநாடு மற்றும் திருச்சியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.
தற்போது புதுவையில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் சேர்க்கவே திணறும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கூட்டத்தை த.வெ.க. கூட்டி சாதித்து காட்டியுள்ளது.
- தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.
- ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விஜய் பேசினார்.
இதுகுறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜயை பொறுத்தவரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பது தெரியாமல் பேசியுள்ளார். அவருக்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
தவறான கருத்துகளை விஜய் மக்களிடத்தில் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரியில் எதையாவது பேச வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். அவர் பேசியது கூட 12 நிமிடங்கள் தான். ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளை பேசிவிட்டு சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்கு பதிலாக பணமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம். அரிசியாக போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு நேரடி பணப் பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இலவச அரிசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.
தேர்தல் என்று வரும்போது நிறைய கூட்டணிகள் பேசுவார்கள். எந்த நேரத்தில் யாருடன் எந்த கட்சி செல்லும் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும். இன்று எதைவேண்டுமானாலும் அனுமானமாக பேசலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவாகும்.
புதுச்சேரி மக்கள் அரசியலை நன்கு அறிந்தவர்கள். இந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் குறைவின்றி நடைபெறும் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும்.
அதனால் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வழக்கம். அந்த அடிப்படையில் விஜயும் சொல்லி சென்றுள்ளார். 2026-ல் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு அவரால் எங்கும் கூட்டம் நடத்த முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட உள்ளரங்கத்தில் 2 ஆயிரம் பேரைக் கொண்டு ஒரு கூட்டம் நடத்தினார்.
புதுச்சேரியில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததால் விஜய் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.
பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார்.
- சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார்.
விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் இஷா சிங். யார் இவர்? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கிய நிலையில் அவரை பற்றிய தகவல்கள் வருமாறு:-
இஷா சிங் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை காவல்துறையில் சேர்ந்து கிழக்குபகுதி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சுகாதாரத்துறையில் போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் 2 பேர் உள்பட 6 பேரை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தார்.
இஷா சிங்கின் தாத்தா, தந்தை ஒய்.பி. சிங் இவர்களும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். தந்தை ஒய்.பி. சிங் கடந்த 2004-ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார். 'நேசனல் ஸ்கூல் ஆப் லா' கல்லூரியில் சட்டமும் படித்த இஷா சிங் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மும்பை ஐகோர்ட்டில் வாதாடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் இந்திய குடிமை பணிக்கான தேர்வு எழுதி தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாக உள்ளார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
- வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
- 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார்.
புதுச்சேரி :
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் பேசியதாவது:-
* த.வெ.க. பொதுக்கூட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த புதுச்சேரி அரசு, முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
* கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு புதுச்சேரி அரசு நன்றாக பாதுகாப்பு கொடுப்பதாகவும், இதைப் பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும்.
* ஆனால், அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
* புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்று சொல்கிறேன். திமுகவை நம்பாதீங்க. அவர்கள் நம்பவைத்து ஏமாற்றிவிடுவார்கள் என்றார்.
பொதுக்கூட்டத்திற்கு 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 11 நிமிடம் வரை பேசிய விஜய் மத்திய அரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
- புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படி மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எங்கும் கொடுத்தது கிடையாது.
தமிழக முதலமைச்சரே தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள், எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா.? த.வெ.க. பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் இன்று முதல் தொடங்கிவிட்டது.
தலைவர் புதுச்சேரிக்கு ஏன் வருகிறார்? என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்கு ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் செய்ய வேண்டும் என யோசித்தார்.
தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.
புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970-ல் உருவானது போல புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.
- புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் மத்திய அரசை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
* 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.
* புதுச்சேரியில் ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
* காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை, சுற்றுலா தளமான புதுவையில் பார்க்கிங் வசதி இல்லை.
* ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள் ஆகியும் பதவி தரப்படவில்லை.
* 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.
* புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.
* புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.
* இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
*மற்ற மாநிலம் போல அரிசி, பருப்பு வழங்கும் முறையை புதுச்சேரியில் சீராக்க வேண்டும்.
* வரும் புதுச்சேரி தேர்தலிலும் த.வெ.க.வின் கொடி பட்டொளி வீசி பறக்கும்.
* நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் என்றார்.
- புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
- தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
* புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க?
* மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி, பாண்டிச்சேரி தனி. ஆனால் நமக்கு அந்த வேறுபாடு கிடையாது. நாம் ஒன்று தான்.
* தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாமெல்லம் வேறு வேறு கிடையாது.. நாமெல்லாம் ஒன்று தான், சொந்தம் தான்.
* உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான். பாச உணர்வு இருந்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை.
* மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி.
* நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என நம்மை அலர்ட் செய்தது புதுச்சேரிதான்.
* தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர்.
* இந்த விஜய் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என்று நினைக்காதீர்கள். புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன், இது என் கடமை.
* தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள்.
* புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மனப்பூர்வ நன்றி. வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சிக்கு பாரபட்சம் காட்டவில்லை. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
- புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
- கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள்.
* புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
* புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
* காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அதைப்போலத்தான் த.வெ.க.வை நிறுத்த முடியாது.
* கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
* புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம்.
- வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மற்றும் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் முதல் முறையாக விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் என்பதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பொதுக்கூட்டம் என்பது மாநாடு போல் காட்சியளித்தது.
பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு முன்னதாகவே வந்த விஜய், சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக பிரசார வாகனத்தில் இருந்து வெளியே வரவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்த அவலநிலை ஏற்பட்டது.
இதன்பின் 11. 13 மணியளவில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு கூடியுள்ள கூட்டம் தலைவர் விஜய்க்காக வந்த கூட்டம். வேலை நாட்களில் இவ்வளவு பேர் கூடியுள்ளார்கள் என்றால் அது த.வெ.க. தலைவர் விஜய்க்காக மட்டும் தான்.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சி கண்டிப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026-ம் ஆண்டு விஜய் வருவார் என்றார்.






