என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியில் குடிநீரை குடித்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம் மீண்டும் மேலும் பலருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் கோவிந்தசாலை பகத்சிங் வீதி பூசைமுத்து (வயது43), காமராஜ் வீதி மூதாட்டி பார்வதி(65), பாரதிபுரம் மெயின்ரோடு கோவிந்தசாமி(70) ஆகியோர் இறந்தனர்.

    கடந்த 3 நாட்களாக வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் 31 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

    வயிற்று போக்கால் 3 பேர் இறந்த சம்பவத்தால் உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் பீதியடைந்தனர்.

    கோவிந்தசாலை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அந்த பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில நாட்கள் தண்ணீர் நன்றாக வருகிறது. அடுத்த சில நாட்கள் கழிவு நீர் கலந்து வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் கலந்து வருகிறது.

    இதுகுறித்து பல முறை நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது நடந்த உயிரிழப்பிற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என குற்றம் சாட்டினர்.

    உயிரிழப்பு ஏற்பட்ட கோவிந்தசாலை பகுதிக்கு, முத்தரையர்பாளையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் கழிவு நீர் கலந்துள்ளதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மேலும் அந்த பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    பாதிக்கப்பட்ட பகுதியில் குளோரின் கலந்த குடிநீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குடிநீரில் 0.2 பி.பி.எம்., குளோரின் கலந்து வழங்கப்படும் நிலையில், தற்போது 0.4 பி.பி.எம்., ஆக அதிகரித்து வழங்கப்படுகிறது. அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குடிநீர் குழாயை முழுவதுமாக ஆய்வு செய்துவிட்டோம். கழிவு நீர் கலந்ததாக தெரியவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும். அதன்பிறகே, வாந்தி, வயிற்று போக்குக்கு காரணம் தெரியவரும். பொதுப்பணித்துறையின் பறக்கும் படையினர் வீடு, வீடாக சென்று குடிநீர் துர்நாற்றத்துடன் வருகிறதா என்றும், துர்நாற்றம் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சுகாதாரத்துறை சார்பில் வாந்தி, பேதி ஏற்பட்ட கோவிந்த சாலை பகுதியில் டாக்டர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • புதுவை வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
    • புதுவை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜ.க. தலைவராகவும், முன்னாள் நியமன எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் சாமிநாதன்.

    இவர் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் பா.ஜ.க.வில் இருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 25 ஆண்டுக்கு மேலாக நான் இருந்த பா.ஜ.க.வில் இருந்து முழுமையாக விலகுகிறேன். 25 ஆண்டுக்கும் மேலாக பா.ஜ.க.வில் பல பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் கட்சியில் இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு அளித்த நிர்வாகிகளுக்கும், பதவி அளித்த பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    புதுவை வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். புதுவை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான, புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சாமிநாதன் தொடர்ந்து 8½ ஆண்டுகளாக புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக பதவியில் இருந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக கட்சி பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
    • சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    மார்ச் 12-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 27ந்தேதி மாநில அந்தஸ்து வலியுறுத்தும் அரசு தீர்மானத்தை நிறைவேற்றி முடிவடைந்தது.

    6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதற்காக வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று அறிவித்தார்.

    15-வது புதுவை சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவை கூடத்தில் கூடுகிறது. பேரவையின் முன் வைக்க வேண்டிய சட்ட முன்வரைவுகள், ஏடுகள் இருந்தால் அவற்றை பேரவை முன் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதோடு, இந்த சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. 2-வது சட்ட திருத்த மசோதா ஆகியவை சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்டத்தின் கீழ் அரசு துறைகளுக்கு அனுமதி அளிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

    மேலும் சட்டமன்றத்தின் பட்ஜெட் அறிவிப்புகள், வாக்குறுதிகள் நிறைவேற்றம், மாநில அந்தஸ்து ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.
    • மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிலாது நபியையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.

    அன்று அனைத்து மதுக் கடைகளிலும் மது விற்க தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ பிரச்சனைகள் தந்தார்கள்.
    • அரசியலுக்கு வரும் போதே எதையும் துணிச்சலாக சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில என்ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபிரியங்கா தனது சமூக வலைதளத்தில் 12 நிமிடம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி ஆங்காங்கே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் தனக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தது. அதில் பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கொம்யூன் ஆணையர் மற்றும் அந்த பேனரில் தனது படம் இருந்ததால், தானும் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    விசாரித்ததில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் ஒருவர் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் பின்னனியில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிய வந்தது.

