என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
    • மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்.

    தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினசரி காபின் கொண்ட சூடான பானங்களை (தேநீர், காபி) எவ்வளவு அருந்தினர் என்பதையும், அவர்களின் நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

    ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு முதல் 3 சுப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் 3 கப்புகளுக்கு மேல் டீ, காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "டிமென்ஷியாவைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோது, காபி போன்ற அனைவரும் பயன்படுத்தும் பானம் நல்ல உணவுமுறை தீர்வாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார். "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

    டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் போன்ற பொருட்களே இந்த நன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைத்து, நினைவுத்திறன் சரிவைத் தடுக்க உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

    பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • விரால் மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது.
    • குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    கடல் மீன்களைவிட சில நன்னீர் மீன்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதில், விரால் மீனும் ஒன்று.

    இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.

    விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். கர்ப்பிணிகள் விரால் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது. இதனால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.

    விரால் மீன் பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சரியாக வேக வைக்காத விரால் மீன் உணவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

    • அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
    • ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.

    இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

    சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.

    அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    • கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது.
    • கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும்.

    நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. பல வகையான நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நார் பொதுவாக கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார் என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

    இந்த 2 வகைகளிலும் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வயிற்றில் இருந்து செரிக்கப்படாமல் உங்கள் பெருங்குடலுக்குச் சென்று வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அவை பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற சில நோய்களைத் தடுக்க உதவுகின்றன. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எடையை கட்டுப்படுத்துவதிலும் உதவுகின்றன.

    கரையக்கூடிய நார்ச்சத்து நீரில் கரைந்து ஜெல் மாதிரி ஆகி, உடலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைக்க உதவுகிறது. கரையாத நார்ச்சத்து குடலின் இயக்கத்தை விரைவாக்கி மலச்சிக்கலை தடுக்கும். நார்ச்சத்து உணவுகள் குடலில் நீரை இழுத்து செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும், குடல் சுத்தமாக இருக்கும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும். கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச் சத்து அளவைக் குறைக்கிறது. இதனால் இதய நோய்களின் ஆபத்து குறைகிறது. சில ஆய்வுகள் கூறியபடி நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குடல் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன என்கின்றனர் டாக்டர்கள்.

    • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    உடல் ஆரோக்கியத்துக்கு 3 வேளையும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதில் குறிப்பாக இரவு உணவை மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் முடித்துவிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

    முன்னதாகவே சாப்பிடும் பழக்கம் செரிமானத்திற்குப் பெரிதும் உதவுகிறது. எனவே இந்த நேரத்திற்குள் உங்களது இரவு உணவை முடித்துவிட வேண்டியது அவசியம்.

    இரவில் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கோதுமை ரவை கிச்சடி அல்லது இட்லி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரவில் இட்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்களால் செய்யப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

    40 வயதைக் கடந்தவர்கள் சிறுதானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொங்கல், உப்புமா அல்லது பிரியாணி வடிவில் சமைத்து உண்பது சிறந்தது. ஆரம்பத்தில் இதுபோன்ற உணவு பழக்கத்தை கொண்டு வரும்போது பசி எடுக்கலாம்.

    அவ்வாறு இரவு 10 மணிக்கு மேல் பசி எடுத்தால், கனமான உணவுகளைத் தவிர்த்துவிட்டுப் பழங்களைச் சாப்பிடலாம். குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி இவற்றைச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

    இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கின்றனர் டாக்டர்கள். 

    • எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
    • வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ரவை -2 கப்

    தயிர் - 3 ஸ்பூன்

    துருவிய கேரட்- ½ கப்

    மெல்லியதாக அரிந்த குடமிளகாய்-1

    கொத்தமல்லித் தழை- சிறிதளவு

    உப்பு - தேவைக்கேற்ப

    மசாலாவுக்கு:

    வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

    பச்சைப் பட்டாணி-1 கப்

    மிளகாய்த் தூள்- ½ டீஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சைப்பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.

    ஊறிய ரவையில் குடமிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ரவை கலந்த கலவையை கொஞ்சம் ஊற்றி அதன் மேல் பட்டாணி மசாலா கலவை வைத்து மீண்டும் அதற்கு மேல் ரவை கலவையை ஊற்றவும். எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். சத்துகள் நிறைந்த வெஜிடபிள் மசாலா இட்லியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    தேவைப்பட்டால் பட்டாணி மசாலா கலவையில் துருவிய பன்னீர், காலிபிளவர் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம். 

    • உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அப்படியே மூளைக்கு வாசிப்பு.
    • தினமும் சில பக்கங்களையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.

    புத்தக வாசிப்பு குறித்த சுவாரசியமான 10 தகவல்கள்...

