என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 சிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • போலீசார் 2 சிலைகளையும் கைப்பற்றி, பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த மணப்பட்டு மூ.புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.

    இங்குள்ள பல்மைரா கடற்கரை பகுதியில், நேற்று மாலை ஒரு நந்தி கற்சிலையும் அதற்கடுத்து 50 மீட்டர் தொலைவில் மணல் பரப்பில் மற்றொரு சாமி கற்சிலையும் கிடந்தது. இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.

    உடனே கிராம மக்கள் அப்பகுதிக்கு திரண்டனர். திடீரென சாமி சிலைகள் கடற்கரையில் கிடந்ததால் கிராம மக்கள் பக்தி பரவசமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 சிலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதில் சிலைகள் இருந்த இடத்தின் அருகே 2 சாக்கு பைகள் மற்றும் 4 சக்கர வாகனம் வந்து சென்றதற்கான டயரின் தடம் மணல் பரப்பில் இருந்தது. அந்த 2 சிலைகளையும், யாரோ கொண்டு வந்து வீசி சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    போலீசார் 2 சிலைகளையும் கைப்பற்றி, பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிலைகளை வீசி சென்றவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்து வீசி சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
    • வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருவது உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்த வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    பின்னர் விமான நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடு தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

    2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பிரதமரின் வருகையின்போது அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.
    • 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதோடு தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக சட்டசபை கூடி அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் முதலமைச்சரும் நிதி அமைச்சருமானா ரங்கசாமி அரசின் 4 அல்லது 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி அன்று கூட்டப்பட்டு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கவர்னர் உரையுடன் தொடங்கிய அந்த கூட்டத்தொடர் 13 நாட்கள் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதன் 2-ம் பகுதி கடந்த செப்டம்பர் 18-ந்தேதி அன்று கூட்டப்பட்டு பேரவையின் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேற்றப்பட்டு மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளகத்தில் உள்ள பேரவைக் கூட்டத்தில் மீண்டும் கூட்டப்படும்.

    அரசின் அன்றைய தினத்தில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். பேரவையில் முன்வைக்க வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அன்றைய தினம் வைக்க அரசு துறைகளுக்கு அறுவுறுத்தப்படும். மேலும் 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.

    சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடிதான் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்று முடிவு செய்யும்.

    அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி புதுச்சேரி வரவுள்ளார். அரசியல் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. முழுக்க அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே வருகிறார். அரசியல் கூட்டமும் அன்றைக்கு கிடையாது.

    புதுச்சேரிக்கு மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,157 கோடி. இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.86 கோடி கூடுதல் நிதியை வழங்கியுள்ளது. இதுபோல் புதுச்சேரி மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.

    புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஒப்புதல் அளிக்குமாறும் அதைத் தொடங்கி வைக்குமாறும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

    இந்த திட்டம் ரூ.657 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு கடனாக வாங்கிக் கொள்ளுமாறும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி கொடுத்தால் போதும் என்றும் அரை பைசா வட்டியில் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு 2025 டிசம்பர் மாதமே ஒப்புதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி
    • தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது

    15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தொடங்கும் என சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரும் துணை மானியக் கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். 

    மேலும் புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசுகின்றனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலை முன்வைத்து கடந்த பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதே போல் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதியோர், உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் மோடியும் புதுச்சேரிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    • நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • தவறினால் அது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது.

    இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது.

    இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை அதிரடியாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து நிர்வாக சீர்த்திருத்தத்துறை அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய வெளிப் பிராந்தியங்களில் நியமிக்கப்பட்ட அமைச்சகப் பணியாளர்கள், புதுச்சேரி பிராந்தியத்திற்கு சேவை இடமாற்றம் எனும் சர்வீஸ் பிளேஸ்மென்ட் செய்வதை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    எனவே, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த அமைச்சகப் பணியாளர்கள் எவரேனும் புதுச்சேரிக்கு சேவை இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, அவர்களை மீண்டும் அந்தந்த அலுவலகங்களிலேயே பணியமர்த்த வேண்டும்.

    அவசரத் தேவையின் காரணமாக சேவை இட மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு கவர்னரின் கட்டாய அனுமதி பெறப்பட வேண்டும். நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள் இந்த அறிவுறுத்தல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறினால் அது தீவிரமாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.
    • ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, அரியாங்குப்பம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் சகாயலூர்துசாமி. இவரது மனைவி ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி (48).

    இவர் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவரின் உறவினரான கட லூர் கோண்டூரை சேர்ந்தவர் ஜவகர் கென்னடி (56). இவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.

    மேலும், ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியின் உறவினரான மூலக்குளத்தை சேர்ந்த சவரியம்மாளுக்கு, தனது காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக ரூ.1 கோடியை, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி மூலம் பெற்றார்.

    ஆனால் அந்த காலிமனையை வேறு ஒருவரிடம் ஜவகர் கென்னடி விற்று விட்டார்.

    இதனை அறிந்த ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் டாக்டர் ஜவகர் கென்னடி நகை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். நகை-பணம் மோசடி செய்யப்பட்டதால் ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதனடிப்படையில் முருகானந்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் கட லூர் மாவட்டம் கோண்டூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த டாக்டர் ஜவகர் கென்னடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.17 லட்சத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.
    • புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் தன்னை கேரளா மாநில லாட்டரி சீட்டு ஏஜெண்டு என அறிமுகம் செய்து கொண்டு பேசினார். அப்போது அவர் எங்களது லாட்டரி சீட்டில் உங்களுக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்காக வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.