    நான் அமைச்சராக இருந்தபோதே, ஏராளமான பிரச்சனைகளை எல்லாம் பார்த்து விட்டுதான், இதெல்லாம் வேண்டாம். நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என ஒதுங்கி வருகிறேன்.

    ஆனால் நாம ஒதுங்கனதுக்கு அப்புறமும் ஒரு சுயநலமாக, கன்னிங்கா, தன் கன்ட்ரோலில் வரவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ணுவாங்க என்பதற்கு இது ஒரு உதாரணம். நானும் கொஞ்ச நாளா பார்த்து கொண்டு வருகிறேன். ரொம்ப 'டார்ச்சரா' போயிட்டு இருக்கு. நம்மள 'டார்ச்சர்' கொடுக்கலாம். நாம அரசியல்வாதி.

    அரசியலுக்கு வரும் போதே எதையும் துணிச்சலாக சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். எதையும் சமாளிக்க தெரியும். அதுக்காக நம்முடன் இருப்பவர்கள் பாதிக்கக்கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.

    அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ பிரச்சனைகள் தந்தார்கள். அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம, நாசுக்காக வெளியே வந்துவிட்டோம். இன்னைக்கும் அந்த அமைச்சர்கள் 'டார்ச்சர்' பண்றாங்க. நான் எல்லோரையும் சொல்லவில்லை.

    ஒன்று, இரண்டு பேர்தான் அப்படி செய்யறாங்க. இதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தேவையில்லாத அலைச்சல். அதாவது நம்மல 'டார்ச்சர்' பண்றாங்களாமாம். ஒரு அமைச்சராக எவ்வளவு வேலை இருக்கும். அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல.

    முதலில் எம்.எல்.ஏ., என்பதே சாதாரண விஷயமல்ல. எவ்வளவு கஷ்டங்களை தாண்டி தேர்தலில் ஜெயிக்கிறோம். அதையெல்லாம் ஜெயிச்சதுக்கப்புறம் மறுந்துட்டு, மக்களை மறந்துட்டு, நம்ம கன்ட்ரோலா இல்லன்னா அவங்களை எவ்வளவு டார்ச்சர் வேணும்னாலும் கொடுக்கலாம்.

    அவங்க எம்.எல்.ஏ.,வா இருந்தாலும் சரி. யாரா இருந்தாலும் சரி. 'டார்ச்சர்' பண்ணனும். எனக்கு தெரியலை. எம்.எல்.ஏ., ஒரு ஆம்பளையா இருந்தா பண்ணுவீங்களா? நம்மளா இருப்பதால, நம்பள, நம்ப கூட இருக்கிறவங்கள எல்லாரையும் 'டார்ச்சர்' கொடுக்கறது. தேவையில்லாம வழக்கு போடறது. இதெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்குது. நாகரீகமான அரசியலா இது இல்லை.

    என்ன பெரிசா ஆயிடப்போவுது. ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துடக் கூடாது. அய்யய்யோ... அரசியலே வேண்டாம்பா என்ற சொல்றப்படி அவங்களை அசிங்கப்படுத்துறீங்க. இது ஒரு அரசியலா..?

    இந்தமாதரி அரசியல் எல்லாம், எனக்கு என் அப்பா கற்றுத் தரவில்லை. அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறதை தாண்டி, கெட்டது செஞ்சிடக்கூடாது என சொல்லி வளத்த மனுசனோட பொண்ணு நானு... அதனால், மத்தவங்கள கஷ்டப்படுத்த தோணல...

    இதுதொடர்பாக ஒரு அதிகாரிகிட்ட புகார் கொடுக்கபோனேன். அவரிடம், எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு நான் கேட்டதும், வேணுமென்றால் ஒன்று செய்யுங்கள். உங்க பெயரில் உள்ள சொத்துகளை மத்தவங்க பெயரில் மாத்திடுங்க.. பாதுகாப்பிற்காக என்கிறார். எந்தளவிற்கு அவர்கள் சொல்லியிருந்தால் அந்த அதிகாரி அப்படி பேசியிருப்பார்.

    எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் அரசியலுக்கு வந்துள்ளோம். இங்கு ஒன்னே ஒன்னுதான். மக்களுக்கு நல்லது பண்ணனும். பொண்ணா இருந்து சாதிக்கணும்.