    * வெறும் 6 நிமிடங்கள் புத்தகம் படித்தாலே போதும், உங்கள் மன அழுத்தம் 68 சதவீதம் வரை குறையும். இது பாடல் கேட்பது அல்லது நடைபயிற்சி செய்வதை விட வேகமாக மனதை அமைதிப்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    * புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவர்கள், படிக்காதவர்களை விட சராசரியாக 2 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசிப்பானது மூளையை சுறுசுறுப்பாக வைப்பதுடன், வாழ்நாளையும் அதிகரிக்கிறது.

    * பழைய புத்தகங்களில் இருந்து வரும் அந்த தனித்துவமான வாசனைக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் 'பிப்லியோஸ்மியா' (Bibliosmia). காகிதம், மை மற்றும் பசை ஆகியவை காலப்போக்கில் சிதைந்து இந்த வாசனையை உருவாக்குகின்றன. இது பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

    * கதைகள் மற்றும் நாவல்களை படிப்பவர்களுக்கு 'எம்பதி' எனப்படும் பச்சாதாபம் அல்லது பிறர் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் அதிகமாக இருக்கும்.

    * உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அப்படியே மூளைக்கு வாசிப்பு. இது மூளையின் இணைப்புகளை வலுப்படுத்துகிறது. தொடர்ந்து படிப்பது, அல்சைமர், டிமென்சியா போன்ற மறதி நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

    * நாம் எவ்வளவு அதிகமாக படிக்கிறோமோ அவ்வளவு புதிய வார்த்தைகளை தெரிந்துகொள்கிறோம். இது நம் பேச்சு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

    * நிறைய புத்தகங்களை வாங்கி, அவற்றைப் படிக்காமலே அடுக்கி வைக்கும் பழக்கத்துக்குப் பெயர், 'சுண்டோகு' (Tsundoku). இது பல புத்தக பிரியர்களிடம் இருக்கும் ஒரு வித்தியாசமான பழக்கம்.

    * தூங்குவதற்கு முன் செல்பேசி, தொலைக்காட்சி என மின்னணு திரைகளை பார்ப்பதை விட, புத்தகம் வாசிப்பது சிறந்த தூக்கத்தை தரும். இது மனதைத் தளர்த்தி, தூக்கத்துக்கான சுழற்சியை மூளைக்கு அறிவுறுத்துகிறது.

    * ஒரு நாவலை படித்து முடித்த பிறகும்கூட, சில நாட்களுக்கு மூளையின் நரம்பியல் இணைப்புகளில் மாற்றம் இருக்கும். அதாவது, ஒரு நல்ல புத்தகம் உங்களை உடல் ரீதியாகவும் மாற்றக்கூடியது.

    *சராசரியாக ஒரு நபர் நிமிடத்துக்கு 200 முதல் 300 வார்த்தைகளைப் படிப்பார். ஆனால், உலகின் அதிவேக வாசகர்கள் நிமிடத்துக்கு 4 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் படிக்கும் திறன் கொண்டவர்கள் !

    வாசிப்பு என்பது ஒரு தனி உலகத்துக்கான திறவு கோல். அது நமக்கு அறிவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும், மனஅமைதியையும் அள்ளித் தருகிறது. தினமும் சில பக்கங்களையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோம். வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்றுவோம்.

    • போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.
    • கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.

    நன்றாக தூங்கி எழும்போது உடலில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அதே வேளையில், போதிய தூக்கம் இல்லாமல் போனால் உடலில் சோர்வு காணப்படும்.

    இதுசம்பந்தமாக சர்வதேச அமைப்பு ஒன்று இளம் வயது ஆண், பெண்களிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில், தூங்கச்செல்லும் நேரம், விழிக்கும் நேரம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 3 குழுக்களாக பிரித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வு முடிவில், குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்கு மேலாக தூங்கிய குழுவில் இருந்தவர்களின் உடல் நிலை மிகவும் சிறப்பாக இருந்ததும், இவர்களின் இதய துடிப்பு மிகவும் சீராக இருந்ததும் தெரியவந்தது.

    மேலும், இவர்கள் அன்றாட வாழ்வில் படிப்பு, புதிய சொற்களின் அர்த்தம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சுலபமாக எதிர் கொண்டவர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இத்துடன், கல்வியில் இவர்கள் சக மாணவர்களைவிட சிறந்து விளங்கினார்கள்.

    எனவே, இளம் வயதினர் போதிய உடல் மற்றும் மன வளர்ச்சியை இயற்கையாக பெற இளம் வயது பருவத்தில் எக்காரணம் கொண்டும் தூக்கத்தை இழக்காமல் போதிய நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கி நன்கு தூங்கி எழ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
    • சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது.

    விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில், அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்படும் விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ, குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

    செய்யக்கூடாதவை

    கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    அபாய அறிகுறிகள்

    மூச்சுத்திணறல்

    முகம், உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்

    கடும் தலைச்சுற்றல், மயக்கம்

    தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு

    இதயத் துடிப்பு அதிகரித்தல்

    உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்

    கடும் அலர்ஜி

    விஷப்பூச்சி கொட்டினால் என்ன செய்ய வேண்டும்?

    தேனீயோ அல்லது குளவியோ கொட்டினால் முதலில் பதற்றம் கொள்ளாமல் கொட்டிய இடத்தில் இருக்கும் அந்த கொடுக்கை ஏ.டி.எம். கார்டு, ஸ்கேல் வைத்து அழுத்தி தேய்த்து அகற்றவும். விஷப்பூச்சி கொட்டிய இடத்தில் கையை வைத்து அழுத்தவோ, கொடுக்கை பிடுங்கவோ கூடாது.

    சலவை சோப்பு வைத்து கொட்டிய இடத்தை நன்றாக கழுவி, 10-15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் செய்வது சிறந்தது. உடனே மருத்துவமனை செல்வது முக்கியமானது. 

    • பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
    • இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும்.

    * பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை குறையும்.

    * அப்பளத்தின் மீது லேசாக நெய் தடவி, சிறிது மிளகுத் தூள் தூவி சுட்டெடுத்தால் சுவை நன்றாக இருக்கும்.

    * ஓட்ஸை கஞ்சியாக குடிப்பதை விட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வடை மாவு நீர்த்து விட்டால், அதன் மீது சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.

    * பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.

    * சூடான எண்ணெய்யில் சிறிது மைதா மாவு தூவினால் அந்த எண்ணெய்யில் எதை பொரித்தாலும் சட்டென்று ஒட்டாது.

    * தக்காளி கெடாமல் இருக்க காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

    * தேங்காயை மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

    * அரிசி, ரவா, கோதுமை டப்பாவில் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறு துண்டு வசம்பை துணியில் கட்டி டப்பாவில் போட வேண்டும்.

    * இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.

    * தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் எளிதில் புளிக்காது.

    * பாகற்காயை உப்பு, மஞ்சள், வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் கசக்காது.

    • வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது.
    • அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது.

    காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது உடலுக்கும், மன ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். எலும்பு ஆரோக்கியத்துக்கும் வித்திடும். உடலின் உள் கடிகாரமான சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரவில் தூக்கத்தை மேம்படுத்தும். செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் வழி வகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். அதேவேளையில் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க எந்த நேரத்தில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுவது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் எழுவதுண்டு.

    உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டுமானால் காலை 10 மணிக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட்டால் மட்டும் போதுமானதல்ல. ஏனெனில் வைட்டமின் டி-க்கு தேவையான புறஊதாக்கதிர்கள் பெரும்பாலும் காலை 7 மணிக்கு முன்பு பூமியை அடைவதில்லை. இதனால் அதிகாலை சூரிய ஒளி வைட்டமின் டி உற்பத்திக்கு பயன்படுவதில்லை. அந்த சமயத்தில் சூரிய ஒளியின் வீரியம் அதிகமாகவோ ஊதாக்கதிர்கள் வலுவாகவோ இருக்காது.

    காலை நேரத்தை பொறுத்தவரை சூரிய ஒளி சர்க்காடியன் தாளங்களை ஒழுங்குபடுத்த உதவும் என்றாலும், வைட்டமின் டி உற்பத்திக்கு தேவையான புற ஊதாக்கதிர்களின் தீவிரம் இதில் இருப்பதில்லை. வைட்டமின் டி உற்பத்திக்கான சிறந்த நேரம் எது தெரியுமா? காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இந்த நேரத்தில் புற ஊதாக்கதிர்கள் அதிகமாகவும், நிழல்கள் குறைவாகவும் இருக்கும்.

    அந்த சமயத்தில் கைகள், கால்கள் மற்றும் முகம் என உடல் பாகங்கள் மீது சூரிய ஒளி சுமார் 15 நிமிடங்கள் படரும்படி நேரத்தை செலவிடலாம். வாரத்திற்கு 4 அல்லது 5 முறை இவ்வாறு செய்தால் போதுமானது. அதே நேரம் 15 நிமிடங்களுக்கு அதிகமாக சூரிய ஒளி உடலில் படுவது நல்லதல்ல.

    ஏனெனில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியின் தாக்கமும், வெப்பமும் அதிகமாக இருக்கும் என்பதால் வெயிலில் சருமம் சேதம் அடையக்கூடும். அதனை தடுக்க அதிகபட்சமாக 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவது போதுமானது. குளிர் காலத்தில் புற ஊதாக்கதிர்களின் வீரியம் அதிகரிக்க காலதாமதாகும் என்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைக்குள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடலாம். ஆனால் 15 நிமிடங்களை தாண்டக்கூடாது.

    ×