என் மலர்
பெண்கள் உலகம்
- தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம்.
- அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன
நோய்களில் மிகவும் பிரபலமானது சர்க்கரை நோய். இப்பொழுது அதற்கு போட்டியாக, சமமாக தைராய்டு நோயும் பரவலாகிவிட்டது.
தைராய்டு சுரப்பியை கழுத்து கவசம் என்று கூறலாம். தைராய்டு சுரப்பி கழுத்தில் இருந்தாலும் மூளையின் கீழே இருக்கும் ஹைப்போதெலாமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள் தான் அதை கண்ட்ரோலில் வைத்திருக்கும். உச்சி முதல் பாதம் வரை, அதாவது தலைமுடியில் இருந்து கால் நகம் வரை எல்லா உறுப்புகளின் வளர்ச்சிதை மாற்றம் தைராய்டை நம்பியிருக்கிறது.
கடல் சார்ந்த உணவுகளில் அயோடின் இருப்பதால் கடற்கரை பகுதிகளில் இருப்பவர்களுக்கு தைராய்டு நோய் வெகு அரிதாகவே வருகிறது. கடற்கரையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு முக்கியமாக பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தைராய்டு நோய் அதிகம் வரும். ஒரு சில பாறை உப்புகளில் அயோடின் சத்து இருந்தாலும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் தைராய்டு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
அதனால்தான் அரசு தைராய்டு சத்தை உப்பில் ஏற்றி உண்ண வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பகுதிகளில் நெற்றியில் வைக்க அயோடின் சத்து கலந்த பொட்டுகள் அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அது நெடு நேரம் நெற்றியில் ஒட்டியிருக்கும்போது பெண்களுக்கு தைராய்டு நோய் வருவது தவிர்க்கப்படுகிறது.
- அழகு என்பது சருமம் வெள்ளையாக இருப்பதல்ல.
- உடல் ஆரோக்கியமே சரும அழகுக்கு வழிவகுக்கும்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் உட்பட பலரும் சரும அழகை கூட்ட, பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுபவர். சிலர் அழகு நிலையங்களுக்கு செல்வர். சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்திற்கு அழகை கூட்டுவர். ஆனால் இதுபோல மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமலேயே சருமத்தை அழகாக வைத்திருக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? பார்க்கலாம்.
நீரேற்றம்...
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் வேண்டுமென்றால் உடலுக்கு நீரேற்றம் என்பது மிக அவசியமான ஒன்று. உடல் நீரேற்றத்தோடு இருக்கும்போது, சருமத்தின் தோற்றத்தை மங்கச்செய்யும் மாசுகளை திறம்பட நீக்கும். மேலும் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பதால், வறட்சி தடுக்கப்பட்டு, முக சுருக்கங்கள் இல்லாமல் எப்போதும் முகம் குண்டாக, மென்மையாக காட்சியளிக்கும். நீர் உங்கள் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது சருமத்திற்கு இளமை மற்றும் பிரகாசமான பளபளப்பைக் கொடுக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
கிளென்சிங்
பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு மென்மையான சுத்திகரிப்பு என்பது முக்கியம். லேசான அதாவது அதிக பாதிப்பில்லாத க்ளென்சர்களை பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்காமல், அழுக்கு, மாசுக்களை நீக்கும். கடுமையான ரசாயனங்கள் கொண்ட க்ளென்சர்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யும். இதனால் வீக்கம் மற்றும் முன்கூட்டியே வயதான தன்மை ஏற்படும். ஒரு மென்மையான க்ளென்சர் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இந்த சமநிலை கூடுதல் எண்ணெய் உற்பத்தியைத் தடுக்கிறது. இது பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
முகத்தில் உள்ள இறந்த செல்கள் சருமத்தின் நிறத்தை மங்கச் செய்து சருமத்தை சீரற்றதாகத் தோன்றச் செய்யும். சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை வளர செய்யும் ஒரு முறையாகும். இறந்த சரும செல்கள் அகற்றப்படும்போது முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.

சருமம் பளபளக்க தண்ணீர் அவசியம்
சரிவிகித உணவு
ஒரு சரிவிகித உணவுமுறை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நாம் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக்கொள்ளும்போது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிப்புற அழுத்தங்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. மேலும் ஒரு நல்ல உணவுமுறை ஹார்மோன் ஒழுங்குமுறைக்கும் உதவும். ஆரோக்கியமான உடல்நலமே சருமத்தை பிரகாசிக்க செய்யும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி பளபளப்பான சருமத்தைப் பெற உதவும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்கள் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரும செல்களுக்கு வழங்குகிறது. இந்த ரத்த ஓட்ட மேம்பாடு சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை ஊக்குவிக்கிறது. முக்கியமாக உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மன அழுத்தம் முகப்பரு மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும். உடற்பயிற்சி செய்வது வியர்வையை ஏற்படுத்தும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், மாசுகளை நீக்கவும், பளபளப்பான மற்றும் இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, வழக்கமான உடற்பயிற்சியே உங்கள் சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.
