என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • ஆங்கிலம் பேச அழுத்தம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு அதிக பதட்ட உணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்.

    அண்மையில் தமிழ்நாட்டில் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மும்மொழிக் கொள்கை தொடர்பான வாக்குவாதங்கள் அரங்கேறியதை நாம் அனைவரும் அறிவோம். இதில் பலரும் ஹிந்தி திணிக்கப்படும் என்பதற்காக மும்மொழிக் கொள்கையை எதிர்த்தாலும், சிலர் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலமே முழுமையாக தெரியாதபோது எப்படி மூன்றாவது மொழி என்பதற்காக எதிர்த்தனர். ஆம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த இரண்டு மொழிகளிலும் வல்லவராக இருப்போம். ஒருசிலரே. அனைவருக்கும் அவரவது தாய்மொழி என்பது மிகமுக்கியமான ஒன்று. அடுத்து இணைப்புப் பாலமான ஆங்கிலம். ஆனால் இப்போதெல்லாம் தாய்மொழி தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என பலரும் நினைக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆங்கிலவழி கல்விமுறை உள்ள பள்ளிகளில் சேர்க்கின்றனர். பொது இடங்களில் தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என அவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால் குழந்தைகளை ஆங்கிலம் பேச கட்டாயப்படுத்துவது அவர்களின் மொழி வளர்ச்சி, உணர்ச்சி, ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

    கற்றலில் அதிகரிக்கும் பதற்றம்...

    2023ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, எகிப்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேச அழுத்தம் இருப்பதாகவும், இது குழந்தைகளுக்கு அதிக பதட்டத்தை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச வராதபோது அது அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது எகிப்தில் மட்டுமல்ல. தமிழ்நாட்டிலும் அப்படித்தான். நமது மொழி தமிழ். மற்ற மொழியை தவறுதலாக உச்சரித்தால் எந்த தவறும் கிடையாது. இதனை பெற்றோர்கள் மனதில் கொள்ளவேண்டும். நீங்கள் வீட்டில் தமிழில் பேசுவீர்கள். வெறும் கற்பதை வைத்துமட்டும் பிள்ளைகள் சரளமாக ஆங்கிலம் பேசவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கக்கூடாது. முதலில் அந்த மொழியை குழந்தை அறிந்து, தெளிந்து பின்னர் பேசத்தொடங்கும்போதுதான் சரியான உச்சரிப்பு வரும். அதற்குள் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என நிர்பந்திக்கும்போது அல்லது அழுத்தம் கொடுக்கப்படும்போது, அவர்கள் பயப்படுகிறார்கள். அதிகம் பதட்டம் கொள்கிறார்கள். பதட்டத்தால் அதுசரியாக வராதபோது, அப்போது எப்போதும் நமக்கு ஆங்கிலம் வராதோ என அச்ச உணர்வு கொள்கிறார்கள். இதுவே அவர்கள் ஆங்கிலம் கற்க தடையாக அமைந்துவிடும். மேலும் படிப்பிலும் அவர்களை பாதிக்கும். அதனால் பெற்றோர் குழந்தைகளிடம் ஆங்கிலம் கற்க வேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுக்காதீர்கள். 


    நாம் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தும்போது அதன்மீது குழந்தைகளுக்கு வெறுப்பு உண்டாகும்

    பெற்றோரும் ஆங்கிலத்தில் பேசுங்கள்...

    வீட்டில் நாம் நம் தாய்மொழியில் பேசுவதால் அவர்களுக்கு தமிழ் சரளமாக வரலாம். அப்படி ஆங்கிலத்தில் உங்கள் குழந்தைகள் புலமைபெற வேண்டுமானால், நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் உரையாடுங்கள். அப்போது அது குழந்தைக்கு எளிதாக இருக்கும். இருமொழிகளையும் மாறி மாறி பேசும்போது இரண்டிலும் நல்ல புலமை பெறுவார்கள். அவர்களுக்கு இருமொழிகளையும் பற்றி அறிய ஆர்வம் வரும். மறுபக்கம் ஆங்கிலத்திற்கு ஆதரவாக தாய்மொழியை அடக்குவது மொத்த அறிவாற்றல் வளர்ச்சியை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களை டியூஷனுக்கு அனுப்பாமல் சிறுவர்களுக்கான ஆங்கில படங்களை போட்டுக்காட்டி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளை கற்றுக்கொடுக்கலாம். இயல்பான உரையாடல் மூலம் ஆங்கிலத்தை ஊக்குவிக்கலாம். மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்போது அதை கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மேலும் தாய்மொழி அறிதலும் மிக முக்கியமானது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

    • குழந்தை பெற வேண்டுமானால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.
    • நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது.

    புதிதாக திருமணமான தம்பதிகள் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் எனில், எதற்காக நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு என்பது எளிதானது அல்ல. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு நாம் முழுமனதோடு தயாராக வேண்டும். நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன் மற்றவர்களின் அழுத்தத்தின் காரணமாக குழந்தை பெறக்கூடாது என்பதை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். உண்மையில் ஒரு பெண் ஆசைப்பட்டு அல்லது கணவன், மனைவி இருவரும் விருப்பப்பட்டு ஒரு குழந்தைக்கு தயாராகிறீர்கள் என்றால் பிரச்சனை இல்லை. மாறாக, வேறுசில காரணங்களால் நீங்கள் குழந்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அதனால் பாதிக்கப்படப்போவது நீங்கள் இல்லை. எந்தப் பாவமும் செய்யாமல் இந்த உலகுக்கு வரும் குழந்தைதான். காரணம், மற்றவர்களின் அழுத்தத்தால் ஒரு குழந்தை பெறும்போது நீங்கள் முழு அன்பையும் குழந்தையிடம் வெளிப்படுத்தமாட்டீர்கள். பெற்றோம், வளர்த்தோம் என கடமைக்காக ஒரு செயலை செய்வீர்கள். அதனால் கீழ்க்காணும் காரணங்களுக்காக பெண்கள் குழந்தை பெறுவதை கைவிடுங்கள். 

    "பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள்"

    திருமணமானாலே வீட்டில் உள்ள பெரியவர்கள், பேரக்குழந்தையை பார்த்துவிட்டால் நிம்மதியாக சென்றுவிடுவேன். பேரக்குழந்தையை பெற்றுக்கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தொடர்ந்து பேச தொடங்கிவிடுவர். பெற்றோர் விருப்பம், மாமியார் கேட்டார் என ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எப்போது விருப்பமோ, அப்போது குழந்தை பற்றி யோசியுங்கள். 

