என் மலர்
புதுச்சேரி
- புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
- ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதால் வரும் நிதி ஆண்டான 2026-27க்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு பதிலாக அரசின் செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக புதுவை சட்டசபை இன்று கூடியது. சபையில் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு மூலம் இடைக்கால பட்ஜெட்டுக்கு சபையின் ஒப்புதல் பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய அரசு அமையும். புதிய அரசு 2026-27ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
புதுவை சட்டசபையில் 2025-26ம் நிதி ஆண்டிற்கான அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவு அறிக்கையை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் துணை கொடையாக கோரினர். ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் கோரப்பட்டது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குரல் வாக்கெடுப்பு நடத்தி இந்த கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெற்றார்.
- தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார் எதிர்க்கட்சி தலைவர் சிவா.
- மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்துவோம் ரங்கசாமி பேச்சு.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது.
ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.
மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார்.
இத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என கூறினார்.
- பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
- வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தற்போதைய என்.ஆர். காங்.,-பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது. அதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை வரவழைத்து, அரசு விழா நடத்தி மத்திய, மாநில அரசுகள் சார்பில் மெகா திட்டங்களை அறிவிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி இன்று 12-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 14, 16 மற்றும் 21-ந் தேதிகள் அறிவிக்கப்பட்டது. பிரதமர் புதுச்சேரிக்கு வரும் தேதி உறுதி செய்யாத நிலையிலும், பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வருகைக்கு முன்பாக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேசி முடிவு செய்து பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகளை பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.
- மனைவி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த போர்வையை எடுத்து வந்து தீயை அணைத்தார்.
- லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிப்பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வர சோமநாதன் (வயது 60). இருசக்கர வாகன மெக்கானிக். அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று விஸ்வேஸ்வர சோமநாதன் வீட்டில் பெட்ரோல் பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை பழுது பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது தனலட்சுமி வீட்டில் சாமி கும்பிடுவதற்காக ஊதுபத்தியை கொளுத்தியபோது, அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி பறந்து பைக்கில் விழுந்தது. இதனால் பைக் திடீரென குபீரென்று தீப்பிடித்தது.
இதில் விஸ்வேஸ்வர சோமநாதன் உடலிலும் தீ பரவியது. இதனால் வலி தாங்காமல் விஸ்வேஸ்வர சோமநாதன் அலறினார்.
இதனை பார்த்ததும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த போர்வையை எடுத்து வந்து தீயை அணைத்தார்.
இதன் பின்னர் கணவரை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஸ்வேஸ்வர சோமநாதன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தியது.
- அநேகமாக இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நடப்பு ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டசபை நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது.
நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபையை குறள் வாசித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகிறது.
இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மேலும் நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கு சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. இதையடுத்து சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளான காங்கிரசும், தி.மு.க.வும் போலி மருந்து விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இதனால் நாளை கூடும் சட்டசபையே என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசின் நிறைவு சட்டசபையாக அமையும். தேர்தலுக்கு பிறகுதான் புதுவை சட்டசபை மீண்டும் கூடும். அப்போதுதான் முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.
அநேகமாக இந்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும். அன்றைய நாளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கார்கள், சட்டசபை அறை ஆகியவற்றை சட்டசபை செயலரிடம் ஒப்படைத்துவிடுவர்.
தேர்தல் வரை காபந்து முதல்-அமைச்சராக ரங்கசாமி தொடர்வார்.
- பண்டிகை நாட்களை கடந்து தற்போது சிறப்பு (விசேஷ) தினங்களுக்கான சலுகைகளையும் மதுபான கடைகள் அறிவித்து வருகின்றன.
- தகவலறிந்த கலால் துறை அதிகாரிகள் அந்த மது கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்கு பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும் போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக இருப்பதும் தான்.
மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரி நோக்கி வருகின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லவே வேண்டாம். பெங்களூருவில் இருந்து பைக்கிலேயே புதுச்சேரிக்கு பெண் தோழிகளுடன் படையெடுக்கின்றனர்.
புதுச்சேரியின் அடையாளங்களில் மதுவுக்கு ஓர் இடம் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனைத் துறையின் வருவாய் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு அது ரூ.1,100 கோடியாக உயர்ந்தது. தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் இடம்பெற்றுள்ள நிலையில் பண்டிகை நாட்களை கடந்து தற்போது சிறப்பு (விசேஷ) தினங்களுக்கான சலுகைகளையும் மதுபான கடைகள் அறிவித்து வருகின்றன.
பொதுவாக விசேஷ நாட்களில் துணிக்கடை, இனிப்புக் கடை என பல கடைகளில் அதிரடி சலுகை விலை தருவார்கள். அதுபோல் புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி மதுக்கடை ஒன்றில் சலுகை ஆபர் அறிவித்து போர்டு வைத்திருந்தனர். அதில் ஒரு முழு பாட்டில் (புல்) ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் வேகமாக பரவியதால் தகவலறிந்த கலால் துறை அதிகாரிகள் அந்த மது கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் காதலர் தினத்தையொட்டி மதுக்கடைகளில் சலுகை விலையில் மது விற்கக்கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து இந்த அதிரடி சலுகையை கடைக்காரர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
- தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.
- கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது.
இங்கு சிவனே முத்தப்பனாக உள்ளார். சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர்.