மேற்கூறியவை போல நாம் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர், உணவு போன்றவற்றை சரியாக எடுத்தாலே உடலும், சருமமும் ஆரோக்கியமாக, அழகாக இருக்கும்.
- துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
- துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.
மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.
துணிகளை விரைவாக உலர்த்த
மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.

பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்
உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்
வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.
பூஞ்சை வாடைக்குத் 'தடா'
மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும்.
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும்.
- வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பயக்கும்.
2010க்கு பின் பிறந்த பலருக்கு எண்ணெய் குளியல் என்ற சொல்லே புதிதாக இருக்கும். ஆனால் அதற்குமுன் பிறந்தவர்களுக்கு அதனுடைய பயன்கள் என்னவென்று தெரியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமை என்றால் அம்மா கண், காது, தலை என உடல் முழுவதும் எண்ணெயை ஊற்றி, தேய்த்துவிட்டு, 2 மணிநேரம் கழித்து குளிக்க சொன்னால், குளித்துவிட்டு வந்து நன்றாக தூங்குவோம். தூங்கி எழுந்தால் அப்படி ஒரு பொலிவு முகத்தில் இருக்கும். நல்ல தூக்கத்திற்கும், முகத்தில் இருக்கும் அந்த பொலிவிற்கும் இந்த எண்ணெய் குளியல்தான் காரணம் என்று அப்போது தெரியாது. இப்படி தமிழ்நாட்டில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஒரு செயல்தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. ஆனால் இப்போதெல்லாம் தீபாவளி என்றால் மட்டும்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்ற சொல் வெளிப்படுகிறது. அப்படி எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்தான் என்னவென்று நீங்கள் கேட்கும் அளவிற்கு அழகியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நன்மைகளை கொண்டது எண்ணெய் குளியல். அதுகுறித்து பார்ப்போம்.
அழகியல் நன்மைகள்
எண்ணெய் குளியல் சருமத்தை மென்மையாக்கி, பொலிவாக்க உதவும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சருமத்துளைகளை சுத்தப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறண்ட சருமத்தினர் எண்ணெய் குளியல் எடுக்கும்போது உடலுக்கு தேவையான எண்ணெயை வழங்குவதால், பளபளப்பான, மிருதுவான சருமம் கிடைக்கும். எண்ணெய்களில் உள்ள வைட்டமின் ஈ, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து காக்கிறது. எண்ணெய், சூரிய ஒளியின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியை தடுக்கிறது.
முடி வளர்ச்சி
எண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும். பொடுகுத் தொல்லை நீங்கும். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்து குளித்தால், உடல்சூடு தணியும். உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மாதத்திற்கு ஒருமுறையாவது எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ளுங்கள்
நல்ல தூக்கம்
வேலை காரணமாக, மன அழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் இருந்தால் அல்லது உடல் சோர்வாக இருந்தால் ஒரு எண்ணெய் குளியல் போடுங்கள். குளித்துவிட்டு வந்த அரைமணிநேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவீர்கள்.
நோய்களை தவிர்க்கும்...
எண்ணெய் குளியல் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, பாலியல் கோளாறுகள், நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற நோய்களைத் தடுக்க உதவும். எண்ணெயில் உள்ள அழற்சி பண்புகள் வலி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை எண்ணெய் குளியல் கொண்டுள்ளது. உங்களால் வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் குளியல் முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் குளியலில் பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து எண்ணெய்களும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் குளியல் இன்னும் உகந்தது.
- குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
- அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள்.
கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...
குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும் வைக்கும்.
கட்டளை வேண்டாம்
"இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.
இடைவெளி விட்டுப் பேசுங்கள்
குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்
முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல
போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.
தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்
மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.
அமைதி
கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள்.
- ஒருவருக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாழைப்பழங்கள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.
"ஆரோக்கியமானது" என்று நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு உணவும் அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல. ஒருவருக்கு உதவும் அதே ஊட்டச்சத்துக்கள் மற்றொருவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றாடம் நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடிய சில உணவுகள் இதய அல்லது சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.
வாழைப்பழம்...
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தசைகள் மற்றும் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள், ஸ்பைரோனோலாக்டோன், ARNI போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது பொட்டாசியம் இன்னும் இரத்தத்தில் சேரக்கூடும். அதிகப்படியான பொட்டாசியம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை உண்டாக்கி, மாரடைப்புக்கு வழிவகுக்கும். அதனால் சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக அளவு வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.
பசலைக்கீரை...
