என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி சட்டசபையில் 12-ந்தேதி இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்
    X

    புதுச்சேரி சட்டசபையில் 12-ந்தேதி இடைக்கால பட்ஜெட்: முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்

    • 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.
    • 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதோடு தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக சட்டசபை கூடி அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

    அன்றைய தினம் முதலமைச்சரும் நிதி அமைச்சருமானா ரங்கசாமி அரசின் 4 அல்லது 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு மார்ச் 10-ந்தேதி அன்று கூட்டப்பட்டு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கவர்னர் உரையுடன் தொடங்கிய அந்த கூட்டத்தொடர் 13 நாட்கள் நடைபெற்று பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதன் 2-ம் பகுதி கடந்த செப்டம்பர் 18-ந்தேதி அன்று கூட்டப்பட்டு பேரவையின் அனைத்து அலுவல்களும் அன்றைய தினத்திலேயே நிறைவேற்றப்பட்டு மீண்டும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து 6-வது கூட்டத்தொடரின் 3-வது பகுதி வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளகத்தில் உள்ள பேரவைக் கூட்டத்தில் மீண்டும் கூட்டப்படும்.

    அரசின் அன்றைய தினத்தில் 2026-27-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் முதலமைச்சர் தாக்கல் செய்கிறார். பேரவையில் முன்வைக்க வேண்டிய விதிகள் மற்றும் ஏடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அன்றைய தினம் வைக்க அரசு துறைகளுக்கு அறுவுறுத்தப்படும். மேலும் 2025-2026 நிதி ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் சட்டப்பேரவையில் ஒப்புதல் கோரப்படும்.

    சட்டப்பேரவையை நீண்ட நாட்கள் நடத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூடிதான் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்று முடிவு செய்யும்.

    அரசு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி புதுச்சேரி வரவுள்ளார். அரசியல் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை. முழுக்க அரசு நிகழ்ச்சிக்காக மட்டுமே வருகிறார். அரசியல் கூட்டமும் அன்றைக்கு கிடையாது.

    புதுச்சேரிக்கு மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,157 கோடி. இது சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.86 கோடி கூடுதல் நிதியை வழங்கியுள்ளது. இதுபோல் புதுச்சேரி மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.

    புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கான ஒப்புதல் அளிக்குமாறும் அதைத் தொடங்கி வைக்குமாறும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.

    இந்த திட்டம் ரூ.657 கோடியில் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு கடனாக வாங்கிக் கொள்ளுமாறும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி கொடுத்தால் போதும் என்றும் அரை பைசா வட்டியில் இந்தக் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசு 2025 டிசம்பர் மாதமே ஒப்புதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×