    பரிசு விழுந்த ஆசையில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு தொழிலதிபர் ரூ.21 லட்சத்து 61 ஆயிரத்து 916 அனுப்பினார். பின்னர் எந்த தகவலும் வராததால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

    பின்னர் இதுபற்றி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் மலர் செடிகளை விலைக்கு வாங்கிச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மலர் கண்காட்சியையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் வேளாண்துறை சார்பில் வேளாண் விழா 2026, 36-வது மலர், காய், கனி கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.

    கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இன்று தொடங்கி 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகள், புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் ஏராளமான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் விதவிதமான காய், கனி வகைகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

    மேலும் பொதுமக்கள் மலர் செடிகளை விலைக்கு வாங்கிச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. நிறைவு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், மலர் ராஜா, மலர் ராணி ஆகியோருக்கு பட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சரண்யாசிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மலர் கண்காட்சியை முன்னிட்டு தற்காலிக வாகன நிறுத்தமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் பழைய பஸ் நிலையம், நகராட்சி வளாகத்திலும், டிரைவர்கள் மூலம் இயக்கப்படும் 4 சக்கர வாகனங்கள் பழைய துறைமுக பகுதியிலும், சுய டிரைவர் 4 சக்கர வாகனங்கள் அண்ணா திடலிலும் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர்.
    • இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 226 செவிலியர் அதிகாரிகள் மற்றும் சுகாதரத்துறையின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் 67 மருந்தாளுநர், இ.சி.ஜி. டெக்னீஷியன், சுகாதார உதவியாளர், தியேட்டர் உதவியாளர், ஏ.என்.எம் ஆகியோருக்கு பணியாணை வழங்கும் விழா நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணியாணை வழங்கி பேசியதாவது:-

    இந்த பணியாணை கொடுப்பதை பெரிய விழாவாக எடுக்கலாம். ஆனால் அதற்குள் யாரேனும் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கி வந்துவிடுவார்களோ என்ற பயம். இதனை எவ்வளவோ சிரமப்பட்டு செய்துள்ளேன். இந்த பணியாணை வழங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. துறையாக இருந்தால் கோப்பை சுத்த விடுவார்கள். பல்வேறு துறைகளுக்கு சென்று வரவேண்டும். சிரமங்கள் இருக்கும். இது சொசைட்டியாக இருந்தும் முறையாக நிரப்புவதற்கு 2 ஆண்டுகள் ஆனது.

    இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் செவிலியர் பணி தேர்வில் ஊழல் என்று சில அரசியல்வாதிகள் சொல்கின்றனர். செவிலியர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஆனால் எதையாவது பேச வேண்டும் என்று பேசுகின்றனர். எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் யாரும் குறை சொல்ல முடியாத அளவில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த செவிலியர் பணி தேர்வை நிறுத்த சென்னை கோர்ட்டுக்கு சென்றனர். ஆனால் முடியவில்லை. நீதிமன்றம் தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. அதன்பிறகு வேகமாக அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்னும் ஓரிரு மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன்பிறகு பணியிடங்களை நிரப்ப முடியாது. அப்போது பல சிரமங்கள் இருக்கும். இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கத்தான் வேகமாக பணி செய்து வருகிறேன். இன்னும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஓரிரு நாள்களில் 190 ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்க உள்ளோம். மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்க இருக்கிறோம். இன்னும் 100 செவிலியர் விரைவில் எடுக்க உள்ளோம். அடுத்த 2 மாதத்தில் 400 மேல்நிலை எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

    புதுவை காங்கிரசார் கடந்த 21-ந் தேதி முதல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசை கண்டித்து பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையில் முன்னாள் முதல்-அமைச்சர்களான வைத்திலிங்கம், நாராயணசாமி ஆகியோர் புதுவை அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியுள்ளார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் முகமது யாசின், இயக்குநர் செவ்வேள், மருத்துவக் கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
    • பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்பு என்ற ஜவகர் (வயது 24). இவர் மீது 2 கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள பேக்கரியை மாமூல் கேட்டு சூறையாடிய வழக்கில் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்னப்பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 பைக்கில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்புவை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டினர். இதில் அப்பு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தகவலறிந்த கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அந்த சம்பவத்தில் இருந்து அந்த கும்பல், அப்பு மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    கொலைக்கு முன்னர் அப்புவுடன் மது அருந்தி கொண்டிருந்த பாலகணேஷ் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் அப்புவின் எதிராளிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என கருதி அவர்கள் 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலணி இரண்டாக கிழிந்ததால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
    • மன உளைச்சலுக்கு ஆளான சஜினா புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிராந்தியம் மாகியை சேர்ந்தவர் நிபின்ராஜ்.

    இவர் தனது உறவினரும், வக்கீலுமான சஜினாவுக்கு 2024-ம் ஆண்டு ஆன்லைனில் காலணி ஆர்டர் செய்து பரிசாக வழங்கினார். அந்த காலணியை அணிந்து வக்கீல் சஜினா கோர்ட்டுக்கு சென்றார்.

    அப்போது காலணி இரண்டாக கிழிந்ததால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான சஜினா புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணையின் முடிவில் காலணி தயாரித்த நிறுவனம் காலணிக்குரிய தொகை ரூ.4 ஆயிரத்து 547-ஐ வட்டியுடன் செலுத்த வேண்டும். மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

    ×