பசலைக்கீரை ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருந்தாலும், வாழைப்பழங்களைப் போலவே, இதிலும் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. இரத்த உறைதலை தடுக்கும் வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது. இதனை கொஞ்சம் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும், ரத்த உறைதல் அளவை கணிக்க முடியாது. அதனால் ரத்த உறைதல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிமதுரம்
சீமை அதிமதுரத்தில் கிளைசிரைசின் என்ற கலவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து பொட்டாசியம் அளவைக் குறைக்கும். உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

வார்ஃபரின் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மிதமான அளவு பசலைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது
சோயா சாஸ்
சோயா சாஸால் ஒரு நாளைக்கு தேவையான சோடியத்தின் அளவை எளிதில் நிரப்பமுடியும். இதய செயலிழப்பு உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் எடுத்துகொள்வது கூட நீர்தேக்கம், வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சோடியம் உட்கொள்ளல் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் அதிக வேலைகொடுக்கும். அவை ஏற்கனவே பலவீனமாக இருக்கும்போது இதை எடுத்துக்கொள்வது இன்னும் ஆபத்தானதாகும்.
ஆல்கஹால்
பலரும் வைன் குடிப்பது தீங்கு விளைவிக்காது என நினைத்தாலும், ஆல்கஹால் இதயத்திற்கு ஒரு நச்சுக்காரணி என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து மது அருந்துதல், இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இதய பிரச்சனை உள்ளவர்கள் மது அருந்தினால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
திராட்சை
திராட்சை சில மருந்துகளின் செயல்பாட்டை மாற்றக்கூடும். திராட்சையில் உள்ள சில ரசாயனங்கள், கல்லீரலில் உள்ள உள்ள CYP3A4 என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கும். இந்த நொதி நாம் எடுத்துக்கொள்ளும் பல்வேறு மருந்துகளை உடைத்து வெளியேற்ற உதவுகிறது. இந்த நொதியத்தின் செயல் தடுக்கப்படும்போது, மருந்து இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலந்து, உடலில் மிக நீண்ட நேரம் தங்கிவிடுகிறது. இதனால் மருந்துகளின் அளவு உடலில் அபாயகரமான அளவிற்கு அதிகமாகி, பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உங்களுக்கு பயத்தை உண்டாக்குவதற்காக இந்த தகவலை சொல்லவில்லை. ஒவ்வொருவரின் இதயமும் சிறுநீரகங்களும் ஊட்டச்சத்துக்களை வித்தியாசமாகக் கையாளுகின்றன. அதனால் உங்கள் உடல்நலனுக்கு எது சிறந்ததோ அதை அறிந்து உட்கொள்ளுங்கள். மருத்துவ கண்காணிப்பில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுமுறைகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
- முடி, சருமம் என இரண்டிற்கும் பல்வேறு அழகு நன்மைகளை அளிக்கிறது அரிசி தண்ணீர்.
- அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
முடி உதிர்தலை தடுக்க, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெண்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்வர். அதில் ஒன்றுதான், முடிக்கு அரிசி தண்ணீர் பயன்படுத்துவது. முகம் மற்றும் சருமத்திற்கு அரிசி நீரை ஏன் பயன்படுத்துகிறார்கள்? அதனால் என்னப் பயன் என்பது குறித்து பார்ப்போம்.
சருமத்தைப் பொலிவாக்கும்
அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சரும அமைப்பை மேம்படுத்தவும், நிறத்தை கூட்டவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். மேலும் கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் மற்ற பழுப்பு நிறக்கோடுகள், புள்ளிகளையும் குறைக்க உதவும்.
வயதான தோற்றத்தை குறைக்க உதவும்
அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயது தொடர்பான பிற தோல் கவலைகளைக் குறைக்க உதவும்.
நீரேற்றம்
அரிசி நீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றவும், அழற்சியால் ஏற்பட்ட பாதிப்பினை குறைக்கவும் உதவும். இது ஒரு இயற்கை மாய்ச்சுரைசராகவும் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக்க உதவும்.
எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்
அரிசி நீர் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கும், முகப்பரு அதிகம் இருப்பவர்களுக்கும் அரிசி நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. வெடிப்புகளை தடுக்கவும் உதவும்.

அரிசி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன
தோல் தடையை சரிசெய்தல்
அரிசி நீரில் உள்ள புரதங்கள் சருமத்தின் இயற்கையான தடையை வலுப்படுத்த உதவும், இது சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் ஈரப்பதம் இழப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இது காலப்போக்கில் ஆரோக்கியமான, மீள்தன்மை கொண்ட சருமத்திற்கு வழிவகுக்கும்.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
அரிசி நீரில் வைட்டமின் ஈ , ஃபெருலிக் அமிலம் மற்றும் பைடிக் அமிலம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
எக்ஸ்ஃபோலைட்டிங்
அரிசி நீரில் என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற இயற்கையான எக்ஸ்ஃபோலைட்டிங் பொருட்கள் உள்ளன. அவை இறந்த சரும செல்களை அகற்றவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவும்.
இவ்வளவு நன்மைகளை கொண்ட அரிசிநீரை எப்படி பயன்படுத்துவது?