    "எங்களை நெருக்கமாக்கும் என்று நினைத்தோம்"

    பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறந்தால் தங்களுக்குள் கூடுதல் நெருக்கம் வந்துவிடும் என நினைப்பார்கள். அது தவறு. உங்களுக்கு நெருக்கம் வேண்டும் என்று நினைத்தால் நேரம் ஒதுக்கி அதிகம் வெளியே செல்லுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயலுங்கள். அதைவிடுத்து குழந்தை பெற்றுக்கொண்டு, நெருக்கம் இல்லாமல் உங்கள் நிலையை இன்னும் மோசமாக்கி கொள்ளாதீர்கள்.


    புதிய தம்பதிகள் கூடுதல் பிணைப்பு வேண்டும் என்று எண்ணினால் ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்

    ஆண், பெண் என்பதை நிரூபிக்க...

    திருமணமான ஒரு ஆண்டிற்குபின் குழந்தை பெறுவது என்பது கட்டாயம் என்ற விதிமுறை நம் சமூகத்தில் நடைமுறையில் உள்ளது. இதற்கு மாறாக நமது திட்டங்கள் ஏதேனும் இருந்தால், உன்னால் குழந்தை பெத்துக்க முடியாது என பெண்களையும், நீயெல்லாம் ஒரு ஆணா என கணவன்மார்களையும் விமர்சிக்க தொடங்குவர். இந்த பேச்சுகளை நினைத்து பயம்கொண்டே உங்களுக்கு வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள். ஆனால் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் சமூகம் பேசும். அதனால் உங்கள் கடமைகளை நிறைவேற்றிவிட்டு குழந்தைக்கு நீங்கள் தயார் எனும்போது பெற்றுக்கொள்ளுங்கள்.

    "மற்ற குடும்பங்களிலிருந்து வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை"

    சமூக அழுத்தம் காரணமாக நிறைய திருமணமான தம்பதிகள் உடனே குழந்தைகளைப் பெறுகிறார்கள். திருமணமான சில மாதங்களிலேயே உங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலானோர் "நல்ல செய்தி" இருக்கா என கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என குழந்தைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. மேலும் எங்களோடு திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லாம் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் இன்னும் பெறவில்லை எனக்கூறி, குழந்தை பெற முயற்சிக்காதீர். குழந்தை பெற வேண்டுமானால் நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருப்பது முக்கியம்.  

    "நான் பெறாத விஷயங்கள் என் குழந்தைக்கு கிடைக்கவேண்டும்"

    என்னுடைய சிறுவயதில் நான் நிறைய விஷயங்களை தவறவிட்டேன். ஆனால் என் குழந்தைக்கு எல்லாவற்றையும் நான் கொடுக்கவேண்டும். என் குழந்தைக்கு செய்ய தேவையான அனைத்தும் இப்போது என்னிடம் உள்ளது என நீங்கள் தவறவிட்ட விஷயங்களை அடைவதற்கான வழி அல்ல குழந்தைப் பெற்றுக்கொள்வது. அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கும். ஆகையால் இதுபோன்ற செயல்களை மனதில் வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பெறாதீர்கள். நீங்களாக விருப்பப்பட்டு ஒரு குழந்தை பெறும்போது அதற்கு உங்களின் அனைத்துவிதமான அன்பும் கிடைக்கும். நாம் திட்டமிட்டு நடத்துவதைவிட, எதிர்பாராமல் கிடைப்பதில்தான் ஆனந்தம் அதிகம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

    • கடுகு எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது முடி அமைப்பை மேம்படுத்தும்.
    • அதிக உணர்திறன் சருமம் கொண்டவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

    கடுகு எண்ணெயில் முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கடுகு எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும் மாசு, சூரியனின் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் தொற்று, பொடுகு மற்றும் அரிப்புகள் ஏற்படுவதை தடுத்து அதற்கெதிராக போராடுகின்றன. முடிக்கு இவ்வளவு நன்மை பயக்கும் கடுகு எண்ணெயை மற்ற எந்தெந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 

    வெந்தயம் - கடுகு எண்ணெய்

    வெந்தயம் புரதம் மற்றும் நிகோடினிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும். வெந்தயத்தில் உள்ள புரதங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நிகோடினிக் அமிலம் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. வெந்தயத்தை கடுகு எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது அந்த கலவை உச்சந்தலையில் ஊடுருவி, வேர்களுக்கு ஊட்டமளிக்கும்.

    பயன்படுத்தும் முறை: வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து, கடுகு எண்ணெயுடன் கலந்து, இந்த கலவையை உச்சந்தலையில் தடவி, 30-45 நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைக்கு குளிக்கவும்.

    கடுகு எண்ணெய் - வெங்காயச் சாறு

    வெங்காயச் சாறு நீண்ட காலமாக அதன் அதிக சல்பர் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது. சல்பர் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் முடி நுண்குழாய்களை வலுப்படுத்துகிறது. வெங்காயச் சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவுவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் முடிவளர்ச்சியைத் தூண்டி காலப்போக்கில் முடி உதிர்தலைக் குறைக்கிறது. இந்த கலவை உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்கவும், வேர் முதல் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெய்யை லேசாக சூடுப்படுத்தி, அதில் வெங்காய சாற்றை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் ஊற்றி, மெதுவாக மசாஜ் செய்து, 30-40 நிமிடங்கள் விட்டு, ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாம். இது முடி அடர்த்தியை மேம்படுத்துவதோடு, உதிர்தலை குறைக்கும்.

    கடுகு எண்ணெய் - கற்றாழை

    கற்றாழையின் நீரேற்றம் பண்பு தலையின் எரிச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது உச்சந்தலையின் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. முடி நுண்ணறைகளை அவிழ்த்து, முடி மீண்டும் வளரத் தூண்டுகிறது. இந்த கலவை முடியை ஹைட்ரேட்டாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதோடு, முடியின் உடையும் தன்மையை குறைக்கும். அதாவது முடியை வலுப்படுத்தும்.

    பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லை கடுகு எண்ணெயுடன் கலக்கவும். கலவையை உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் விட்டு, பின்னர் முடியை அலசவும். 

    கடுகு எண்ணெய் - கறிவேப்பிலை

    கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கறிவேப்பிலையை கடுகு எண்ணெயோடு சேர்த்து பயன்படுத்தும்போது வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    பயன்படுத்தும் முறை: கடுகு எண்ணெயில் தேவையான அளவு கருவேப்பிலையைப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். பின்னர் இந்த எண்ணெயை எடுத்து ஆறவைத்து வடிகட்டி முடிக்கு மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயால் மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும். 

    கடுகு எண்ணெய் - செம்பருத்தி

    செம்பருத்தி கெரட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், முடி இழைகளை அடர்த்தியாக்கவும், புதிய வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. கடுகு எண்ணெயுடன் செம்பருத்தி இலைகள், பூவை சேர்க்கும்போது சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் உருவாகிறது. இது முடி உதிர்தலைக் குறைப்பது மட்டுமல்லாமல், முடிக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

    பயன்படுத்தும் முறை: செம்பருத்தி இதழ்கள் அல்லது இலைகளை அரைத்து, பேஸ்ட் பதத்திற்கு வந்தபின் கடுகு எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும். 40-45 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து, பின்னர் தலையை அலசலாம். 


