என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது- புதுச்சேரியில் நிதின் நபின் பேச்சு
    X

    தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது- புதுச்சேரியில் நிதின் நபின் பேச்சு

    • நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
    • புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதாவின் புதிய தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். அவருக்கு புதுச்சேரி எல்லையான கோரிமேட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அவர் பாரதியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அக்கார்டு ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் புதுச்சேரி பா.ஜ.க சார்பில் சக்தி கேந்திர சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க-வினர் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக ஓயாமல் உழைத்து வருவது மிகப்பெரிய பலம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பா.ஜ.க வலிமையான வளர்ச்சியடைந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து உற்சாகத்துடன் செயல்பட்டு தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதற்காக சக்தி கேந்திர நிர்வாகிகள், பூத் தலைவர்கள் களத்தில் இறங்கி வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் ஒரு லட்சம் புதிய இளைஞர்களை அடையாளம் கண்டு, நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி வரை தேர்தல்களில் போட்டியிடும் வகையில் பிரதமர் அறிவித் துள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரி பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், செல்வகணபதி எம்.பி.மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க வல்லுனர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் பா. ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின்நபின் கலந்து கொண்டு பேசினார்.

    நேற்று இரவு புதுச்சேரியில் தனியார் ஓட்டலில் தங்கிய பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்தார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து கணபதி செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிகழ்ச்சிகளில் அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட வியாவும் பங்கேற்றார்.

    Next Story
    ×