அரிசியை தண்ணீரில் கழுவிவிட்டு, அதில் உள்ள அழுக்கு சென்றபின் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அரை கப் அரிசி எடுத்தால், இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பின்னர் தண்ணியை ஒரு சுத்தமான கிண்ணத்தில் வடிகட்டி, பஞ்சை பயன்படுத்தி, தொட்டு தொட்டு முகத்தில் தடவலாம். அல்லது பாட்டிலில் ஊற்றி ஸ்பிரேவாகவும் பயன்படுத்தலாம். இதனை வாரத்திற்கு இரண்டுமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற உணவுக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
- இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்க நமது உணவுமுறைதான் காரணம்.
இந்தியாவும், ஜப்பானும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் எளிமையான வாழ்க்கை முறைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்தியர்களைவிட ஜப்பானியர்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். நம்மைவிட ஜப்பானியர் 10 முதல் 15 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றனர். அதாவது ஜப்பானியரின் ஆயுட்காலம் 84.8 ஆண்டுகள் எனவும், இந்தியர்களின் ஆயுட்காலம் 70.4 ஆண்டுகள் எனவும் வரையறுக்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களை நாம் மாத்திரையில்தான் கழிக்கிறோம். இதற்கு காரணம் என்ன என என்றாவது யோசித்துள்ளீர்களா? நம் ஆயுட்காலத்தில் 10 ஆண்டுகள் குறைய நமது உணவுமுறைதான் முக்கிய காரணம். நமது உணவுமுறைக்கும், ஜப்பானியர்களின் உணவுமுறைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை காண்போம்.
தண்ணீர் - எண்ணெய்
ஜப்பானில் எண்ணெய் பயன்பாட்டை விட தண்ணீர் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதாவது நாம் அதிகம் எண்ணெயில் வறுத்த, பொறித்த உணவுகளையே விரும்புகிறோம். அதிகம் எண்ணெயில்தான் சமையலை செய்கிறோம். ஆனால் ஜப்பானில் வேகவைத்தலே அதிகம் பின்பற்றப்படுகிறது. அவர்கள் வறுக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இதனால் வறுக்கும்போது இழக்கப்படும், வைட்டமின் சி, பி, போன்ற ஊட்டச்சத்துக்கள் வேகவைக்கப்படும் உணவுகளால் பாதுகாக்கப்படுகிறது. வேகவைத்து எடுக்கப்படும் உணவுகள் இதய நோய்களை உருவாக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகாமல் தடுக்கின்றன. எண்ணெய் பயன்படுத்தப்படாத உணவுகள், இலகுவாகவும், ஜீரணிக்க எளிதாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இந்த சமையல் பாணி சிறந்த குடல் ஆரோக்கியம், நீரேற்றம் மற்றும் நீண்டகால இருதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
ஒமேகா 3 நிறைந்த உணவுமுறை
ஒருகாலத்தில் பாரம்பரிய இந்திய உணவுமுறை என்பது ஆரோக்கியமான கொழுப்புகள், புதிய பொருட்கள், வீட்டில் சமைக்கும் உணவுகளை மையமாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள்தான் சமையலறைகளை நிரப்பியுள்ளன. ஆனால் ஜப்பானில் தற்போதும் மீன், காய்கறிகள், புளித்த உணவுகள் (இட்லி, தோசை போன்ற உணவுகள்) எண்ணெய் குறைவான உணவுகள்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த அணுகுமுறை இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 அமிலங்களை உடலுக்கு வழங்குகிறது. அவை வீக்கத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. இந்த புளித்த உணவுகள், காய்கறிகளை உப்பு தண்ணீரில் ஊறவைத்து ஊறுகாய் போல் செய்து சாப்பிடும் அவர்களின் உணவுமுறைகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது. சிறந்த செரிமானத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.

மீன், கடல்பாசிகள், எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகளையே ஜப்பான் மக்கள் அதிகம் எடுத்துக்கொள்கின்றனர்
பகுதி அளவு (hara hachi bu)
ஜப்பானில் ஹரா ஹச்சி பு என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது 80 சதவீதம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பசி அடங்கியவுடன், வயிறு நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும். 'திருப்தி அடைந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்து; அள்ளி அள்ளி போட்டுக் கொள்ளாதே' என்பதுதான் இதன் சுருக்கமான தத்துவம். இந்த கவனமுள்ள அணுகுமுறை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த முறை ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்தியாவிலும் நம் முன்னோர்கள் இந்தமுறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரமே மேலோங்கியுள்ளது.
உடல் செயல்பாடுகள்
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், குழு பங்கேற்பு போன்ற செயல்பாடுகளின் மூலம் ஜப்பானின் அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடு அதாவது உடற்பயிற்சி பின்னிப்பிணைந்துள்ளது. இது வயதான காலத்தில் வலுவான தசை, எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்தியாவில் சிறுவர்கள்கூட பைக்குகளில்தான் செல்கின்றனர். பலரும் உடல் செயல்பாடுகளுக்கு வேலை கொடுக்க மறக்கின்றனர்.