    அதைவிட இதுவரை உங்க பெயரை சொல்லாம இருக்கறதுக்கு காரணம் முதல்வர் அய்யா மட்டும் தான். எனது அப்பா ஸ்தானத்தில் இருக்கும் சி.எம்.,க்காக மட்டும் தான் உங்க பெயரை சொல்லாம இருக்கேன். அவருதான் நீ போயி தேர்தல் வேலையை பாரு. வேற எதையும் காதுல வாங்காத என்றார்.

    ஆனா திருப்பி திருப்பி தொந்தரவு பண்ணிட்டு இருக்கும்போது 'அட்லீஸ்ட்' நீங்க என்னை 'டிஸ்டர்ப்' பண்றது எனக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியனும்ல, அதுக்காகத்தான் தயவு செய்து, என்னை 'டார்ச்சர்' செய்யறது விட்டுவிட்டு, உங்களை ஜெயிக்க வைத்த மக்களுக்கு நல்லது செய்யுங்க. அவங்க தான் நமக்கு முதலாளி.

    இப்போதைக்கு போய் நான் மக்கள்கிட்ட நிக்கனும். அவ்வளவுதான். அவங்க பார்த்து நமக்கு ஏதாவது செய்யனும். மத்த யாரும் இப்ப அவசியம் கிடையாது.

    முதல்வர் என்.ஆர். அய்யாவிற்காக மட்டும் தான் எவ்வளவோ பொறுத்து போய் கொண்டுள்ளேன். பாவம், அவரே நிறைய பொறுத்துக கொண்டு தான் போய் கொண்டிருக்கிறார்.

    இதையெல்லாம் மனசுலு வைத்துக் கொண்டு, அமைச்சர்கள் கொஞ்சம் அமைதியா, இன்னும் 8 மாசம் தான் உள்ளது. தேர்தல் வேலையை பார்த்தா நல்லா இருக்கும். மக்களுக்கு ஏதாவது வேலைய பாருங்க... என்னையும் வேலை பார்க்க விடுங்க. என்னை நம்பி நிறைய பேர் உள்ளனர்.

    தேவையில்லாம அலைய விடாதிங்க. இதுக்கு மேலேயும் இப்படிதான் பண்ணுவீங்கன்னா... பொம்பளைன்னு பாக்காதீங்க. எல்லா தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டு அதிகம். பெண்களுக்கு நல்லாவே தெரியும். நான் யாரை சொல்றேன் என்று கண்டுபிடித்திருப்பார்கள்.

    அது அவ்வளவா நல்லா இருக்காது. அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. நீங்களும் வாழுங்க... என்னையும் வாழ விடுங்க... நன்றி..!!

    இவ்வாறு சந்திரபிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

    சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆளும் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வே அமைச்சர்களுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சந்திரபிரியங்காவை 'டார்ச்சர்' செய்த அமைச்சர் யார் என்றும் அவர்கள் மோதலுக்கான காரணம் என்னவென்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

    • கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அடுத்த கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் நரம்பை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2022 அக்டோபர் மாதம் புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாக்குறுதி அளித்து உள்ளார். இதையடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதன்பிறகு இவர்கள் அடிக்கடி பல முறை தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் மணிகண்டன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அதன் பிறகு இருவரும் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மணிகண்டன் அந்த பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் எவ்வளவு பவுன் நகை போடுவார்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பிய மணிகண்டனிடம் பாதிக்கப்பட்ட பெண் பேச முயற்சித்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.

    கடந்த திங்கட்கிழமை அன்று மணிகண்டனுக்கும் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இன்று அவர்களுக்கு நரம்பை கோவிலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். புகாரில் தன்னை திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதன் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதனால் இன்று நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சி நின்றுபோனது. இச்சம்பவம் நரம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.

    புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.

    • பாதயாத்திரை குழு இன்று காரைக்காலுக்கு வந்தது.
    • சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி விநாயகர் சிலையை தலையில் சுமந்து வேளாங்கண்ணி செல்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் ஒரு குழு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்கிறது.

    இந்த குழு கடந்த 23-ந்தேதி புதுச்சேரி இருதய ஆண்டவர் ஆலயத்தில் தொடங்கி வேளாங்கண்ணி நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். இந்த நிலையில் பாதயாத்திரை குழு இன்று காரைக்காலுக்கு வந்தது.

    அங்கு சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை வாங்கிய ராஜ்குமார் சிலையை தலையில் சுமந்தபடி கையில் வேளாங்கண்ணி கொடியுடன் பாத யாத்திரையை தொடர்ந்தார்.