    வெந்தயம் முடிக்கு நன்கு ஊட்டமளிக்கும்

    கடுகு எண்ணெய் - கருஞ்சீரகம்

    கருஞ்சீரகத்தின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மயிர்க்கால்களைத் தூண்டுவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இதனை கடுகு எண்ணெயுடன் கலந்து தடவும்போது முடி இழைகள் வலுவடைகின்றன.

    பயன்படுத்தும் முறை: கருப்பு விதைகளை நன்றாகப் பொடியாக அரைத்து, சூடான கடுகு எண்ணெயுடன் கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அலசலாம். இந்த பேக்கை வாரந்தோறும் போடுவது முடி உதிர்தலைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். 

    கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் பால்

    தேங்காய்ப் பாலில் புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உடைவதை தடுக்கிறது. இதனை கடுகு எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும்போது முடியின் வலிமையை அதிகரிக்கிறது. முடி உடைதலை குறைத்து ஒட்டுமொத்த முடி அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த கலவை வறண்ட மற்றும் உடையக்கூடிய கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பயன்படுத்தும் முறை: தேங்காய்ப் பாலை கடுகு எண்ணெயுடன் கலந்து, அந்தக் கலவையை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி, 45 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவவும். தொடர்ந்து தடவுவது முடியை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

    • நள்ளிரவுக்கு மேல் இயங்குவதற்கு ஏற்றவாறு நம் உடல் வடிவமைக்கப்படவில்லை. தூக்கமின்மை, மூளை வயதாவதை துரிதப்படுத்தும்.
    • நினைவாற்றலை ஒருங்கிணைக்க, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, செல்லுலார் சேதத்தை சரிசெய்ய மனித மனதிற்கு இரவில் ஓய்வு தேவைப்படுகிறது.

    நள்ளிரவுக்குப் பிறகும் விழித்திருப்பது என்பது இளம் தலைமுறையினர் பலருக்கும் வழக்கமாகிவிட்டது. அலுவலகத்திற்கு செல்வது, வீடு திரும்புவது, வீட்டு வேலைகளை முடிப்பது, இன்ஸ்டாகிராமை ஸ்க்ரோலிங் செய்வது அல்லது படம், நிகழ்ச்சி என வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது என நள்ளிரவுக்கு மேல் பலரும் விழித்திருக்கின்றனர். ஆனால் நள்ளிரவுக்கு மேல் இயங்குவதற்கு ஏற்றவாறு நம் உடல் வடிவமைக்கப்படவில்லை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் விழித்துக்கொண்டிருந்தாலும், நமது உடலும், மனமும் அவற்றின் இயல்பான செயல்பாடுகளுக்கு ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க அமைதியாக உள்ளுக்குள் போராடி வருகின்றன.

    இதனால் மனநிலை மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இருதய மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அறிவாற்றல் செயல்பாடுகள், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் முடிவெடுப்பது போன்ற அனைத்தும் இரவு நேரம் விழித்திருக்கும் போது மோசமடைகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பது இயற்கையாகவே உடலையும், மூளையையும் ஓய்வுக்குத் தயார்படுத்தும் சர்க்காடியன் தாளங்கள் சீர்குலைத்து, மனக்கிளர்ச்சி, மோசமான உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் மெதுவான மன செயலாக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும் மூளை செயல்பாடு மற்றும் நடத்தையில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பதால் உடல் மற்றும் மனநலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காண்போம்.

    அதிகரிக்கும் மனச்சுமை

    தூக்க சுழற்சி முதல் ஹார்மோன் உற்பத்திவரை நமது உயிரியலின், கிட்டத்தட்ட ஒவ்வொரு நடைமுறையையும் சர்க்காடியன் தாளங்கள் வழிநடத்துகின்றன. நள்ளிரவுக்கு பின் நாம் விழித்திருக்கும்போது, மூளை நம் செயல்பாடுகளுக்கு ஏற்ப நம் எண்ணங்களை, செயல்களை, இயக்கங்களை ஒழுங்குப்படுத்தாது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் கட்டுப்பாட்டில் மாற்றம் ஏற்படுகிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் மனச்சோர்வு, ஸ்கிசோஃப்ரினியா போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் மனச்சுமையை அதிகரிக்கும். 

    அறிவாற்றல் குறைபாடுகள்

    நள்ளிரவுக்கு பின் விழித்திருப்பது உங்கள் தூக்கத்தை தொடர்ந்து பாதிக்கும். இந்த தொடர்விழிப்பு, அறிவாற்றல் மற்றும் செயலாக்கத்தை கடுமையாக பாதிக்கும். கவனம், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன்கள் போன்றவை பாதிக்கப்படும். இது ஒட்டுமொத்த அன்றாட வாழ்வையும் பாதிக்கும்.  தூக்கமின்மையில் செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 


    உடல் மற்றும் மனதுக்கு ஓய்வு அவசியம்

    உணர்ச்சிரீதியான பாதிப்புகள்

    நள்ளிரவுக்குப்பின்பும் விழித்திருப்பதால், அறிவாற்றல் பாதிப்பை தாண்டி உணர்ச்சிரீதியான பல விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இரவில் மூளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தவறும்போது எரிச்சல், பதட்டம், மனச்சோர்வு ஏற்படும். மேலும் நள்ளிரவுக்குப் பிறகு மனித மனம் மெதுவாக இயங்குவது மட்டுமல்லாமல் உணர்ச்சி ரீதியாகவும் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். இதனால் ஒட்டுமொத்த மனநலனும் பாதிப்படையும்.

    மூளை பாதிப்பு

    நாள்பட்ட தூக்கமின்மை, அறிவாற்றல் வீழ்ச்சி, டிமென்ஷியா போன்ற மறதி நோய்களுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை மற்றும் தவறான தூக்க முறைகள் மூளை வயதாவதை துரிதப்படுத்துகின்றன. மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, சீரான தூக்க முறைகளைப் பராமரிப்பதும், இரவு நேர செயல்பாடுகளைத் தவிர்ப்பதும் மிக முக்கியம். நினைவாற்றலை ஒருங்கிணைக்க, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த மற்றும் செல்லுலார் சேதத்தை சரிசெய்ய மனித மனதிற்கு இரவில் ஓய்வு அவிசயம். 

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்
    • பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள்.