இரவு உணவு - தூக்கம்
ஜப்பானில் இரவு உணவு குறைவாகவும், சீக்கிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் தூங்குவதற்கு முன்பே செரிமானம் நிகழ்கிறது. இந்தியாவில் இரவுநேரத்தில் இந்த உணவுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இல்லை. இரவு உணவு கனமாக இருக்கும். மேலும் தூங்குவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்புதான் சாப்பிடுவோம். சிலரெல்லாம் சாப்பிட்ட உடனேயே படுத்துவிடுவார்கள். இது தூக்கத்தை சீர்குலைத்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கோவை விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நவ.2ம் தேதி இரவு, கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டுருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், காரில் இருந்த இளைஞரை தாக்கிவிட்டு, அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாளை திறந்தாலே, ஃபோனை ஆன் செய்தாலே, டிவியை போட்டாலே இதே செய்திதான். இச்செய்தியில் பல விவாதங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, எப்போதுமே இருவாதம் எழும். அதாவது சட்டம், ஒழுங்கு சரியில்லை; பெண்கள் ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றனர்? ஏன் அவரிடம் பேசினர்? இதில் எது சரி? பார்ப்போம்...
சட்டம், ஒழுங்கு சரியில்லையா?
சட்டம், ஒழுங்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு குற்றம் என்றால் உடனே ஆளும்கட்சியை குறைசொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஒரு அரசுதான் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமா? பொறுப்பா? கொஞ்சம் மக்கள் சிந்தித்து பாருங்கள். ஒரு அரசு மட்டும் என்ன செய்யமுடியும்?
பல இடங்களில், அதுவும் பொது இடங்களில் ஒரு கும்பல் சண்டை போடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த சண்டையை சுற்றி இருக்கும் பொதுமக்கள் தடுக்கலாம். ஆனால் உயிர்மீதான பயத்தால் யாரும் தடுக்கமாட்டோம். அப்படி அனைவரும் ஒன்றுக்கூடி தடுத்தால், ஒவ்வொரு இடங்களில் இது நிகழும்போதும் மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு ஒரு பயம் வரும். ஆனால் நமக்கு என்ன என மக்கள் ஒதுங்கி இருப்போம். என்று, மக்கள்மீது குற்றம் புரிபவர்களுக்கு பயம் வருகிறதோ, அப்போதுதான் குற்றங்கள் குறையும். மற்றொன்று காவல்துறையினர். உண்மையில் காவல்துறையினர் மீது பல விமர்சனங்கள் இருப்பது நிதர்சனமான உண்மை. அதேநேரம் காவல்துறையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என தனித்தனியாக ஒரு காவலரை நியமிக்க முடியாது என்பதும் நியாயமான ஒன்றுதானே.
சுய ஒழுக்கம்
மறுபக்கம் எளிதாக ஒருவரை குத்திவிட்டு, கொடூரமாக கொலைசெய்து விட்டு, ஒரு பெண்ணின் அழுகை, கதறல் சத்தம்கேட்டும் ஒருவன் குற்றத்தை புரிகிறான். நமக்கு ஒரு எறும்பை மிதித்துவிட்டால் கூட உள்ளம் பதறுகிறது. இங்கு அவனுக்கு மனிதாபிமானம் இல்லையா? இரக்க குணம் இல்லையா? எது இல்லை? சிறுவயதிலிருந்தே ஒருவருக்கு அனைத்து நல் ஒழுக்கங்களையும், மனிதாபிமானம், இரக்கக்குணம் போன்றவற்றையும் பெற்றோர்கள் சொல்லி வளர்க்கவேண்டும். ஒருவரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு நல்ல வளர்ப்பு, குற்றங்களை தடுக்க உதவும். ஆனால் பல பெற்றோர்களே குழந்தைகள் குற்றவாளிகளாக உருவெடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றனர். வளர்த்தலை தாண்டி சுய ஒழுக்கமும் தேவை. ஒரு மனிதன் சுய ஒழுக்கத்துடன் வளருதல் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் ஒழுக்கத்துடன் இல்லாமல், சட்டத்தை மட்டும் குறை கூறுவது எப்படி?
சட்டங்கள்
குற்றங்கள் நடக்க முக்கிய காரணம் சட்டங்கள் கடுமையாக இல்லை என்ற பேச்சு நீண்டகாலமாக தொடர்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில்தான் கொலை செய்தவன், ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவன் போன்றோரெல்லாம் ஜாமினில் ஜாலியாக சுற்றுகிறார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இல்லாததால்தான், பல குற்றச் செயல்களுக்கு சிறார்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். எப்போது ஒரு சட்டத்தின் மீது பயம் வருகிறதோ அப்போதுதான் குற்றம் குறையும். இருப்பினும் வெறும் சட்டத்தால் மட்டும் குற்றங்களை குறைக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் அரசுதான் பொறுப்பா?
