என் மலர்
புதுச்சேரி
- தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும்.
- புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது.
கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் தங்க தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா ஆகியோர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும். ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஒரு கோடி வீடுகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று, 2.70 கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர்.
அடுத்தகட்டமாக புதுவை மாநிலத்திலும் வருகிற 2026 தேர்தலையொட்டி ஒரு வாரத்துக்குள் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
இதற்கான ஆயத்த பணியை தொடங்க கதிர்காமம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு, கருணாநிதி சிலை திறப்பு, இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்ததுபோல நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். 30 தொகுதியிலும் திமுக வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வோம்.
புதுச்சேரியில் 4 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. 5-வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரத்தில் தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு அமையும்.
புதுச்சேரிக்கும் சேர்த்து தமிழக தி.மு.க.தான் தலைமை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகம், புதுச்சேரி மாநில முடிவுகளை எடுப்பார்கள். யாருக்கு எத்தனை சீட் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அதை தி.மு.க ஏற்கும், காங்கிரசும் ஏற்கும் என நம்புகிறேன். 30 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளை தி.மு.க. உருவாக்கும்.
அண்ணாமலை பியூஸ் போன பல்பு. அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் சரியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம். தி.மு.க. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 2019 முதல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
அவர் கூட்டணியிலிருந்து அல்ல, கட்சியிலிருந்து பாதி பேர் வெளியே சென்று விட்டனர். ஒவ்வொருவராக தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி அவர் நிலையை முதலில் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விஜய் பற்றி கேட்காதீர்கள். 1980 தேர்தலுக்கு நாராயணசாமி நாயுடுக்கு மிகப்பெரும் கூட்டம் கூடியது.
அவரை இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி சென்று பார்த்தனர். அந்த கட்சி இப்போது எங்கே உள்ளது? இதுபோல பல உதாரணம் உள்ளது. கூட்டம் சேர்வதை வைத்து கணக்கிட கூடாது. திடீர் பிள்ளை யாருக்கு கூட கூட்டம் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நகரப்பகுதியான உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில் கடந்த 7-ந் தேதி பலருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது.
அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பொது பணித்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், முத்தரையர் பாளையத்தில் இருந்து நகரப் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனை உடனடியாக சீரமைத்தனர்.
இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், ராஜய்யா தோட்டம், புது அய்யனார் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டடோர் நேற்று மாலை வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு அப்பகுதிகளில் சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
- நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது.
பாகூர்:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பாகவே கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.
அதுபோல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் நீர் வடிகால் வாய்க்கால் மூலம் ஆறுகள் வழியாக கடலில் கலக்கிறது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளான திருவண்ணா மலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதன்படி தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாகூர் வருவாய் துறை, மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், கரையோரம் அமைந்துள்ள புதுவை கிராமங்களான மணமேடு, சோரியாங் குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் கொமந்தான்மேடு ஆகிய கரையோர கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரிப்பால் கொமந்தான் மேடு தரைபாலத்தில் தண்ணீர் வழிந்து ஓடுகிறது. அப்பகுதியில் தரைப்பாலம் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலையும் மூழ்கியது.
இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சித்தேரி அணைக்கட்டிலும் நீர்வரத்து அதிகரிப்பால் அந்த வழியும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள் பல கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று வருகின்றனர்.
- மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
- உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகிவருகிறது.
குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் இதில் மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை, தன்மையையும் அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் இணைய வழி அறிவிப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
- ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது.
புதுச்சேரி:
புதுவையில் பிராந்தி, பீர், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகள் 558 உள்ளன.
மது கடைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். உரிமம் கட்டணத்தை கடந்த 2015-க்கு பிறகு 10 ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிமம் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், அரசாணை வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உரிமம் கட்டணம் உயர்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் மது உற்பத்தி செய்யும் ஐ.எம்.எப்.எல். மதுபான தொழிற்சாலைகளுக்கான உரிமக் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூடுதல் 1 லட்சம் லிட்டர் மது உற்பத்திக்கும் ரூ.2 லட்சம் உரிமம் தொகை செலுத்த வேண்டும்.
எப்.எல். 1 என்ற மொத்த மதுபான விற்பனை கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், எப்.எல். 2 சில்லரை மதுபான கடைகளுக்கான உரிமம் கட்டணம் ரூ.19 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து வகை உரிமம் கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது
இதுபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கலால் வரியும் 2018-க்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. பீர் ஒரு லிட்டருக்கு ரூ. 3.50 இருந்து ரூ.5 ஆகவும், மதுபானங்கள் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வரி 2001-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையிலிருந்து ஏற்றுமதியாகும் பீர்களுக்கு ஒரு லிட்டருக்கு 75 பைசாவில் இருந்து ரூ. 5 ஆகவும், மதுபானங்களுக்கு ரூ. 1-ல் இருந்து ரூ.7 ஆகவும் உயர்ந்துள்ளது.
புத்தாண்டு காலங்களில் மதுபானங்களை விற்க சிறப்பு அனுமதி பெற கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை அரசிதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த ஆண்டு கலால்துறை ரூ.1500 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.1850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உரிமக்கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி வரி உயர்வு மூலம் கூடுதலாக ரூ.100 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர்.
- புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் இரங்கல் குறிப்பை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வாசித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ஏடுகளை தாக்கல் செய்தனர். தொடர்ந்து வணிகம் செய்தலை எளிதாக்கும் சட்டமுன்வரைவு, சரக்கு சேவை வரி சட்டதிருத்த மசோதா சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சபையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரிகுறைப்புக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை 10.20 மணிக்கு புதுவை சட்டசபையை கால வரையின்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஒத்திவைத்தார். ஒட்டுமொத்தமாக 45 நிமிடத்தில் புதுச்சேரி சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.
- சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். பேரவை முன்பு முதல்-அமைச்சர் தாக்கல் செய்யவேண்டிய ஏடுகளை சமர்பிக்கும்படி கோரினார்.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு குறுக்கிட்டு, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் எனது தொகுதியில் 6-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதுபற்றி விவாதிக்க வேண்டும். இதற்காக சபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து, புதுச்சேரியின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சட்டசபையை குறைந்தபட்சம் 10 நாட்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முதல்-அமைச்சருடன் கலந்து பேசி சபையை நடத்துவது குறித்து தெரிவிக்கப்படும். தற்போது இருக்கையில் அமருங்கள் என கூறினார். ஆனாலும் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
புதுச்சேரியின் மக்கள் நல பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும். சட்டமன்ற அறிவிப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் காரணம் என கூறவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது.
இதுதொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 நாட்களாவது சபையை நடத்துங்கள் என பேசினார். அப்போதும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சபையை தொடர்ந்து நடத்த அமருங்கள். முதல்-அமைச்சருடன் பேசி சபையை நடத்துவது குறித்து முடிவெடுப்போம் என்றார்.
இந்த நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தனது இருக்கையிலிருந்து வெளியேறி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சென்று ஒரு மனு அளித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையை நடத்த இடையூறாக இருந்தது. இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தர்ணா செய்யும் உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக சபையிலிருந்து வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சபை காவலர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியகராஜன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோரை குண்டுக்கட்டாக தூக்கி சபையிலிருந்து வெளியேற்றினர். அப்போது எதிர்கட்சித்தலைவர் சிவா, அராஜகம் ஒழிக, ஜனநாயக படுகொலை என கோஷமிட்டார்.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மைய மண்டப நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனிடையே சபை நடவடிக்கைகள் தொடர்ந்தது.
- சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
- சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் 12-ந் தேதி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27-ந் தேதி வரை (13 நாட்கள்) மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் (செப்டம்பர்) சட்டசபை கூட்டப்பட வேண்டும்.
அதன்படி புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபையை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.
தொடர்ந்து ஜி.எஸ்.டி. திருத்த மசோதா, எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே சட்டசபை நடைபெறும் எனத்தெரிகிறது. எத்தனை நாள் சபை நடத்தப்படும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும்.
- விபத்தில் கேஷ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏ.சி. மெஷின், மேஜை, நாற்காலி போன்றவை முழுமையாக எரிந்தன.
- ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது.
நேற்று மாலை பணி முடிந்ததும் இந்த வங்கியை வழக்கம் போல் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு வங்கியின் உள்ளே இருந்து புகை வந்தது. இதனை பார்த்த வங்கி நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரவு காவலாளி உடனடியாக அவசர போலீஸ் 100-க்கு டெலிபோன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அருகில் உள்ள ஒதியன்சாலை போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதனிடையே தகவல் அறிந்த தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
விபத்தில் கேஷ் கவுண்டரில் இருந்த பணம் எண்ணும் எந்திரம், ஏ.சி. மெஷின், மேஜை, நாற்காலி போன்றவை முழுமையாக எரிந்தன.
மேலும் அவற்றின் மீது வைக்கப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகின. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
அதே நேரத்தில் வங்கியில் பணம் வைக்கும் அறைக்கு தீ பரவாமல் அணைக்கப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் தீயில் இருந்து தப்பின.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் கேஷ் கவுண்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் வங்கியில் ஏற்பட்ட தீவிபத்தால் புதுச்சேரி நகர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- மத்திய சிறைச் சாலை, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு
புதுச்சேரி:
புதுவை மின்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை வில்லியனூர் - காலாப்பட்டு மின் பாதையில் பராமரிப்பு பணிகள் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை கனகசெட்டிக்குளம் சுனாமி குடியிருப்பு, மத்திய சிறைச் சாலை, அம்மன் நகர், பெரிய காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இதேபோல் ஆலங்குப்பம் மின்பாதைக்கு உட்பட்ட புதுவை மத்திய பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு. தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஆலங்குப்பம், சஞ்சீவி நகர், கருவடிக்குப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பிள்ளைச் சாவடி மின்பாதைக்கு உட்பட்ட சின்னகாலாப்பட்டு. புதுநகர், மெட்டு தெரு, பிள்ளைச்சாவடி, அன்னை நகர், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை.
புதுச்சேரியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த மதுபானமும் விற்க கூடாது என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க கூடாது என கள், சாராயம் மற்றும் மது கடைகளுக்கு கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவை மீறி 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
- ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
புதுச்சேரி:
ஆண்டு தோறும் செப்டம் பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலை தொடர்பு மனநல திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேசிய குற்றப் பிரிவு அறிக்கைபடி இந்தியாவில் 2017-ல் இருந்து 2022-ல் தற்கொலை விகிதம் அதிகமாகியுள்ளது. இதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளது.
இதற்குப் போதைப்பொருள் பழக்கம், மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனை போன்ற பல காரணங்கள் உள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொள்வதினால் அவர் குடும்பமும் சமுதாயமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது.
தற்கொலை தடுப்பு நம் ஒவ்வொருவரிடம் இருந்து ஆரம்பமாகிறது. யாராவது அவர்களது மன கவலைகளையும், விரக்தியையும் நம்மிடையே பகிரும்போது அதற்கு நாம் கவனம் அளித்து அவர்களுக்குச் சரியான ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிக்கு உட்படுத்தினாலே போதும்.
யாருக்காவது மனசோர்வு, பதற்றம், பயம், நம்பிக்கையின்மை, விரக்தி, தற்கொலை சிந்தனைகள் இருந்தால் அவர்கள் 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை தொலைபேசி எண் 14416 அல்லது 18008914416 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