    பலரும் சருமம் பளபளப்பாக, மென்மையாக, ஈரப்பதத்துடன் இருக்க பாடிலோஷன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பல விளைவுகளையும் கொண்டுள்ளன என்பதை அறிய மறுக்கின்றனர். பாடி லோஷன்களுக்கு பதில் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை பயக்கும். அதனால்தான் நமது பாட்டி எல்லாம் எண்ணெய் குளியல் எடுக்க சொல்வர். எண்ணெய் குளியல், எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பாடி லோஷன்களுக்கு மாறாக உங்களுக்கு முழுமையான உடல் பளபளப்பை தரும் 5 எண்ணெய் வகைகளை பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்

    நெடுங்காலமாகவே தேங்காய் எண்ணெய்யை அழகு, ஆரோக்கியம், ஆகாரம் என பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதன் நற்குணங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. தேங்காய் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி மென்மையையும், பளபளப்பையும் இயற்கையாகவே தருகிறது. சிறந்த பலன்கிடைக்க தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தலாம். வெயிலில் சென்றுவந்த பிறகு அல்லது சருமம் வறட்சியாக, சோர்வாக உணரும்போது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    நல்லெண்ணெய்

    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மந்தமான, வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும். பொதுவாக பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள். இடுப்பு எலும்புகள் பலம் அடையும் என்று. அவ்வளவு நன்மைகள் கொண்டது நல்லெண்ணெய். நல்லெண்ணைய்யை லேசாக சூடாக்கி ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்டும். 

    பாதாம் எண்ணெய்

    எண்ணெய் பசையை அதிகம் விரும்பாதவர்கள், எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல கனமாக இருக்காது. இது மென்மையாகவும், சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மையும் கொண்டது, இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவுமுழுவதும் அப்படியே விடலாம். பழுப்பு நிற கோடுகள், கருமையான திட்டுகளை இது நீக்கும். வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். 


    பாதாம் & ஆர்கன் எண்ணெயில் அதிகம் ஒட்டும்தன்மை இருக்காது

    ஆர்கன் எண்ணெய்

    ஆர்கன் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய்தான் ஆர்கன் எண்ணெய். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுத்தன்மையை வெறுப்பவர்களுக்கு இதுவும் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை எண்ணெய் பசையின்றி பளபளப்பாக்குகின்றன. இதனை குளித்தபிறகு இரண்டு, மூன்று சொட்டுகள் முகத்தில் தடவினால் போதும். எண்ணெய் பசை இருப்பதுபோல் முகத்தில் தெரியாது. இது நல்ல வாசனை கொடுப்பதோடு மென்மையான, பளபளப்பான தன்மையை சருமத்திற்கு அளிக்கிறது.  

    கடுகு எண்ணெய்

    கடுகு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மசாஜ் செய்ய, குறிப்பாக குளிர்காலத்தில், உடலை சூடாகவும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க, இது பல காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், உங்கள் சருமம் வலுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.  இதன் வாசனை பிடிக்காதவர்கள் ஜாஸ்மீன் அல்லது லாவெண்டர் எண்ணெய்யை இரண்டு, மூன்று சொட்டுகள் சேர்த்து பயன்படுத்துங்கள். 

    • மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும்...
    • சாலையில் செல்லும் வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்!

    மன சோர்வு அல்லது கவலை என்பது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடியவை. இந்த மன அழுத்தம் நாளடைவில் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மனசோர்வு மற்றும் கவலையிருந்து வெளியே வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்ப்போம். 

    கவலை தரும் விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது

    நாம் சாலையில் சென்றுக் கொண்டிருக்குமாறு கற்பனை செய்துகொள்வோம். நமக்கு இணையாக, நம் பின்னால், நம் முன்னால் ஏராளமான வாகனங்கள் செல்லும். அவற்றை நாம் கவனிக்கமாட்டோம். சில வாகனங்கள் அதிக சத்தத்துடனும், வேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பானை அடித்துக்கொண்டும் செல்லும். உடனே அந்த வாகனத்தின்மீது நம் கவனம்செல்லும். அந்த வாகனம் இடையூறாக இருந்ததால் நாம் அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த வாகனங்களை போலத்தான் நம் எண்ண ஓட்டமும்.

    சில எண்ணங்கள் அமைதியாக, கவனிக்கப்படாமல் கடந்து செல்கின்றன. ஆனால் ஒருசிலவை சத்தமாகவும், இடையூறாகவும் இருக்கும். இவை பெரும்பாலும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதனால் நாம் கவலையை உணர்கிறோம். இந்த கவலையை எண்ணி எண்ணி மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். நமக்கு கவலையளிக்கும் விஷயங்களோ, செயல்களோ, எண்ணங்களோ மனதில் எழும்போது, அல்லது அந்த விஷயங்கள் மனதில் நுழையும்போது சாலையில் சென்ற சத்தமான கார்போல, அதற்கு கவனம் செலுத்தாமல் கடந்து செல்ல வேண்டும். ஒரு துன்பம் தரும் செயல் நடந்துவிட்டால் அதை பற்றிக்கொள்ளாமல், அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் அல்லது அதில் அதிக கவனம் செலுத்தாமல், அதை கடந்து செல்லப் பழகுங்கள். இது கவலை அல்லது சோகத்தில் மூழ்காமல் இருக்க உதவும்.


    சம்பவங்களை கடந்து செல்லப் பழகுங்கள்

    நாட்குறிப்பு எழுதுங்கள்...

    தாங்கமுடியாத அல்லது வெளியே சொல்லமுடியாத அளவு துயரம் என்னை ஆட்கொண்டிருக்கிறது. யாரிடமாவது பேசினால் உடைந்து அழுதுவிடுவேன் என்று நினைத்தால், கண்டிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசி உடைந்து அழுங்கள். அப்படி நெருக்கமானவர்களிடமும் பேசமுடியவில்லை, மனது மிகவும் பாரமாக இருக்கிறது என்றால் தனியாக வெளியே செல்லுங்கள். பிடித்த உணவை வாங்கி சாப்பிடுங்கள். பிடித்த சினிமாவை சென்று பாருங்கள். அப்படி இதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், டைரி எழுதுங்கள். நீங்கள் என்ன சொல்ல நினைத்தீர்களோ, அல்லது உங்கள் மனதில் எது ஆழமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி எழுதுங்கள். எழுதிவிட்டு, அதை படித்துவிட்டு, கிழித்தெரிந்து விடுங்கள். இது கண்டிப்பாக ஒரு ஆறுதலை தரும். 