மேலே நாம் குறிப்பிட்ட கோவை கல்லூரி பெண் வழக்கு உட்பட தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் அரசுதான் பொறுப்பா? கொஞ்சம் தெளியுங்கள். சொந்த குடும்பத்தை, உறவினர்களை, தான் நேசித்த காதலரை, காதலியை சிலர் கொல்கிறார்கள். இதற்கும் அரசை குறை கூறவேண்டியது. சொந்த குடும்பத்தில் அண்ணன், தனது தம்பியை வெட்டப்போகிறான் என்பது அரசுக்கு எப்படி தெரியும்? தெரிந்தால்தானே ஒரு காவலரை அங்கு முன்கூட்டியே காவல் வைக்கமுடியும். தகாத உறவுகளால் பல கொலைகள் அதுவும் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்படுகின்றனர்.
இதற்கும் அரசுதான் காரணம் என்றால், ஒவ்வொருவரும் தங்கள் உறவு குறித்து அரசிடம் பதிவு செய்தால், அதற்கேற்றார் போல ஒரு காவலரை நியமிக்கலாம். இருப்பினும் சில வழக்குகளில் கொலைசெய்துவிட்டு தண்டனை குறித்து தெரிந்தும், காவல் நிலையங்களில் சரணடைகின்றனர். இதற்கு காரணம்? சட்டத்தின் மீது பயம் இல்லாததா? இல்லை. சில இடங்களில் உணர்ச்சிரீதியாக சிலர் பொறுமை இழக்கையில் தனது நெருங்கிய உறவுகளை கூட கொல்ல துணிகின்றனர். கொலை என்பது எல்லாவற்றிற்கும் தீர்வு அல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவது கூட்ட நெரிசல். ஆன்மிக நிகழ்ச்சிகள், பெங்களூரு ஆர்பிசி கூட்ட நெரிசல், சமீபத்தில் தவெக கூட்ட நெரிசல் என இவற்றில் சிக்கி ஏராளமானோர் இறந்த செய்தியை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு அரசும், காவல்துறையும் பாதுகாப்பு வழங்காததுதான் காரணம் என குற்றம் சொல்பவர்கள் சொல்லலாம். ஆனால் 10 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 50 பேர் இருந்தால் காவல்துறையும், அரசும் மட்டும் என்ன செய்யும்? இதை ஏன் மக்கள் சிந்திக்கவே மறுக்கிறீர்கள்? உங்களின் சுய ஒழுக்கம், ஒரு பொது அறிவு, பொது புரிதல் எங்கே செல்கிறது? ஒருவர் இருக்கவேண்டிய இடத்தில் பத்துபேர் இருந்தால் மூச்சுவிடுதல் சிரமமாகும். தாகம் எடுக்கும். அங்கு மூச்சும் விட இயலாது. முன்னேற்பாடுகள் இல்லாததால் தண்ணீரும் குடிக்க இயலாது. நிற்பதற்கு இடமும் இல்லாமல், ஒருவரை ஒருவர் நெரித்து மேலே ஏறி மிதிப்பர். ஏனெனில் அவரவர் உயிர்தானே அவரவருக்கு முக்கியம். அதனால் மற்றவர்களை நினைக்கமாட்டார்கள். இப்படி ஒரு உயிர் அங்கு போக அங்கு இருப்பவர்களே காரணமாக இருந்துகொண்டு ஒரு அரசை குற்றம் சாட்டினால் எப்படித்தகும்?

சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு அவசியம்
கண்டிப்பாக அரசும் பொறுப்பேற்க வேண்டும். நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு பொறுப்பேற்க வேண்டும்தான். ஆனால் மக்கள் சுய ஒழுக்கத்துடன், ஒரு பொது புரிதலுடன் இருக்கவேண்டும். அரசை கூறுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பாதுகாப்பு முக்கியம்!
கோவை மாணவி வழக்கு உட்பட காதலர்கள் பலரும் இதுபோல தனிமையில் இருக்கும்போது, பலர் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். காதலர்கள் தனிமையில் நேரம் செலவிடவேண்டும் என விரும்புவோம். அது நம் அனைவருக்குள்ளும் எழும் ஒரு இயல்பான உணர்வு. ஆனால் நாம் நேரம் செலவிடுவதற்கு தகுந்த இடம் எது? பலரும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று இதுபோல சிக்கிக் கொள்கின்றனர். பெண்ணை ஒரு ஆண் உண்மையில் நேசிக்கிறான் என்றால், அவன் அந்த பெண்ணின் பாதுகாப்பிற்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பான். உணர்ச்சிகள் மட்டும் காதல் இல்லை. உண்மையான நேசம்தான் காதல் என்பதை மனதில் நிறுத்திக்கொள்வோம்.
எது பெண் சுதந்திரம்?