    கடந்த 23-ந்தேதி வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புதுச்சேரியில் இருந்து புறப்பட்டோம். இன்று காரைக்கால் வந்தடைந்தோம். கோட்டுச்சேரி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு, சதுர்த்திக்கு விநாயகர் சிலை வாங்கினோம். பாதயாத்திரை செல்வதால் விநாயகர் சிலை வாங்கி வீட்டில் சதுர்த்தி கொண்டாட இயலாது.

    சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி விநாயகர் சிலையை தலையில் சுமந்து வேளாங்கண்ணி செல்கிறேன். காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி வரை விநாயகர் சிலையுடன் செல்வேன். வேளாங்கண்ணி கடலில் விநாயகர் சிலையை 3-ம் நாளில் கரைப்போம் என்றார்.

    • வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட 21 திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கலசாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் உட்பட திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் தங்கு தடையின்றி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் இடைவிடாது லட்டு, சர்க்கரை பொங்கல் உட்பட 9 வகை பிரசாதம் வழங்கப்பட்டது.

    சதுர்த்தி விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதூர்த்தி பேரவை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 500 இடங்களில் இன்று மாலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதுச்சேரி கடலில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    • பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    • தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 4 திருநங்கைகள் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை சென்றனர்.

    அப்போது அங்கிருந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் உங்களுக்கு என்ன இங்கு வேலை? நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.

    அதற்கு திருநங்கைகள் அரசு அனுமதியுடன் தான் பரிசோதனைக்காக வந்து இருக்கிறோம் என பதில் அளித்துள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனைக்குப்பிறகு வெளியே வந்த திருநங்கைகளிடம் 4 பேர் தகராறு செய்து ஸ்கூட்டர் சாவியை பறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட திருநங்கைகள் இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு புகாரை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகேவுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை திருநங்கைகள் தலைவி ஷீத்தல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    தரக்குறைவாக திட்டி தாக்க முயன்ற பா.ஜ.க. பெண் நிர்வாகியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இரவு 10 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. அதன்பின்னர் கட்சியின் மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் அங்கு வந்து சமரச பேச்சு நடத்தினார். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு திருநங்கைகள் கலைந்து சென்றனர்.

    திருநங்கைகள் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

    • கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
    • சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்துப்பிள்ளைபாளையம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் வீரராகு மனைவி பிரபாதேவி. இவருக்கு சொந்தமான இடம் புதுச்சேரி என்ஜினீயரிங் கல்லூரிக்கு எதிரே உள்ளது. இவ்விடத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது

    இதை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரபாவதி தேவி தரப்பில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் பிரபாவதி தரப்பில் முறையிடப்பட்டது.

    மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 12 வாரங்களுக்குள் மேற்கண்ட கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கடந்த 26.09.2023 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர், நகரமைப்பு குழும இயக்குனர் மற்றும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் ஆகியோருக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிரபாதேவி தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு கடந்த 13-ந் தேதி, விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத கலெக்டர் உள்பட 3 பேருக்கும், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்டம்பர் 10-ந் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தது.

    • ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.

    புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

    பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து, ராமதாஸ் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றச்சாட்டியுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,

    * பாமக, நிறுவனர் குறித்து நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதால் மனஉளைச்சல்.

    * மக்கள் தொலைக்காட்சியை திட்டமிட்டு அன்புமணி அபகரித்து கொண்டார்.

    * ராமதாசிடம் அனுமதி பெறாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    * ராமதாசின் தைலாபுரம் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டதற்கு கண்டனம்.

    * அன்புமணியின் செயல்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகவே கருதப்படுகிறது.

    * சமரச பேச்சுவார்த்தையை அன்புமணி ஏற்காமல் உதாசீனப்படுத்தி உள்ளார்.

    * பா.ம.க. தலைமை அலுவலகத்தை திட்டமிட்டு வேறு இடத்திற்கு அன்புமணி மாற்றினார்.

    * பசுமை தாயகம் அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றி கொண்டார்.

    * தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து ராமதாஸை, அன்புமணி அவமதித்துவிட்டார்.

    * கட்சியை பிளவுப்படுத்த அன்புமணி செயல்பட்டதாக கருதப்படுகிறது என 16 வகையான குற்றங்களை அன்புமணி செய்துள்ளதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 

    ×