    தியானம்

    வாழ்க்கை எல்லா நேரமும் ஒரேமாதிரி செல்லாது. ஒரு கட்டத்தில் அனைவரும் ஒரு மோசமான பகுதியை கடந்துசெல்வர். கடந்துதான் ஆகவேண்டும். ஆனால் அந்தக் கட்டம் நிறைய அனுபவங்களையும், பாடங்களையும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும். அவை அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையானவையே. இப்படி ஒரு கட்டத்தில் மனிதர்கள் இருக்கும்போது யாரிடமும் பேசத்தோன்றாது. எந்த எண்ணமும் இருக்காது. மனதில் எந்த சிந்தனையும் ஓடாவிட்டாலும், ஒரு பிடிமானம் இல்லாத, விருப்பமில்லாத, வாழ்க்கையின் போக்கில் சென்றுக்கொண்டிருப்போம். இந்தநிலையில் நாம் உணரவேண்டியது மனம் ஒருநிலையில் இல்லை என்பதுதான். மனம் அதன் போக்கில் போனால் உடல்நிலை மோசமாகிவிடும். இதிலிருந்து வெளியேவர மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். எண்ண ஓட்டங்களை நிறுத்தவேண்டும். அதாவது சோகம் தரும் அல்லது வெற்றிடமாக தோன்ற வைக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் உதவும். தியானத்தில் நீங்கள் விரும்பும் அளவுக்கு நேரத்தைச் செலவிடுங்கள். இது கவலையிலிருந்து வெளிப்படவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும்.

    • மழைக்காலங்களில் ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு நிச்சயம் விடுமுறை கொடுங்கள்.
    • மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.

    மாற்றம் தரும் மழைக்காலம் நகரமெங்கும் மென்மையாகப் படர்ந்து, பூமியைத் தழுவும் இந்த இனிய சூழலில், அலுவலகம் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளை சற்று மெருகூட்டுவது அவசியம். இது அச்சப்பட வேண்டிய செய்தி அல்ல, மாறாக, அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அறைகூவல் ஆகும்! நம்முடைய நவீனத் தோழிகளுக்காக, மழையை எதிர்கொள்ளும் சில தனித்துவமான, புத்திசாலித்தனமான பாதுகாப்பு மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு செய்தி கட்டுரையாக மட்டும் கருதாமல், உங்கள் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பகுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

    அடிப்படைத் தேவைகள்

    முதலில், காலணிகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு இந்த சீசனில் நிச்சயம் விடுமுறை கொடுங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை என்னவென்றால், வழுக்காத ரப்பர் அல்லது பிளாஸ்டிக் அடிப்பாகம் கொண்ட, நீர்ப்புகாத காலணிகளைத் தேர்ந்தெடுப்பது தான். சாலையில் தேங்கும் சேறு, சகதி ஆகியவற்றில் தடுமாறாமல், உங்கள் பாதங்களுக்கு அசைக்க முடியாத பிடியைக் கொடுக்கும் இந்தக் காலணிகள், உங்களைப் பாதுகாப்பாக நிலத்தில் நிலைநிறுத்த உதவும். இது நாகரிகம் குறைவானது என்று நினைக்க வேண்டாம்; இது விவேகத்தின் மிக முக்கியமான அடையாளம்.

    அடுத்து, உங்கள் குடை ஒரு பாதுகாப்பு சாதனமாகவும் செயல்பட வேண்டும். மழையில் குடை என்பது வெறும் நனைவதில் இருந்து உங்களைக் காக்கும் சாதனம் மட்டுமல்ல; அது உங்கள் பாதுகாப்புக்கான வெளிச்சமாகவும் இருக்க முடியும். அடர் நீலம், நியான் பச்சை, ஆரஞ்சு போன்ற கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள். மழையின் போதும், மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நேரங்களிலும், வாகன ஓட்டிகள் உங்களை வெகு சுலபமாக கவனிக்க இந்த வண்ணங்கள் உதவுகின்றன. உங்கள் குடை, நீங்கள் பாதுகாப்பாகப் பயணிக்கிறீர்கள் என்பதைப் பறைசாற்றும் ஒரு பிரகாசமான ரேடார் சிக்னலாக இருக்கட்டும்.

    பாதுகாப்பே பிரதானம்

    அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் கைப்பைக்குள் பல அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த மழைக்காலத்தில் உங்கள் பையை ஒரு 'நடமாடும் பாதுகாப்பு மையம்' போல மாற்றுங்கள். உங்கள் அவசரப் பையினுள் கைபேசி, அதன் பவர் பேங்க் இவற்றை மழையிலிருந்து எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவர் மற்றும் சிறிய அளவிலான ஆனால் கூர்மையான பாதுகாப்பு பொருள் ஆகியவற்றை உடனே கைக்கெட்டும் தூரத்தில் வையுங்கள். இவை மற்ற பொருட்களுக்கு அடியில் புதைந்திருக்காமல், அவசர காலத்தில் மின்னல் வேகத்தில் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். காரணம் இந்த மழைக்காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில விஷமிகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.


    கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள்

    அதேபோல் நீங்கள் வெளியே புறப்பட்டவுடன் அல்லது பயணத்தின் கடினமான பகுதி தொடங்கும் முன், உங்கள் மொபைலில் உள்ள 'லைவ் லொகேஷன்' வசதியைத் ஆன் செய்து, உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் ஒரு நெருங்கிய நண்பருக்கு உடனடியாகப் பகிருங்கள். நீங்கள் பத்திரமாக வீடு சென்றடையும் வரை, உங்கள் இருப்பிடத்தை யாரோ ஒருவர் கவனித்து வருகிறார் என்ற உணர்வே உங்களுக்குப் பெரும் பலத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

    கவனம் மிக அவசியம்

    மழைக்காலத்தில் சாலையில் தேங்கியுள்ள நீரின் ஆழம் தெரியாது. ஆகவே, பார்க்க முடியாத இடத்தில் ஒருபோதும் கால் வைக்காதீர்கள். உங்கள் குடையை ஒரு 'ஊன்றுகோலாக' பயன்படுத்தி, தண்ணீரில் மெதுவாக ஊன்றிப் பார்த்து, அதன் அடியில் பள்ளங்கள், குழிகள் அல்லது திறந்திருக்கும் பாதாளச் சாக்கடைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சிறு முயற்சி உங்களைப் பெரிய விபத்துகளில் இருந்து நிச்சயம் காக்கும். மேலும், மின்சாரக் கம்பிகள் அருகில் தேங்கியுள்ள நீர், கண்ணுக்குத் தெரியாத மின்சாரக் கடத்தியாக இருக்கலாம்; அதைத் துளியும் அண்டாமல் விலகிச் செல்லுங்கள்.

    கடைசியாக, ஆரோக்கியமே உங்கள் கவசம். மழைக்காலம் தொற்றுநோய்கள் பெருகும் நேரம் என்பதால், வெளியில் கிடைக்கும் அசுத்தமான தண்ணீரை நம்பி இருக்காமல், எப்போதும் வீட்டிலேயே தயாரித்த வெண்ணீர் அல்லது மூலிகை தேநீர் நிரப்பப்பட்ட தெர்மோஸ் குவளையை எடுத்துச் செல்லுங்கள். இது உங்களை வெப்பமாக வைத்திருக்க உதவுவதுடன், பிற இடங்களில் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான தண்ணீரைத் தவிர்க்க ஒரு நல்ல காரணமாகவும் அமையும். உங்கள் உடலின் ஆரோக்கியமே உங்கள் ஆகப் பெரிய சொத்து. இந்த எளிய, ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, மழையின் அழகை விவேகத்துடன் கொண்டாடுங்கள்!

    • சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது திடீரென்று உடலின் வெப்பநிலை மாறும்.
    • உடலில் சக்தி குறையாமல் பார்த்துக்கொண்டால்தான், காய்ச்சல் விரைவில் குணமாகும்.

    காய்ச்சல் ஏற்படும்போது உடலில் சக்தி குறைந்திருக்கும். இந்த நிலையில் குளிக்கும்போது இன்னும் கொஞ்சம் சக்தி குறைந்து விடும். மேலும், சூடான அல்லது அதிகம் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது திடீரென்று உடலின் வெப்பநிலை மாறும். இதனால், உடல் நிலை சீர்கெடக்கூடும். உடலில் சக்தி குறையாமல் பார்த்துக்கொண்டால்தான், காய்ச்சல் விரைவில் குணமாகும்.

    காய்ச்சலின்போது அதிக சூடும் அல்லாத, குளிர்ந்த நிலையிலும் இல்லாத வெதுவெதுப்பான நீரில் வேண்டுமானால் குளிக்கலாம். இல்லாவிட்டால் தண்ணீரில் நனைத்த துணியால் உடலை சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.

    • பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர்.
    • பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும்.

    கடல்பாசிகளை போல, குழந்தைகள் தங்கள் குடும்பத்தில், தங்களை சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே உள்வாங்க தொடங்குகின்றனர். குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறிந்த பின் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் தாய், தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் முன்மாதிரியாக இருக்கின்றனர். அதனால் குழந்தையின் சிறுவயதின்போது பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் உற்றுநோக்குவர். இந்த ஆரம்பகால அவதானிப்புகள் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களின் நடத்தைகள்தான் குழந்தைகளின் ஆளுமை, மதிப்புகள், உறவுகளை கட்டமைக்கும். பெற்றோர்களிடம் கவனிப்பதை சில குழந்தைகள் வெளிகாட்டாவிட்டாலும், அந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அவர்கள் ஆழ்மனதை பாதிக்கும். அதனால் குழந்தைகள் முன்பு பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும். பெற்றோர்களிடம் குழந்தைகள் உள்வாங்கும், சில விஷயங்கள் குறித்து பார்ப்போம். 

    பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள்?

    பெற்றோர்களின் அனைத்து நடைமுறைகளையும், செயல்பாடுகளையும், நம்பிக்கைகளையும் குழந்தைகள் கவனிப்பர். தங்கள் தாய், தந்தை ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் எப்படி அழைக்கிறீர்கள், ஒரு பிரச்சனையை இணைந்து எப்படி கையாளுகிறீர்கள், இருவருக்கிடையே பாசம், அன்பு, கோபம் போன்ற உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நன்கு கவனிப்பார்கள். இது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள் முன்பு சண்டை போடாதீர்கள். பெற்றோரின் சண்டைகள் குறித்து அவர்களிடத்தில் கூறாவிட்டாலும், தாத்தா, பாட்டி அல்லது அவர்கள் பேசுபவர்களிடத்தில், இன்னைக்கு எங்க அம்மாவும், அப்பாவும் சண்ட போட்டாங்க தெரியுமா? இன்னைக்கு எங்க வீட்ல பெரிய சண்ட? என தங்களை சுற்றி இருப்பவர்களிடம் வெளிப்படுத்துவர். அவர்கள் வந்து உங்களிடத்தில் கேட்கும்போதுதான் நீங்கள் குழந்தை முன்பு சண்டை போட்டதை உணர்வீர்கள். அதனால் எப்போதும் கவனமாக இருங்கள். 

    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

    குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சுய பராமரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். அதாவது உங்களுடைய பழக்கவழக்கங்கள், சுயமரியாதை, தனிப்பட்ட உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? ஒரு பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறீர்கள்? உங்களுடைய நேர்மை போன்றவற்றையும் உற்றுநோக்குவார்கள். 


    குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதை தவிர்க்கவேண்டும்

    மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள்?

    பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் தெரியாதவர்களிடம் எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனிப்பர். அதிலிருந்துதான் அவர்களும் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்தவேண்டும் என்ற மரியாதையை தெரிந்துகொள்கின்றனர்.

    நிதி

    பெற்றோர் பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள், நிதிப் பொறுப்பு, குடும்பத்தின் செலவு மற்றும் சேமிப்பு போன்றவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். பெற்றோரின் சேமிப்பு திறன் மற்றும் செலவு செய்யும் பண்புகள் அப்படியே அவர்களது குழந்தைக்கு வரலாம்.  

    விலங்குகளை எப்படி நடத்துகிறார்கள்?

    தங்கள் பெற்றோர் விலங்குகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இதன்மூலம் இரக்கம், பொறுப்பு மற்றும் அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்ற குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த அவதானிப்புகள் ஒரு குழந்தையின் பச்சாதாபம், கருணை மற்றும் நெறிமுறை மதிப்புகளை வளர்க்கும்.

    குழந்தைகளை எப்படி நடத்துகிறீர்கள்?

    தங்களிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதுதான் குழந்தைகளை அதிகம் சிந்திக்க வைக்கும். வேறு ஏதேனும் பிரச்சனைகளால் இருக்கும் மன அழுத்தம் அல்லது மற்றவர்களிடம் இருக்கும் கோபத்தை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். இதனால் நீங்கள் வெறுப்பை உமிழ்வதாக அவர்களுக்கு எண்ணத் தோன்றும். நம் மீது பாசம் இல்லையோ என எண்ணுவார்கள். அதனால் முடிந்த அளவு தனிப்பட்ட பிரச்சனைகளை குழந்தைகளிடத்தில் காட்டாதீர்கள். அதுபோல குழந்தைகளிடத்தில் அதிகம் கோபமாக நடந்துகொள்ளாதீர்கள். இது உணர்ச்சிரீதியாக குழந்தையை அதிகம் பாதிக்கும். எப்போதும் குழந்தையோடு இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும். 

    • ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளலாம்.
    • ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள்.

    ரோஸ் வாட்டர் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்திதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அழகியலுக்கு அப்பாற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. முடி பராமரிப்பிற்கும் ரோஸ் வாட்டர் உதவுகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடியின் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. ரோஜாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள், ஆரோக்கியமான உச்சந்தலையை ஆதரிக்கவும், எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. அந்தவகையில் ரோஸ் வாட்டர், தலைமுடிக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதனை முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.

    ஈரப்பதம்

    ரோஸ் வாட்டர் முடியின் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. உச்சந்தலையின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. ரோஸ் வாட்டரில் உள்ள சர்க்கரைகள் முடியின் தண்டில் ஈரப்பதத்தை ஈர்க்கவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. முடி இழைகளை மென்மையாக்குகிறது மற்றும் முடி உதிர்தலை குறைக்கிறது. முடிக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மையை சேர்க்கிறது.