1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் நாம் நினைத்த நேரத்தில், நமக்கு பிடித்ததை, நமக்கு பிடித்த இடத்திற்கு, நமக்கு பிடித்தவருடன் செல்ல முடியவில்லை என்பது என்ன சுதந்திரம் என கேள்வி எழுப்பலாம். அதற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் இங்கு நமக்கு பாதுகாப்பு சுதந்திரம் இல்லை என்பதை பெண்கள் உணருங்கள். நினைத்த நேரத்திற்கு வெளியே செல்லலாம் என்பது சுதந்திரம்தான். ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் அது நிலையோடு இருக்கும். இதை சொல்வது அபத்தமானது என்று தெரிந்தாலும், நம் நாட்டின் நிலை என்ன? நமக்கு இங்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை பெண்கள் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காதலரை சந்திப்பது தவறு இல்லை. ஆனால் அந்த சந்திப்பை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிகழ்த்துங்கள். இந்தியாவில் அம்மாக்களே தங்கள் பெண்பிள்ளைகளைத்தான், ஒழுங்காக உடை அணிய சொல்வார்கள். எப்போதும் தங்கள் ஆண்பிள்ளைகளிடம் சாதரணமாகக்கூட பெண்களை தவறாக பார்க்கக்கூடாது என சொல்லமாட்டார்கள். அப்படி இருக்கையில் இங்கு நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதனால் கிடைக்கும் சுதந்திரத்தை முதலில் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறோமா என எண்ணுங்கள். இந்தக் கருத்துகள் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் இங்கு சட்டம், ஒழுங்கு, ஒரு ஆணின் பார்வை, மக்களின் பார்வை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் பெண்கள் நினைக்கும் சுதந்திரம் கிடைக்கும் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்வோம்.
- சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
- ஒருவர் செய்வது குற்றம் என அறிந்தாலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும்.
தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் இன்று முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது. இதுவரை தன்மீது ஜாய் கிரிசில்டா கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கமளிக்காத ரங்கராஜ், சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தான்தான் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்றத் தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடும் வரையில், அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கான பராமரிப்பு செலவை மாதம்பட்டி ரங்கராஜ், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்கவேண்டும் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என இணையவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர். இப்படி இவர்கள் சொல்வதுபோல மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்ய இயலுமா? இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து காண்போம்.
இந்தியச் சட்டப்படி கணவர் விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து, சிறை தண்டனையும் விதிக்கலாம். ஆனால் அதற்கு கணவரின் திருமணத்தால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி புகார் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும். மற்றப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மற்றொன்று முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்கவில்லை என்பதை அறிந்தே, இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அப்பெண்ணிண் குற்றச்சாட்டு எடுபடாது. ஆனால் ரங்கராஜின் வழக்கில் மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால் கைது செய்யப்படலாம் என சிலர் கூறிவருகின்றனர். மற்றொன்று ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை... தனக்கும், தனது குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், பராமரிப்புத்தொகை நிச்சயம் வழங்கப்பட வழிவகை உள்ளது. இதுபோன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி தடுத்தாலும் போதிய காரணங்கள் இருந்தால் வழங்கலாம். காரணம் கணவரின் தவறு என்பதால் முதல் மனைவி தடுத்தாலும் ஜீவனாம்சம் வழங்கலாம்.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன
இவர்கள் வழக்கு எப்படி இருந்தாலும், சட்டங்கள் என்ன சொன்னாலும் பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். திருமணம் முடிந்திருந்தால், விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அதுபோல நீங்கள் திருமணம் செய்ய உள்ளவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் எனில், அவருடைய விவாகரத்தை உறுதிசெய்து பின்னர் ஒரு உறவுக்குள் செல்லுங்கள். உங்கள் தரப்பில் உணர்ச்சி ரீதியான நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்தின்படியே அரசு செயல்பட இயலும். படிப்பறிவு இருந்தாலும், நடைமுறையை அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் செல்லும்போது சில முடிவுகளை எடுப்பது சிக்கலான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இந்த சமூகம் பெண்களையே குறைக்கூறும். அதனால் உங்கள் நலனுக்காக எந்த முடிவையும் எமோஷனலாக எடுக்காமல், நடைமுறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்து எடுங்கள்.
- சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன.
- எப்போதும் உயர்தர சப்ளிமெண்டுகளைத் தேர்வுசெய்து, அதன் பரிந்துரை அளவை மட்டும் பயன்படுத்துங்கள்.
உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காதபோது, கூடுதல் வைட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை பெற தற்போது பலரும் எடுத்துக்கொள்வது சப்ளிமெண்டுகள். உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருக்காது. நாம் எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பொறுத்துதான் அவை அமையும். இப்போதெல்லாம் பலரும் உணவு எடுத்துக்கொள்வதே ஒரு வேலையாக பார்க்கும்போது, எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும். அதனால் ஊட்டச்சத்துக்களையும் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைத் தாண்டி சருமம், முடி என அழகு சார்ந்த தேவைகளுக்கும் இந்த சப்ளிமெண்டுகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன. நீங்கள் தினந்தோறும் சருமம், முடி, மற்றும் நக பொலிவுக்காக பயன்படுத்தும் சப்ளிமெண்டுகளால் ஏற்படும் பக்க விளைவுகளை காண்போம்.
