என் மலர்
நீங்கள் தேடியது "Cardiac Surgery"
- ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும்.
- இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.

இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.

ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
- வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.
- இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன்.
இதயத்தில் வால்வுகள் மொத்தம் நான்கு. மைட்ரல் மற்றும் டிரைகஸ்பிட் ஆகியவை இடது மற்றும் வலது ஏட்ரியம் என்கிற அறைகளில் இருந்து வென்டிரிக்கிள் என்கிற அறைகளுக்கு ரத்தத்தை அனுப்புகின்றன.
அதேபோல அயோர்ட்டிக் மற்றும் பல்மனரி வால்வுகள் இடது மற்றும் வலது வென்டிரிக்கிள்களில் இருந்து மகாதமனிக்கும், பல்மனரி தமனிக்கும் ரத்தத்தை அனுப்புகின்றன. வால்வுகள் கதவுகள் போல வேலை செய்யும்.

வால்வுகளில் இருவகை கோளாறுகள் வரும். ஒன்று அவை சுருங்கி விடும். அல்லது சரியாக மூடாமல் ரத்தத்தை சரியாக அனுப்பாது. இரண்டு வகைக் கோளாறுகளிலும் ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் போட்டு சமாளிக்கலாம். அதிகமானால் வால்வு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.
ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷன் என்பது, சேதம் அடைந்த இதய வால்வுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்யும் முறை ஆகும். இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளுக்கும் இதை செய்யலாம்.
இதய வால்வில் உள்ள சேதத்தின் தன்மை, நோய்க்கான காரணம் மற்றும் நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப இந்த சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
நோயாளியின் இதய வால்வு ஸ்ட்ரக்ச்சுரல் இன்டர்வென்ஷனுக்கு உகந்ததா என்பதை தீர்மானிக்க எக்கோகார்டியோகிராம், சி.டி.ஸ்கேன் பரிசோதனைகள் உதவுகின்றன.
இதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடும்போது, பைபாஸ் அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. சிறிய அளவிலான இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு மிகப்பெரிய அளவில் அறுவைசிகிச்சை இன்றி, சிறு துளையிட்டு, ரத்த நாளம் வழியே கருவியைச் செலுத்தி, அடைப்பை நீக்கும் முறைதான் இன்டர்வென்ஷனால் கார்டியாலஜி சிகிச்சை. இந்த சிகிச்சை இரண்டு கட்டமாகச் செய்யப் படுகிறது. முதலில், இதயக் குழாய் அடைப்பு எங்கு ஏற்பட்டுள்ளது எனக் கண்டுபிடித்து, தொடை அல்லது கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே கருவியைச் செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இதில், பல சிகிச்சை முறைகள் உள்ளன.
இந்த சிகிச்சையை தேர்வு செய்யும் முன், இதனால் ஏற்படும் தொலைநோக்கு பலன், பக்கவிளைவுகள், உயிர் ஆபத்து, செலவு, நோயாளியின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு எது பலன் தருமோ, அந்த சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.
இதய நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டியவை:
* புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிடவேண்டும்.
* காலை ஜாகிங், நடைப்பயிற்சி, வார்ம்அப் பயிற்சிகள்.
* யோகா, பிராணயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைத் தினமும் அதிகாலையில் செய்ய வேண்டும்.
* வேகவைத்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* 'ரெட் மீட்' எனப்படும் அதீதக் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள ஆடு, மாட்டு இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் பொரித்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் (வயது 10). சிறுவன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டான். இதையடுத்து அவனை பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பிரவீனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவனுக்கு இருதயம் பலவீனமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரிடம் இருந்து இருதயம் பெறப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி பிரவீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 4 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
தற்போது உடல்நலம் தேறி வரும் சிறுவன் பிரவீன் கூறுகையில், ‘எனக்கு 7 வயதில் மூச்சுத்திணறல் மற்றும் சளித்தொல்லை ஏற்பட்டது. சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக இருக்கிறேன்’, என்றான்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
உலக அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் 2-ம் இடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டு தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அரசு பன்னோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் 23 பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பெரியவர்கள் 6 பேர் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 310 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அதில் 150 பேர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது. இதுவரை அறுவை சிகிச்சை எல்லாம் முறையாக செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி வெளிநாட்டுக்கு எந்த ஒரு உடல் உறுப்பும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு பன்னோக்கு மருத்துவ கல்லூரி ‘டீன்’ டாக்டர் நாராயணபாபு, மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் ஆனந்த்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.