கண்ணூர் புதுச்சேரியின் மாகி பிராந்தியம் அருகில் உள்ளது. இதனால், மாகி மக்களும் முத்தப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். உள்ளூர் பாரம்பரியத்தின்படி புதுச்சேரி வாழ் மலையாள மக்கள் கடந்த 7 ஆண்டு களாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.
இந்த முறை 8-வது ஆண்டாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் முத்தப்பன் விழா நடந்தது. தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.
இறுதிநாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.
கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முத்தப்பனிடம் காதில் தனது வேண்டுதலை சொல்ல அதற்கு முத்தப்பன் அருள்வாக்கு கூறினார்.
தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும் தென்னங்கள ஆகியவற்றை கொடுத்து வழிபட்டனர்.
- சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.
- தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம கூறியதாவது:-
மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் தேர்தல் பணிகள் இருப்பதினால் முன்னதாகவே சனிபகவானை தரிசிக்க வந்தேன்.
சனிபகவானை கும்பிட்டு தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்கும்.
தமிழகத்தை அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பது மக்கள் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் என மக்கள் பேச தொடங்கி விட்டனர். புதுவையிலும் இந்த பேச்சு தொடங்கி விட்டது. அற்புதமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் செல்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும்.
- பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் இப்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக 10 சதவீத நிதி கோரியுள்ளனர். இதன் பின்னர் தான் மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கப்படும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
புதுச்சேரியில் 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் 6 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.
2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும். புதுச்சேரி, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, கேரளாவை இணைத்து சாலை, ரெயில் வளர்ச்சி, கிழக்கு கடற்கரை சாலை வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். சென்னை, ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் 2047-க்குள் மிகப் பெரிய வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி செல்லும்போது அனைத்து மாநிலமும், அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைவர். அதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது. மீண்டும் பிரதமர் தமிழகம், புதுச்சேரிக்கு வருவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். பல கட்சி களோடு பேசி வருகிறோம். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் பா.ஜ.க.வினர் அல்ல, நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்ட ஒன்று, தி.மு.க. வீட்டுக்கு செல்லும் நாள் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் இன்று வரை யார் உள்ளார்கள்? என்றே தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டத்தையே நடத்தி விட்டோம். எங்கள் கூட்டணி, வலுவான கூட்டணி, ஆட்சி அமைக்கும் கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
- மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தனியார் நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலம் கல்வி, சுகாதார துறைகளில் முன்னோடியாக உள்ளது. சிறிய மாநிலம், மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு ஏராளமான கல்லி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன.
இருந்தாலும் திறன் மேம்பாட்டு துறையில் பின்தங்கி இருக்கிறது. அரபிந்தோ ஆசிரமத்தில் உற்பத்தியாகும் அகர்பத்தியை தவிர வேறு எந்த உற்பத்தியும் இல்லை.
புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பினை ஏற்படுத்து பவர்களாக புதுச்சேரி இளைஞர்கள் மாற வேண்டும். மத்திய அரசின் வருவாயை பெரிதும் சார்ந்து நிற்கிறோம்.
இதில் பெரும்பாலும் அரசின் ஊழியர் சம்பளம் பென்ஷனுக்கு செலவிடப்படுகிறது. எனவே புதுச்சேரியின் வருவாய் உயர்த்தப்பட வேண்டும். இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மது வகைகள் மீதான வரி குறைப்பு ஆகியன தேவையற்றவை.
மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும். இதனால் அரசின் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் குறையும்.
ஆளுநரும், முதலமைச்சரும் மோதலின்றி பணியாற்ற வேண்டும் என்றால் இருவருக்கும் மக்கள் நலம் என்ற ஒற்றை குறிக்கோள் இருக்க வேண்டும். அப்போது தான் மோதல் ஏற்படாது. ஆளுநர், முதலமைச்சர் மோதலால் மக்கள் பணம் தான் வீணடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.
- முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
- 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
- அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கான டெண்டர் பணிகளையும் கலாத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகம்-புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி அரசு துறைகள் முழு வேகத்தில் சுழல தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களை அணுகும் உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் புதுச்சேரி கலால் துறைக்கு தேர்தல் நேரத்தில் உருவாகும் முக்கிய சவால்களில் ஒன்றான மதுக்கடத்தலை தடுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
மது கடத்தலை தடுக்க புதுச்சேரியில்-15, காரைக்கால்-10, ஏனாம்-10, மாகி-6 என மாநிலம் முழுவதும் 41 சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
புதுச்சேரி பிராந்தியத்தை பொறுத்தவரை மதகடிப்பட்டு, திருக்கனூர், கோரிமேடு, அய்யங்குட்டிப் பாளையம், கனகசெட்டிக்குளம், தவளக்குப்பம், மடுகரை, சோரியாங்குப்பம் முள்ளோடை, சேதராப்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், மணமேடு, கரையாம்புத்தூர், காமராஜர் மணிமண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
இந்த கலால் சோதனை சாவடிகள் புதுச்சேரி மாநிலத்திற்குள் உள்ளே, வெளியே வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, பணம், மதுபாட்டில்கள், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கலால் சோதனை சாவடிகளுக்கு மின்வசதி, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கான டெண்டர் பணிகளையும் கலாத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கலால் பறக்கும் படைகள் அமைப்பதற்கான பணிகளையும் இப்போதே தொடங்கிவிட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது புதுச்சேரியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






