என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு சார்பில் மானிய விலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகள் போன்றவை விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக மானிய விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தீபாவளி சிறப்பு அங்காடி அமைக்கவில்லை.

    தற்போது கான் பெட் நிறுவனம் சார்பில் பட்டாசு விற்பனை சிறப்பு அங்காடி மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பட் டாசு சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார்.

    மேலும் இதேபோன்று கூட்டுறவு துறையின் மார்க்கெட் சொசைட்டி சார்பில் சூப்பர் மார்க்கெட் மற்றும் பட்டாசு விற்பனை கடையை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் நலிந்து போன கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு அங்காடிக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அங்காடியில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்க்கரை ஆலை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது. சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாண்லே நிறுவனத்திற்கு 2024-25 ஆண்டில் 102 கூட்டுறவு சங்கங்களின் மூலம் பால் வழங்கிய 7,500 பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கப்படும். அதாவது, மொத்த மதிப்பில் ரூபாய்க்கு 5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் பாண்லே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி கூடுதலாக செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப் பணித்துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

    புதுவை எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள ராகவேந்திரா நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை ராகவேந்திரா நகர், மாரியம்மன் நகர், பூமியான்பேட்டை, கோடிசாமி நகர், நடேசன் நகர் கிழக்கு, மேற்கு, பாவாணர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும்.
    • தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆண்டு தோறும் சராசரியாக 1, 330 மி.மீ. மழை பதிவாகும்.

    தென்மேற்கு பருவமழை காலத்தைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பதிவு அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக 173.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த காலத்திலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும். 2 முதல் 3 புயல்கள் தாக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கிடையே, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திலும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக புகார் எழுந்தது.

    பல்கலைக்கழகத்தில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 9-ந்தேதி துணை வேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு நீடித்ததால், காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி 24 மாணவ-மாணவிகளை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா, பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக தரணிக்கரசு நியமிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வில்லியனுார் எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 முதல் 2 மணி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதுபோல் 10-ந் தேதி ஆரியப்பாளையம், 11-ந் தேதி கூடப்பாக்கம், 13-ந் தேதி கூடப்பாக்கம் பேட், ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மேற்கண்ட தேதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
    • கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

    பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

    ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
    • 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மீனவர்களின் 4 படகுகளை விடுவிக்க கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜூவாலலைதீன் துறைமுகத்தில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழாகா சாகுடி பகுதியை சேர்ந்த கலைமணி மற்றும் முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான படகுகள், உள்ளூர் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜூவாலலைதீன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    அதேபோல் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதத்துக்கு சொந்தமான 2 படகுகள் என மொத்தம் 4 மீன்பிடி படகுகள் உள்ளூர் மீனவர்களால் அதே துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விரைந்து விடுவிப்பதற்கு ஆந்திர அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அனைத்திற்கும் நாளை (அக்டோபர் 03) அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதியை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
    • த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகம், புதுவை சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட உள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி காலை புதுச்சேரிக்கு வர உள்ளார். இதனையொட்டி த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுவை காவல்துறை சார்பில் கலந்து ஆலோசித்த பின் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து த.வெ.க.வினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

    அவர்களிடம் விவரத்தை கேட்டு அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி மனுவை மாவட்ட கலெக்டருக்கு கையெழுத்திட்டு பரிந்துரை செய்தார்.

    வருகிற 11-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காலை 11 மணிக்கு வரும் விஜய்க்கு த.வெ.க.வினர் காலாப்பட்டில் வரவேற்பு தருகின்றனர். அங்கிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்சில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் அவர், புதுவை அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, சோனாம்பாளையம், மரப்பாலம் பகுதிகளில் விஜய் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் பேசவும் அனுமதி கோரி உள்ளனர்.

    தொடர்ந்து பஸ்சில் அரியாங்குப்பம், மண வெளி, கன்னியகோவில் வழியாக மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி விஜய் கடலூர் செல்கிறார். விஜய் பிரச்சாரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளிக்கும் என தெரிகிறது.

    • புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர்.
    • புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது.

    புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் சார்லஸ் மார்ட்டின் கலந்துகொண்டு, வணிகர்கள் நாட்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், அங்காளன், ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் 50 சதவீத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்றும் 30 சதவீதம் பேர் வெளியூர் சென்று வேலை பார்ப்பதாகவும் கூறினார். மேலும் வணிகர்கள் சுலபமாக வணிகம் செய்ய ஒற்றை சாளர முறையை (Single Window System) உருவாக்க வேண்டும் எனவும், இங்கு ரவுடீசம் அதிகமாக உள்ளது என தொழில் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பல தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வருவதில்லை. இனி வரும் காலத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரும். அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

    மேலும் புதுச்சேரியில் உள்ள பல படித்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று வேலை செய்கின்றனர். புதுச்சேரியில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது அவற்றை பண்படுத்தி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். மக்களும் அதைதான் விரும்புகிறார்கள், அது நிச்சயம் நடக்கும் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நம்பிக்கை தெரிவித்தார்.

    • 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
    • போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாய நலக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 70). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கணவர்களுடன் தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இதில் 3-வது மகள் அனந்தநாயகி (37). இவர் தனக்கு சொந்தமான வீட்டு பத்திரத்தை கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப தேவைக்காக தனது தாயார் ராஜேஸ்வரியிடம் அடகு வைத்து ரூ.2லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுத்து பத்திரத்தை மீட்டு கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.

    ஆனால் 4 ஆண்டுகளாகியும் அனந்தநாயகி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதற்கிடையே பத்திரத்தை ராஜேஸ்வரி சிலரிடம் காண்பித்த போது அது கலர் ஜெராக்ஸ் பத்திரம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தனது மகளிடம் பணம் அல்லது ஒரிஜினல் பத்திரத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராஜேஸ்வரி, தனது மகள் அனந்தநாயகி மீது புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அனந்த நாயகி மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும்.
    • கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் விஜய் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு "76 வருஷம் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பார்த்துவிட்டோம். விஜய் பற்றி எதுவும் கேட்காதீர்கள். இதை வெளிப்படையாக சொல்கிறேன்" என்றார்.

    அவருக்கு கூட்டம் அதிக அளவில் கூடுகிறதே? எனக் கேள்வி எழுப்ப, "நாராயணசாமி நாயுடு என்பவர் 1980களில் இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா?. தெரியுமா?. தெரியாதா.., அவர் விவசாய கட்சியை நடத்தினர். அவருக்கு மக்கள் அதிக அளவில் கூடினர். 1980 தேர்தலுக்கு முன்னாடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அவரை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். இந்திரா காந்தி சென்று பார்த்தார். கலைஞரும் சென்று பார்த்தார். மூன்று பேரும் ஆதரவு கேட்பதற்கான போனார்கள். அந்த கட்சி இப்போது இருக்கா? இப்படி பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எட போட முடியாது.

    40 வருடத்திற்கு முன்னதாக, எம்.ஜி.ஆர்.ஐ எதிர்த்து பழனிபாபா பேசி வந்தார். நான், பேராசிரியர் வெள்ளாளர் தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினோம். அதன் அருகில் பழனிபாபா பேசினார். எங்கள் கூட்டத்திற்கு 100 பேர்தான் வந்திருந்தனர். அவரது கூட்டத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்தனர். அப்போது பேராசிரியர், இது கொள்கை கூட்டம். இது மாயை கூட்டம் என்றார். அந்த கூட்டம் என்னாச்சு?

    திடீர் பிள்ளையார் கூப்பிடுகிறார் என்றால், ஒரு மணி நேரத்தில் கூட்டம் கூடும். கூட்டத்தை வைத்து முடிவு எடுக்க வேண்டாம் என்றார்.

    விஜய்க்கு கூடும் கூட்டம் மாயை கூட்டம் என எடுத்துக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, அதை நீங்கள்தான் முடிவு செய்யனும் என பதில் அளித்தார்.

    ×