குமட்டல், வயிற்றுவலி
சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை உணவு இல்லாமல் எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யலாம். இது குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வயிறு எரிச்சல் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தும். அதுபோல வெறும் வயிற்றில் அல்லது காபி, ஆரஞ்சு சாறு போன்ற அமில பானங்களுடன் சேர்த்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமும் அசௌகரியம் அதிகரிக்கும். இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல், அஜீரணம் அல்லது இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை மோசமாக்கலாம். எனவே, சப்ளிமெண்ட்ஸை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.
தலைவலி, தலைச்சுற்றல்
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவை உடலில் சேமிக்கப்பட்டு, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் தலைச்சுற்றல், தலைவலி ஏற்படலாம். மேலும் ரத்த அழுத்தத்தை பாதிப்பதுடன், நீரிழிவையும் ஏற்படுத்தும். காஃபின் மற்றும் மூலிகை சாறுகள் கொண்ட சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொள்ள தொடங்கும்போதும் சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
தோல் பிரச்சனைகள், முகப்பரு
உங்கள் சருமத்தை மேம்படுத்துவதற்காக நீங்கள் பயன்படுத்தும் சப்ளிமெண்டுகள் சில நேரங்களில் அதை மோசமாக்கும். அதிக அளவு பயோட்டின் (வைட்டமின் பி7) அல்லது வைட்டமின் பி12 முகப்பரு போன்ற வெடிப்புகளைத் தூண்டக்கூடும். குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களில். இதற்குக் காரணம், பயோட்டின் மற்றும் வைட்டமின் B5 (பாந்தோத்தேனிக் அமிலம்) இரண்டும் ஒரே பாதையில் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அதிகப்படியான பயோட்டின், வைட்டமின் B5-ஐ உடல் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும், இது முகப்பரு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒவ்வாமை உணர்திறன் காரணமாக மற்றவர்களுக்கு லேசான தடிப்புகள், அரிப்பு அல்லது சிவத்தல் ஏற்படலாம்.

அதிக அளவு வைட்டமின் பி7, பி12 பயன்படுத்துவது முகப்பருவுக்கு வழிவகுக்கும்
மாறுபடும் சிறுநீரின் நிறம்
சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொண்ட பிறகு, சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது நியான் நிறங்களில் செல்லும். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், முக்கியமாக வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்) எடுத்துக்கொண்டால் ஏற்படும் பொதுவான மற்றும் பாதிப்பில்லாத விளைவுதான் இது. இதுகுறித்து கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்றாலும், முதல்முறை சப்ளிமெண்ட் பயன்படுத்துபவர்களுக்கு புதிதாகவும், பயமாகவும் இருக்கலாம். ஆனால் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.
சோர்வு, மனநிலை மாற்றங்கள்
சிலர் முடி மற்றும் சரும பராமரிப்பிற்காக சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்ள தொடங்கும்போது சோர்வு, எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்களை அனுபவிக்கக்கூடும். இது அதிகப்படியான வைட்டமின் B6, நியாசின் (B3) அல்லது துத்தநாகத்தால் ஏற்படக்கூடியது. வைட்டமின் B6 அதிக நரம்பு சேதத்தை ஏற்படுத்தும், இது உணர்வின்மை மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். நியாசின் (B3) அளவுக்கு அதிகமாக உட்கொள்வது தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நகம் உடைதல், முடி உதிர்தல்
சப்ளிமெண்ட் எடுக்கத் தொடங்கும்போது உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகரிப்பது, நகங்கள் எளிதாக உடைவது, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடல் திடீரென ஊட்டச்சத்துக்களின் வருகைக்கு ஏற்ப மாறும்போது, கெரட்டின் உற்பத்தி மற்றும் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும்போது இந்த விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இது தற்காலிகமானதுதான்.
செரிமான அசௌகரியம் மற்றும் வீக்கம்...
குமட்டலைத் தவிர சில நேரங்களில் வீக்கம், வாயு அல்லது லேசான வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளையும் பயனர்கள் அடைகின்றனர். ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கொலாஜன், ஜெலட்டின் அல்லது செயற்கை இனிப்புகள் போன்ற பொருட்கள் உணர்திறன் உள்ளவர்களுக்கு லேசான செரிமானக் கோளாறை ஏற்படுத்தக்கூடும். சப்ளிமெண்ட் எடுக்க தொடங்கும் ஆரம்பகாலத்தில் இந்த அறிகுறிகள் தென்படலாம். பின்னர், குடல் அதன் வருகைக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கிவிடும்.
இறுதியில் பிரகாசமான சருமம், வலுவான நகங்கள் மற்றும் பளபளப்பான கூந்தல் போன்றவை மாத்திரைகளால் கிடைப்பவை அல்ல. இவை அனைத்தும் ஊட்டச்சத்துக்களால், அதாவது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. நமது அழகு, நமது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை புரிந்துகொண்டாலே இதுபோன்ற மாத்திரைகளும், கேப்ஸ்யூல்களும், அழகு சாதனப் பொருட்கள் எதுவும் உங்களுக்கு பயன்படாது.






