என் மலர்
புதுச்சேரி

ரூ.450 கோடியில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு மத்திய அரசு அனுமதி: முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்
- மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது.
- பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில் லாஸ் பேட்டை சலவைத்துறை திறப்பு விழா நடைபெற்றது.
அதில் புதிதாக கட்டப்பட்ட துணி பாதுகாப்பு அறைகளை திறந்து பயனாளிகளிடம் சாவிகளை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ரூ. 500 ஓய்வூதியம் பிப்ரவரி 7-ந்தேதி முதல் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 உதவித் தொகை வருகிற பிப்ரவரி 10-ந் தேதி முதல் கிடைக்கும். புதிதாக தொடக்கப்பள்ளிகளில் 190 ஆசிரியர்கள் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள்.
இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர்கள் 400 பேர் அடுத்த மாதம் எடுக்கவுள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை தந்துள்ளது. அடுத்து 500 அங்கன்வாடி ஊழியர்கள் பணியமர்த்த உள்ளோம். சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என சொன்னோம். அரசு மற்றும் தனியார் மூலம் வேலை தரப்பட்டுள்ளது.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான 750 ஏக்கர் நிலம் எடுத்து அப்படியே உள்ளது. புதிய தொழிற்பேட்டையை இங்கு உருவாக்க உள்ளோம். பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. ஏராளமான இளையோருக்கு வேலை கிடைக்கும். மீனவ சமூக மக்களுக்கு ரூ. 123 கோடி ஒதுக்கி பணிகள் செய்கிறோம்.
மத்திய அரசு உதவி இல்லாவிட்டால் ஏதும் செய்ய முடியாது. பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வரவுள்ளார். நிறைய திட்டங்கள் தரவுள்ளார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த அரசு மத்திய அரசு நிதி உதவியுடன் மேம்பாட்டு பணிகளைச் செய்து வருகிறது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ 450 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வ கணபதி எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