    பொடுகு தடுப்பு

    வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அரிப்புகளைக் குறைக்கிறது. ரோஸ் வாட்டரின் லேசான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் எண்ணெய் பசையை சீராக்க உதவுகின்றன. பொடுகுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான படிவைத் தடுக்கின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு எரிச்சல், சிவத்தல், மற்றும் அரிப்பு ஆகியவற்றை தணித்து, உணர்திறன் வாய்ந்த உச்சந்தலைகளுக்கு நன்மை பயக்கிறது.  

    நறுமணம்

    ரோஸ் வாட்டர் இயற்கையான, மைல்டான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது கூந்தலுக்கு நன்மை பயக்குவதோடு, அதன் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும். முடி நறுமணத்தோடு இருப்பது, மகிழ்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த பங்களிக்கிறது.  


    முகத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது ரோஸ் வாட்டர் 

    முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்

    ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள். இது முடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவும்.

    ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் ரோஸ் வாட்டரைச் சேர்த்தல்

    நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சில டீஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முடிக்கு பயன்படுத்துங்கள். இது முடிக்கு நல்ல ஈரப்பதம் அளிக்கும். அதுபோல ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளுங்கள். இது சின்ன சின்ன முடிகள் அதிகம் பறக்காமல் இருக்கவும், முடிக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

    உச்சந்தலையில் தடவுதல்

    பருத்தி துணியை பயன்படுத்தி ரோஸ் வாட்டரை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இது பொடுகு, அரிப்பு, எரிச்சலை குறைக்கும். மசாஜ் போலவும் கொடுக்கலாம். 

    முன்னெச்சரிக்கைகள்

    ரோஸ் வாட்டர் நன்மை பயக்கக்கூடியது என்றாலும், முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறிய அளவை எடுத்து நமது தலையின் உணர்திறனை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ரோஸ் வாட்டரை உச்சந்தலையில் அதிகம் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.  

    • 18 வயது ஆனாலும் கூட பெண்கள், பாலியல் ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் பெரியப்பா செய்தியாளர்களின் முன்பு அழுது, புலம்பும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் தங்கள் வீட்டுப் பிள்ளையை, அதாவது அவரது தம்பிப் பெண்ணை, இளைஞர் ஒருவர் காதலிப்பாதாக சொல்லி, ஆசைவார்த்தைக் கூறி 18 வயது நிரம்பிய மறுநாளே அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போதுவரை தங்களிடம் தங்களது மகளை காண்பிக்கவில்லை எனவும், மேலும் அந்த இளைஞர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கதறி புலம்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உறவினர் ஒருவர், பணவசதி இல்லாததால் பெண்ணின் வீட்டார்தான் மிரட்டியதாக தெரிவித்தார். இச்செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    ஒரு பக்கத்தினர் பெண்வீட்டார் பணவசதி இல்லாததால் அப்பையனை ஏற்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கத்தினர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி, பெற்றோரின் சொத்தை பறிப்பதே பல இளைஞர்களின் வேலையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மை நிலவரம் என்ன? இதுபோன்று இளைஞர்கள், இளம்பெண்கள் செய்வது முறையா? அவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து ஒரு சிறுதொகுப்பை காண்போம்.  

    இளம்பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்?

    மேற்கூறிய நிகழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 18 வயதாகி ஒரு வாரம் கூட அப்பெண்ணுக்கு ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. ஒரு திருமண உறவிற்குள் செல்லும்போது அவளின் படிப்பு கவனம் சிதறி, எண்ண ஓட்டம் மாறும். மேலும் குழந்தை எண்ணத்தை இருவரும் கையிலெடுத்தால், அதனை கையாளும் மனப்பக்குவம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா? என்பதும் இங்கு கேள்விக்குறிதான். இந்திய திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தாலும், பல பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் இன்னும் பாலியல்ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர். மேலும் உடலளவிலும் அவர்கள் ஒரு பிரசவத்தை தாங்கும் திடத்துடனும் இருக்கிறார்களா? என்பதும் கேள்விக்குறியே. இதற்காகத்தான் இப்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றவேண்டும் என்ற விவாதம் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் அந்தக்காலத்தில் 14 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள், குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள் என அறிவாளித்தனமாக பேசுவார்கள். அப்போது இருந்த நடைமுறையும், அவர்கள் உணவுமுறையும் வேறுப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆகச்சிறந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

    ஈர்ப்பா? காதலா?

    எது நடந்தாலும் 2கே கிட்ஸா இருப்பா என்று 2000த்திற்கு பின் பிறந்தவர்களை பெரும்பாலானோர் ஒரு கேலியுடன் பேசுவார்கள். காரணம் அவர்களின் காதல் விவகாரங்கள், அவர்களின் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள். இது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இப்போதைய தலைமுறையினர் பலரும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்பை வேறுபடுத்தி அறியமுடியாமல் ஒரு உறவுக்குள் செல்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த புரிதலும் இல்லாமல், ஒரு உறவுக்குள் செல்லும்போது அதில் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், மோதல் என வன்முறை வெடிக்கிறது. பல விவகாரங்கள் கொலைகளில் முடிகிறது. ஆனால் இவை எல்லாம் 2கே கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தாது. பலருக்கும் பொருந்தும். எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

    புரிதல் ஒருபக்கம் இல்லையென்றாலும், இதுபோன்ற தவறுகள் நடக்க எளிதாக துணைநிற்கின்றன சமூக வலைதளங்கள். யாரென்றே தெரியாதவர்களிடம் எளிதில் பழகி, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? உண்மையில் தங்களை விரும்புகிறார்களா? என்று தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர் பல இளைஞர்களும், இளம்பெண்களும். அவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி உண்மையில் நீங்கள் காதல்தான் செய்கின்றீர்கள் என்றால் இருவரும் இணைந்து ஒன்றாக முன்னேற பாருங்கள். உங்கள் படிப்பை முதலில் முடித்துவிட்டு, ஒரு நல்ல வேலைக்கு சென்று பின்னர் வீட்டில் கூறுங்கள். அப்போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காத்திருங்கள். காத்திருப்பதில்தான் உண்மையான காதல் உள்ளது. உங்களை ஒருவர் உண்மையில் காதலித்தால் உங்களுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.

    சிலவீட்டில் என்ன செய்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தச் சூழலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை பெண்ணின் வீட்டில் உங்கள் காதல் தெரிந்து, அவர்களை கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு தயார் என்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உங்களின் படிப்பு, அதனால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையில் காதலிப்பவர்கள் உங்களின் முன்னேற்றை கருத்தில்கொண்டே ஒவ்வொரும் நடைமுறையையும் மேற்கொள்வர். அப்படி படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டாலும் படிப்பைத்தொடருங்கள். அதைவிடுத்து படிப்பை நிறுத்தி ஒரு திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    பெற்றோர் மனநிலை...

    பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போதே அவர்கள் ஒரு உறவில் இருந்துள்ளனர் என்பதை அறிகின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க தவறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் பெற்றோர்கள் பாலியல்ரீதியான சில கருத்துகளை பிள்ளைகளிடம் பேசுவது தவறு இல்லை. இந்தியாவில் உள்ள பெற்றோர்கள்தான் இன்னும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளிடம் காதல்ரீதியான வார்த்தைகளை பேசினால் கூட அது அபச்சாரம். பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியும். ஒருபுறம் நம் பெற்றோர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அந்தளவு புரிதல் இல்லை என்று கூறினாலும், அவர்கள் வளர்ந்த விதமும், சூழலும் எப்படி இருந்தது என்பது நமக்கும் தெரியும். அதனால் அவர்களை சொல்லியும் பலன் இல்லை.


    ஈரப்பால் வரும் உணர்ச்சிகளுக்கு காதல் என பெயர் சூட்டாதீர்

    மற்றொன்று இதில் பிள்ளைகளைவிட, பெற்றோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தன் மகள் ஒரு நல்லப்பையனை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஏமாற்றுபவனாக இருந்தால்? அதன்பின் நடைபெறும் விளைவுகள்? அதற்கு யார் பொறுப்பேற்பது? தங்கள் பெண் தேர்ந்தெடுத்த ஒரு ஆண்மகன் சரியானவாக இல்லாவிட்டால், அந்தப் பெண்ணை தாண்டி ஒரு குடும்பமே அதில் வீழ்கிறது. இது எல்லாக் குடும்பத்தினருக்கும் பொருந்துமா எனத் தெரியாது. ஆனால் உண்மையில் தனது பெண்பிள்ளைகளை அன்பாக வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அது வலுவாக பாதிக்கும். பாதை எப்படி இருந்தாலும் பிடிப்புதான் முக்கியம்.

    அவள் எப்படி திருமணம் செய்துகொண்டால் என்பதை தாண்டி, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பல பெண்கள் தாங்கள் தவறான முடிவு எடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். பலரின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? அந்தப் பெண் இறந்துவிட்டால், அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவன், வேறொரு பெண்ணைத்தேடி சென்றுவிடுவான். ஆனால் பிள்ளையை இழந்த பெற்றோரின் கதி? இறுதியில் பெண்களோ, ஆண்களோ ஒரு காதல் உறவுக்குள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் துணை, உங்களது கல்வி, வேலை, உங்களது துன்பம், இன்பம் என அனைத்திலும் துணை நிற்பார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரப்பால் வரும் உணர்ச்சிக்குள் விழுந்து காதல் என பெயர்வைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள். 

    • பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்!
    • ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் பயன்பாட்டை தவிர்க்கலாம்.

    சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அனைவருமே அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக பலரும் கடையில் விற்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வீட்டு வைத்தியங்களயே கையாளுகின்றனர். அதாவது இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தங்கள் சருமத்தை பராமரித்து வருகின்றனர். அதில் தேனும் அடங்கும். சிலர் முகத்திற்கு தேனை பயன்படுத்துவர். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யாரெல்லாம் பயன்படுத்தவேண்டும் போன்ற தகவல்களை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அந்தவகையில் தேனை எவ்வாறு பயன்படுத்தலாம்? அது சருமத்திற்கு அளிக்கும் பலன்கள் என்ன? பார்க்கலாம்...

    தோலழற்சிக்கு எதிராக செயல்படும் தேன்...

    வறட்சி, அரிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட தோல் நோயான அடோபிக் டெர்மடிடிஸ், சொரியாசிஸ், நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (தோலில் பரவும் பாக்டீரியா தொற்று), புண்கள் போன்ற அனைத்துவிதமான தோல்நோய்களுக்கும் பச்சை தேன் பலனளிக்கும். தேனில் சருமத்திற்கு நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. பைட்டோ கெமிக்கல்களுக்கு ஆக்ஸிஜனேற்ற (antioxidant) மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை தோலழற்சி போன்ற தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்தல் போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக மனுகா தேன் (மனுகா மரத்தின் பூக்களில் இருந்து தேனீக்களால் எடுக்கப்படுவது) முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், ஹைப்பர் பிக்மென்டேஷன், வறட்சி போன்றவற்றை தடுத்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன.  தேன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கவும், முகத்தை பிரகாசமாக்கவும் உதவும். தேனில் உள்ள உரித்தல் பண்புகள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாகக் காட்ட உதவும். அதுபோல முகத்தில் உள்ள வடுக்களை மறையச்செய்யும்.


    பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம்

    தேனை எப்படி பயன்படுத்தலாம்?

    பச்சைத்தேனை அப்படியே முகத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் அது கடைகளில் வாங்கியதாக இருக்கக்கூடாது. அதாவது சில தேன்கள் வெறும் சர்க்கரைக்கரைசலாக உள்ளன. இயற்கையான தேன்தான் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லப்பலனைத் தரும். அப்படிப்பட்ட பச்சைத்தேனை அப்படியே முகத்தில் தடவலாம். அதன் பிசுபிசுத்தன்மை பிடிக்காதவர்கள், தேனை தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து அதன் பிசுபிசுப்புத்தன்மையை குறைத்து முகத்தில் பயன்படுத்தலாம். சில நிமிடங்கள் முகத்தில் தேனைவிட்டு, பின்னர் முகத்தை கழுவலாம். தேனை மற்ற பொருட்கள் உடனும் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி, கற்றாழை, இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றுடன் தேனை சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். மூன்று பங்கு தேன் மற்றும் ஒரு பங்கு தூய இலவங்கப்பட்டை தூளை ஒன்றாக கலக்கவேண்டும். இந்த கலவையை கொஞ்சம் சூடாக்கி, முகத்தில் தடவி 8 முதல் 10 நிமிடங்கள் உலரவிடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகப்பருவை நீக்க உதவி நல்ல பலனை அளிக்கும். ஆனால் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் தேன் பயன்படுத்துவதையும் தவிர்க்கலாம். மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பயன்படுத்தலாம். அதுபோல தேனை முகத்தில் தடவிக்கொண்டே தூங்ககூடாது. காரணம் முகத்தில் இருக்கும் தேன் தூசி மற்றும் பிற குப்பைகளை ஈர்க்கும். இது செயலில் உள்ள முகப்பருவை மோசமாக்கும். தூசிகள் தோல் அரிப்புக்கு வழிவகுக்கும். இதை தொடர்ந்து செய்வது சரும பிரச்சனைகளை உண்டாக்கும். 

    ×