search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unani"

    • பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.
    • நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன.

    ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா இவை மூன்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. உலகில் பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும் இவை மூன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கொள்கைகள், நோய் அறியும் விதம், சிகிச்சை நுட்பங்கள் உள்ளன.

    குறிப்பாக நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவற்றின் பாரம்பரிய தன்மைக்கேற்ப வெவ்வேறு அணுகுமுறையை கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்வதும் அவசியமானது. ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

     சித்தா:

    தோற்றம்: பண்டைய தமிழகத்தில் வேரூன்றிய மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தை உருவாக்கிய பெருமை சித்தர்களுக்கு உண்டு.

    அடிப்படை: பித்தம், கபம், வாதம் ஆகிய மூன்றுடன், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாகும்.

    சிகிச்சை முறை: தாதுக்கள், தாவரங்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தியானம், யோகா மற்றும் உணவுப் பழக்கம் போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    நோய் கண்டறிதல்: மருத்துவ பரிசோதனை, சிறுநீர் மற்றும் நாடித் துடிப்பு போன்றவைகளுடன் பித்தம், கபம், வாதம் போன்றவற்றின் சமநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

     ஆயுர்வேதம்:

    தோற்றம்: இந்திய துணை கண்டத்தின் பழமையான மருத்துவ முறையாக விளங்குகிறது. ஆயுர் என்பது நீண்ட வாழ்வையும், வேதம் என்பது நூலையும் குறிப்பிடுகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக தெற்காசிய நாடுகளில் செல்வாக்கு பெற்ற மருத்துவ முறையாக திகழ்கிறது.

    அடிப்படை: சாத்வீக, ராட்சத, தமச ஆகிய முக்குணங்களுக்கு இணையாக ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் கூறப்படுகின்றன. இவை சம நிலையில் இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், உணவு பரிந்துரைகள், வாழ்க்கைமுறை, யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுவான ஆயுர்வேத சிகிச்சைகளாக விளங்குகின்றன.

    நோய் கண்டறிதல்: பித்தம், வாதம், கபம் ஆகியவற்றின் சமநிலையை மதிப்பிடுவதோடு கூடுதலாக நாக்கு, நாடித் துடிப்பு, சிறுநீர் மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன அமைப்பை பரிசோதிப்பதும் அடங்கும்.

     யுனானி:

    தோற்றம்: யுனானி மருத்துவம் பழங்கால கிரேக்கத்தில் உருவானது. பின்னர் பாரசீகம் மற்றும் அரேபியாவை சேர்ந்த மருத்துவர்களால் செம்மையாக்கப்பட்டு, முழுமையாக்கப்பட்டது.

    அடிப்படை: ரத்தம், கபம், மஞ்சள் பித்தம் மற்றும் கருப்பு பித்தம் ஆகிய நான்கும் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது யுனானி மருத்துவத்தின் அடிப்படை தத்துவமாக விளங்குகிறது.

    சிகிச்சை முறை: மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் ஆகியவை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்களில் அடங்கும். உணவுப்பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

    நோய் கண்டறிதல்: யுனானி மருத்துவத்தில் நாடித்துடிப்பு, சிறுநீர், மலம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் நோயின் தாக்கம் மதிப்பிடப்படுகிறது.

    ×